சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 43 வது தேவாரத்தலம் திருவியலூர். திருவிசநல்லூர் திருவிசலூர் என்று வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் யோகானந்தீஸ்வரர். வேறு பெயர்கள் புராதனேஸ்வரர் வில்வாரண்யேசுவரர். இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1 2 மற்றும் 3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. அம்பாள் சாந்தநாயகி சௌந்தரநாயகி. தல மரம் வில்வம். தீர்த்தம் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமான தீர்த்தம் சடாயுதீர்த்தம். கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். இத்தலம் நான்கு யுகம் கண்ட தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர் திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர் துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர் கலியுகத்தில் சிவயோகிநாதர் என்ற பெயர்களில் இறைவன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்கிறார். சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும் இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும் அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது. இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர். ஞானகால பைரவர் அருகில் தட்சிணாமூர்த்தியும் சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும் உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது.
படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப் பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. மரபையும் மீறி பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் அவர்களிடம் கேட்க நீ தூய்மையானவன் என்பதை நிரூபிக்க விரும்பினால் கங்கை நதியை இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும். இதுதான் பரிகாரம் என்று கட்டளை இட்டனர். ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே ஐயாவாளின் கொள்கை. பக்தியில் சிறந்த ஸ்ரீதர ஐயாவாள் இறைவனை உருகி வேண்ட அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி வழிந்து அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில் ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை எழுந்தருளுகிறாள்.
இந்த ஊரில் வாழ்ந்து வந்த சிவனடியார் ஒருவரின் உயிரைப் பறிக்க எமதர்மன் தன் எருமை வாகனத்தின் மீதேறி வந்தான். நந்திதேவர் எமனை எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அதன்பின் சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும் நந்திதேவரையும் வணங்கினார். கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன் பல பெண்களுடன் கூட நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி தேடிய இந்த அரசனுக்கு திருவிசநல்லூரின் பெருமைகள் பற்றி ஒரு மகான் கூறினார். அதன்படி இங்கு வந்த அரசன் காவிரியில் நீராடி இந்தத் தலத்தில் உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது. ஒரு காலத்தில் ஏராளமான பாவம் செய்த ஒருவன் தன் கடைசி காலத்தில் பிரதோஷ தினத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம் அழைப்பது யார் என கேட்க நந்தி திரும்பி பார்த்தது. இத்தலத்தில் நந்தி சிலை திரும்பிப் பார்த்த நிலையிலேயே உள்ளது. நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கொடி மரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.
சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் என்றும் இறைவன் பெயர் திருவிசலூர் தேவ பட்டாகரர் சிவயோகநாதர் எனவும் குறிக்கப்படுகிறது. இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில் விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும் காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன. இராசேந்திரன் காலக் கல்வெட்டில் அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும் அவன் மனைவியான அரசி சுவாமிக்கு தங்க நகைகளும் அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது. ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் மற்றும் திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இவ்வூரில் அவதரித்தவர்கள். அகத்தியர் ஜடாயு வழிபட்டிருக்கிறார்கள். சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார்.









