ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர் அவரை வரவழைத்தார். அபூர்வமான மந்திரம் ஒன்றை அனுமனுக்கு உபதேசித்தார். இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் எல்லாருக்கும் சொல்லி விடாதே பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால் இதை மனதிற்குள் உருவேற்று பக்குவம் இல்லாதவர்களுக்கு இதனை சொல்லாதே என்றார். மறு நாள் ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ராமர் திடுக்கிட்டார். காரணம் அங்கே ராமர் ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை பறை அறிவித்து வீதி வீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் அனுமன். ராமர் அனுமனை வரவழைத்து என்ன காரியம் செய்கிறாய் பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பறை அறிவித்து சொல்கிறாயே என்றார். அமைதியாக ராமரை நமஸ்கரித்து அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன் தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால் அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து தாங்களே விசாரிக்கலாம் என்றார் அனுமன். சிலரை வரவழைத்து அனுமன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? எனக் கேட்டார் ராமர்.
ராமர் கேட்ட கேள்வி ஒன்றுதான் ஆனால் பதில்கள் பலவிதமாக வந்தன. புரியவில்லை என்று சிலர் கூறினார்கள். அனுமன் ஏதோ மனம்போன போக்கில் உளறிக் கொண்டு சென்றார் என்று சிலர் கூறினார்கள். இன்னும் சிலரோ அனுமன் பேசியது புரியாவிட்டாலும் நகைச்சுவையாக இருந்தது என்று சிலர் கூறினார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாக கூற பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும் அனுமன் உபதேசித்தது சாதாரண மந்திரமா பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே என்று சொல்லி மெய் சிலிர்த்தார்கள். மக்களின் பக்குவத்தை ராமர் புரிந்து கொண்டார்.
விதை ஒன்று தான் நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட அவ்வப்போது நீர் உரம் இட்டு பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல குரு உபதேசிக்கும் மந்திரத்தை எல்லாரும் பெற்றுக் கொண்டாலும் அது பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.