தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 102 மயிலாடுதுறை
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 102 வது தேவாரத்தலம் மயிலாடுதுறை புராணபெயர் மாயூரம். அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும் மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது. மூலவர் மயூரநாதர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அபயாம்பிகை அஞ்சொல்நாயகி. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். சுவாமியின் லிங்க ரூபத்தின் அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். தலவிருட்சம் மாமரம் வன்னி. தீர்த்தம் இடபம் பிரம்ம அகத்திய தீர்த்தம் காவேரி ரிஷப தீர்த்தம். சிவன் இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தார். இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் இடபதீர்த்தம் எனப்படுகிறது. ஆடிப்பூர அம்பாள் வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள். காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார்.
பிரம்ம தேவர் இந்த ஊரிரை உருவாக்கி இத்தலத்து இறைவன் மாயூரநாதரை பூஜித்தார் என்று புராண வரலாறு கூருகிறது. கோவிலில் நான்கு பக்கம் சுற்று மதில்களும் கிழக்கே பெரிய கோபுரமும் மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளையும் உட்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது. இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. கோவிலின் ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. இங்கு நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால் இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குகிறார். மயூரதாண்டவத்தில் நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள் சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன் அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது. பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு அகத்திய சந்தன விநாயகர் என்றும் பெயரும் ஏற்பட்டது.
இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான் தலையில் அக்னியுடன் ஜுவாலை சனியாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். ஐந்து பிரகாரங்களுடன் அமைந்த தலம் இது. இங்கு கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில் ஜுரதேவர் இருக்கிறார் இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும் அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும் அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு சன்னதி உண்டு.
பார்வதியை மகளாக பெற்ற தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே அம்பாளையும் யாகத்திற்கு செல்ல வேண்டாமென கூறிவிட்டார் சிவன். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன் வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது யாகத்தில் பயன் படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி யாகத்திற்கு வந்ததால் அம்பாளை மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும் மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால் மாயூரநாதர் என்று பெயர் பெற்றார்.
நாதசர்மா அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் ஐப்பசி மாதத்தின் இறுதியில் ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன் மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. நாதசர்மா அனவித்யாம்பிகை தம்பதியினர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம் அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். அதேபோல் துலா நீராடலைக் கேள்விப்பட்டு தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால் இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை முடவன் முழுக்கு என்கின்றனர்.
கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை யமுனை சரஸ்வதி என்ற நதிகள் என்றும் தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் மாறி விட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் (ஜப்பசி மாதம்) காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூறினார். அவர்களும் அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள் முனிவர்கள் சரஸ்வதி லட்சுமி கௌரி சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் இன்றும் நீராட வருகின்றனர்.
கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தலபுராணம் அபயாம்பிகை மாலையும் அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். கிபி 1907 1911-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் மன்னர்கள் காலத்து 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பராந்தகச் சோழன் (10-ம் நூற்றாண்டு) இரண்டாம் ராஜாதி ராஜன் (கிபி 1177) மூன்றாம் குலோத் துங்கன் (கிபி 1201) ராஜராஜ தேவன் (கிபி 1228) மூன்றாம் ராஜராஜன் (கிபி1245) ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர்களும் இந்த திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர். கல்வெட்டில் இத்தல இறைவன் மயிலாடுதுறை உடையார் என்று குறிக்கப் பட்டுள்ளது. சோழர்கள் இக்கோவிலை கட்டியுள்ளனர். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.