சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 270 வது தேவாரத்தலம் இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம். புராணபெயர் மகாதுவட்டாபுரம். மூலவர் திருக்கேதீச்வரர். இங்கு இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் கவுரி. தெற்கு நோக்கியபடி அருள்கிறாள். தீர்த்தம் பாலாவி. தலமரம் வன்னிமரம். கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் சூரியன், சம்பந்தர், கேது, சேக்கிழார், நால்வர், சுந்தரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். பின்புறம் பழைய மகாலிங்கம் உள்ளது. இங்கு பூஜை செய்து முடித்த பின்னரே கருவறை தீபாராதனை நடைபெருகிறது. கோவிலுக்கு வரும் அடியவர்களுக்காக ஆலயத்துக்கு வெளிப்புறமாக திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம்,. நாவலர் மடம் என்று பற்பல மடங்கள் அமைந்துள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த கோயிலும் 1600 இல் போர்ச்சுக்கிசியர்களால் அழிக்கப்பட்டது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் ஐந்து திருத்தேர்கள் உள்ளன. அதில் முதல் தேரில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் சிலை வைப்பார்கள். சிவராத்திரி இரவு முழுக்க இங்கு பூஜை நடைபெறும். அன்று காலையில் பாலாவியில் நீராடி விரதத்துடன் நீர் எடுத்து வந்து பக்தர்கள் தம் கையாலேயே பஞ்சாட்சரம் கூறியபடியே அபிஷேகம் செய்யலாம். கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தார். இதனால்தான் திருகேது ஈஸ்வரம் என்று பெயர் பெற்று பின்பு திருக்கேதீஸ்வரமாக மாறியது. சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால் மாதுவட்டா என்ற பெயரும் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால் நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இத்தலம் மகாதீர்த்தம் என அழைக்கப்பட்டுள்ளதைக் கதிர்காமக் கல்வெட்டின் மூலம் அறியலாம். 10, 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது. சுந்தர பாண்டியனும் பல திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அதன்பின்னர் போர்த்துகீசியர் படையெடுப்பில் இக்கோயிலிலிருந்து தூண் மற்றும் பெரிய கற்களை உடைத்து எடுத்து மன்னார் கோட்டையைக் கட்டியதாக வரலாறு. பின்னர் ஆங்கிலேயர் கையில் சிக்கிய இக்கோட்டை வெள்ளத்தில் புயலில் சிதைந்து மண்மேடாகியது. விடிவெள்ளியாக அவதரித்த யாழ்ப்பாணத்து சைவப் பெருவள்ளல் ஆறுமுக நாவலர் கனவில் இந்த திருக்கேதீச்சரத்தில் ஒரு தேன் பொந்து மறைந்துள்ளது அதனைச் சென்றடையுங்கள் என்று இறைவன் சுட்டிக் காட்டினார். உடனே அவர் அங்கு சென்று 1893-ல் கோவில் உள்ள காட்டுப்பகுதி 43 ஏக்கர் நிலப்பரப்பினை வாங்கி கோயிலுக்கு அளித்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
திருக்கேதீச்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்யும் போது மண்ணில் சிதையுண்ட நந்தி, சோமாஸ்கந்தர், கணேசர், பலிபீடம், துவஜஸ்தம்பம், அர்த்த மண்டபம் ஆகியவை வெளிப்பட்டன. இறையருளால் பழைய கருவறை மகாலிங்கமும் மண்ணிலிருந்து வெளிப்பட லிங்கத் திருமேனியை வெளியே எடுக்கையில் சிறிது பழுதுபட்டதால் அவரை மேற்கு பிராகாரத்தில் எழுந்தருளச் செய்து இறைவனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. மீண்டும் திருப்பணிகளுடன் 1910-ல் சிறுகோயில் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சில அகழ்வாராய்ச்சிக்கு பின்னர் இத் திருக்கோயிலில் மீண்டும் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருவறைக்கு காசியிலிருந்து புதிய லிங்கம் தருவிக்கப்பட்டு பிரசிஷ்டை செய்யப்பட்டது. இதன் வரலாறு ராமேஸ்வர புராணத்தில் உள்ளது.
திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை மகா முனிவர்கள் வரலாறு எடுத்துரைக்கின்றது. நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று தக்ஷிண கைலாச மான்மியம் என்ற பண்டைய வரலாற்று நூல் எடுத்துரைக்கின்றது. மிகப் பெரிய புராண நூலான ஸ்கந்த புராண’த்தில் மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும் அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. அப்புராணத்தின்படி முன்னொரு காலத்தில் வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார். அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரம். மற்றொன்று திருக்கோணேஸ்வரம். சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார்.
சோழர்கள் இலங்கையை பலமுறை ஆட்சி செய்துள்ளனர். கி.பி 1028 ல் ரஜேந்திர சோழனால் ஈழம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஆட்சியில் ஊரின் பெயர்களும் ஆலயங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன. திருக்கேதீச்சரம் ஆலயத்தை ராஜராஜேஸ்வரம் என்றும் மாதோட்ட நகரினை ராஜராஜபுரம் என்றும் வழங்கியுள்ளனர். கோவில் பாதுகாப்பிற்க்காக திருக்கேதீச்சரம் ஆலயத்தைச்சுற்றி நன்னீர் கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டது. ரஜேந்திரசோழன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் இவ்வாலயத்தின் ஆண்டுதோறும். ஏழுநாள் விழாவெடுத்து வைகாசிவிசாகத்தன்று தீர்த்தவிழா நடத்தியதாக ரஜேந்திரசோழன் கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான். இலங்கையை ஆட்சிசெய்த 4வது மகிந்தனின் அநுராதபுரக் கல்வெட்டில் கோவில் ஒரு புண்ணியதலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் கூறப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.