ராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி பலர் விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராமர் ராவண கும்பகர்ணனை அழித்ததை விட லட்சுமணன் இந்திரஜித்தை அழித்ததே மாபெரும் வீர செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்த்தார்கள். ராமர் ஏதும் அறியாதவர் போல் அகத்தியரிடம் சுவாமி எதை வைத்து அப்படி கூறிகிறீர்கள். ராவணனின் மகன் இந்திரஜித் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். ராமரை பார்த்து சிரித்த அகத்தியர் ராமா அனைத்தும் அறிந்தவன் நீ லட்சுமணனின் பெருமையை என் வாயால் சொல்ல வேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய். நானே அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கூறுகிறேன் என்று பேச ஆரம்பித்தார். ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர் புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்து பிரம்மாவால் இந்திரஜித் என்ற பெயரைப் பெற்றது அனைவருக்கும் தெரியும். நான்முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க வேண்டுமென்று இந்திரஜித்திடம் கோரிக்கை வைத்தார். அதற்கு இந்திரஜித் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான். பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும் அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காமல் இருப்பவனும் அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஆசையோடு ஏறெடுத்து பார்க்காமல் இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறிய வரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். இந்த அறிய வரங்களுக்கு ஏற்ப வாழ்ந்த லட்சுமணன் இந்திரஜித்தை அழித்தான் என்று சொல்லி முடிந்தார்.
ராமர் அகத்தியரிடன் லட்சுமணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அகஸ்தியர் அனைத்தும் அறிந்தவன் நீ ஆனாலும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அறியாதவன் போல் கேள்வி கேட்கிறாய் என்பதை நான் அறிவேன். இதற்கான பதிலை லட்சுமணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லட்சுமணனை அவைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகத்தியர். லட்சுமணன் அவைக்குள் வந்ததும் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கி நின்றான். ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். லட்சுமணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமலும் உறக்கம் இல்லாமலும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறார். எப்படி உன்னால் இதனை செய்ய முடிந்தது. எப்படி இச்செயலை செய்தாய் என்று அனைவரும் அறியும்படி இந்த சபையில் விளக்கமாக சொல் என்று கேட்டுக் கொண்டார்.
ராமரின் கேள்விக்கு லட்சுமணன் பதில் சொல்ல ஆரம்பித்தான். ரிஷிமுக பர்வதத்தில் சீதையை தேடி அலைந்த போது சீதையால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும் போது சீதையின் பாத அணிகலன்களை தவிர வேறு அணிகலன்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை. காரணம் சீதையின் முகத்தை நான் பார்த்தது இல்லை. அவர்களின் பாதத்தை மட்டுமே நான் தினமும் பார்த்து வணங்குவேன். இவ்வாறாக எந்த பெண்ணின் முகத்தையும் பார்க்காதவனாக பதினான்கு ஆண்டுகள் இருந்தேன். வனத்திற்கு உங்களுடன் கிளம்பியதும் எனது மனைவி ஊர்மிளையிடம் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடால் அவளிடம் நீ என்னுடன் வர வேண்டாம் என் முகத்திலும் நீ இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றேன். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. அப்படியே ஆகட்டும் என்று அவளுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அதன் பிறகு வனவாசத்தின் போது நீங்களும் சீதையும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வந்தாள். அப்போது நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன்.
ராமரையும் என் சீதையையும் பாதுகாக்கவே நான் வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீங்கள் ஆட்கொள்ள கூடாது. என் மனைவி ஊர்மிளைக்கு என் தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கி சுகமாக இரு என்று வாக்கு கொடுத்திருக்கிறேன். அதன்படி நீங்கள் எனக்கு கொடுக்கும் தூக்கத்தை எனது மனைவிக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். நித்ராதேவியும் அதற்கு சம்மதித்து எனது தூக்கத்தை எனது மனைவிக்கு கொடுத்து விட்டாள். அதனால் வனவாசத்தின் போது எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் பதினான்கு ஆண்டுகளும் நீங்கள் தூங்கும் நேரம் உங்களுக்கு பாதுகாப்பாக விழித்துக் கொண்டிருந்தேன். https://tsaravanan.com/lakshmanan-urmilai/ நமது குருநாதராகிய விஸ்வாமித்திரர் அவரது யாகத்திற்கு காவல் புரிவதற்காக நம்மை அழைத்துச் சென்றார். அப்போது நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசி எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் உபதேசித்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தேன். அதன் பலனாக பதினான்கு ஆண்டுகளும் எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் இருந்தேன் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன். சபையினர் அருந்த அனைவரும் லட்சுமணனை ஆச்சரியமாக பார்த்தனர். லட்சுமணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லட்சுமணனை ஆரத்தழுவி கொண்டார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏