சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 274 வது தேவாரத்தலம் திருக்கயிலாயம் என்னும் திருநொடித்தான்மலை. மூலவர் பரமசிவன், கைலாயநாதர், இறைவனின் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார். அம்பாள் பார்வதிதேவி. இறைவி எல்லாத் திருநாமங்களும் உடையவளாக வீற்றிருக்கிறார். தீர்த்தம் மானசரோவரம் ஏரி, சிந்து முதலிய நதிகள். பிரம்மா தன் மனதிலிருந்து இந்த ஏரியை உருவாக்கியதால் மானசரோவர் என்ற பெயர் ஏற்பட்டது. சரோவர் என்றால் குளம் என்று பொருள். இந்த நதி பார்வதியின் அம்சமாக உள்ளது. இங்கிருந்தபடி தேவி சிவனை எப்போதும் பூஜிக்கின்றாள். இங்கு தான் கங்கை, சட்லெஜ், கர்னாலி, பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. நீலநிறக் கடல் போல காட்சியளிக்கும் மானசரோவர் நதி. சக்தி பீடங்களில் அம்பிகையின் வலது முன்கை விழுந்த இடம். அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்து அருளும் தலம் ஆகையால் நொடித்தான்மலை (நொடித்தல் – அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
புராணங்களில் இம்மலை வெள்ளிமலை என்று அழைக்கப்படுகிறது. இதன் தென்முகம் நீலக்கல் போலவும் கிழக்கு முகம் ஸ்படிகம் போல வெண்மையாகவும் மேற்கு முகம் சிவப்புக் கல் போலவும் வடக்குமுகம் தங்கம் போல பொன்நிறமாகவும் உள்ளது. கைலாய மலையின் வடக்குமுகம் வாம தேவமுக தரிசனம் என்றும், ஜடா முடியுடன் சிவ பெருமானின் முக்கண் உருவ தோற்றத்துடன் தெற்கு முகம் அகோர முக தரிசனம் என்றும், மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும், கிழக்கு முக தரிசனம் தத்புருஷ முக தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் புனித தன்மையை ரிக்வேதம், ராமாயணம், உபநிஷதம், சிவபுராணம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. கயிலாய மலையைச் சுற்றி வருவதற்கு பரிக்ரமா என்று பெயர். இதன் சுற்றளவு 52 கி.மீ. ஆகும். மனிதர்களால் கட்டப்பட்ட கோயில் எதுவும் கயிலாயத்தில் இல்லை. கயிலாய மலை இயற்கையாக அமைந்த கோயில். இங்கு நூற்றுக்கணக்கான சிறு மலைகள் கோபுரம் போல உள்ளன. இவை 500 முதல் 1000 அடி உயரம் கொண்டவை. செங்குத்தாக அமைந்திருக்கும் இம்மலைகள் மீது ஏற முடியாது. சதுரம், வட்டம், முக்கோண வடிவில் உள்ளன. சிவன் நித்யவாசம் புரியும் கொலு மண்டபமான கயிலாயத்தில் சிவகணங்கள், தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், தேவதைகள் வீற்றிருப்பார்கள். எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றது.
இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலமாக கைலாயமலை உள்ளது. இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. இந்த மலை தொடர்களில் உற்பத்தியாகும் ராட்சதலம் ஏரியில் ராவணன் தவம் இருந்து வரம் பெற்றதாக ராவண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இம்மலையை இராவணன் பெயர்க்க முயன்ற போது இறைவன் தன் கால் விரலால் அழுத்த மலையின் கீழ் இராவணன் அகப்பட்டுத் தன் தவறை உணர்ந்து இறைவனை வழிபட்டு வரங்களும் மந்திர வாளும் பெற்ற தலம். இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பு இப்போதும் உள்ளது. இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும். 29 மைல் சுற்றளவு உடைய இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன. திருக்கயிலாயம் பனிமலையின் வடபக்கத்தில் மேற்கு திபெத் என்னும் நாட்டில் உள்ளது. பனிமலை முகட்டில் கடல்மட்டத்துக்கு மேல் 22980 அடி உயரத்தில் தென்திசை நோக்கித் திருக்கயிலை அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து கைலாஷ் 305 கி.மீ தூரமும் அல்மோராவிலிருநுது 405 கி.மீ தூரமும் ஆகும்.
காரைக்கால் அம்மையார் இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தை தனது காலால் மிதிக்க கூடாது என்று கைகளால் நடந்து திருக்கைலாயம் அடைந்தார். இவர் வருவதை அறிந்த இறைவன் அம்மையே வருக என்றழைத்து வேண்டும் வரம் கேள் என கூறினார். அதற்கு அம்மையார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறந்தால் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும் என மகிழ்ந்து பாடினார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தனது திருத்தாண்டவத்தை காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.
உழவாரத் தொண்டு செய்த அப்பருக்கு தன்னுடைய இறுதிக் காலத்தில் திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண ஆவல் வந்தததும் வடநாட்டுக்கு கிளம்பினார். சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் எல்லாம் கடந்து வடக்கே காசி வரை வந்து விட்டார். கூட வந்தவர்களால் முடியவில்லை. அப்பரின் மனமோ ஒடியவில்லை. அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார். கால்களால் நடக்க முடியவில்லை. கைகளால் தவழ்ந்தார். அதுவும் முடியவில்லை உடலால் ஊர்ந்தார். அதுவும் முடியவில்லை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கயிலை நாதன் முனிவனாய் அப்பரிடம் வந்தார். மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே. உங்கள் தொண்டே போதும் யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள். கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான் எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என்றார். அப்பர் என்ற அடியேனின் பெயர் என் அப்பனை தவிர உமக்கு எப்படித் தெரியும் என்று அப்பர் கேட்டார். சிக்கிக் கொண்டார் சிவபெருமான். அப்பரே நான் திரிகால ஞானி ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார். இதோ சூலரிஷப முத்திரை இப்போதாவது நான் சொல்வதைக் கேளுங்கள் இதோ இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள். பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திருவையாற்றில் எழுவீர்கள். அது தட்சிண கைலாசம் ஆகும். அங்கு இறைவனை காண்பீர்கள் என்று கூறி மறைந்தார். அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார். உடற் புண்கள் எல்லாம் மறைந்தன. உடல் சிவ மங்களமாய் மின்னியது வட மலையில் மூழ்கியவர் திருவையாற்றில் எழுந்தார். மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் நிற்க மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும் அப்பருக்குத் திருக்கைலாய காட்சி அளித்தனர். அப்பர் பெருமான் கயிலாயத்தையும் அங்கு இறைவன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் கண்டு பாடல்கள் பாடினார்.
அப்பர் பெருமானின் அந்த பாடல்கள் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் என்று அழைக்கப்படுகிறது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார். இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது இறைவனை நினைந்து பதிகம் பாடியவாறே சென்றார். இப்பதிகம் வருண பகவானால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது. சேரமான் பெருமாள் நாயனார் திருக்கையாயத்தை பாடல்கள் பாடியுள்ளார் அந்த பாடல்கள் திருக்கயிலாய ஞானஉலா என அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார், காரைக்கால் அம்மையார் பாடல்கள் பாடியுள்ளனர்.