ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல் ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால் அது ராமர்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான். சுக துக்கங்களில் சலனமடையாமல் தான் ஆனந்தமாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப் போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.
மக்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ராமராக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும் இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள் சாஸ்திரம் இப்படிச்சொல்கிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகலவேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ அவனே அந்த வேததர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு வாழ்ந்தான். அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு ராமர் என்னும் வேடத்தில் ஸ்ரீமந்நாராயணன் வாழ்ந்தான்.