அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவர் தமிழ் மொழி வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப் போல் ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை. கருத்தாழமும் சொல்லழகும் இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவரது பாடல்கள். அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இவருடைய மூதாதையர்கள் தற்போதைய பங்களாதேஷ் ராஜசாகி மாவட்டம் வரேந்திர கிராமத்திலிருந்து 11ம் நூற்றாண்டில் பிரபுடேவ மன்னன் காலத்தில் இங்கு குடியேறியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த திருவெண்காடாருக்கும் முத்தம்மைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால் முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் ஓர் ஆண் மகன் வேண்டும் என்று நாள் தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மை செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளால் மூத்த பெண் ஆதிலட்சுமிக்கு நான்கு வயதாக இருக்கும் போது முத்தம்மைக்கு இரண்டாவது ஆண் குழந்தை ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண் குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்தம்மை. அக்குழந்தைக்கு அருணாச்சலேஸ்வர மலையின் பெயரை வைத்து அருணகிரி என்று பெயரிட்டாள் முத்தம்மை. அருணகிரியின் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருந்தது.

அருணகிரி பிறந்த மகிழ்ச்சியில் காசி யாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. சிறிது நாளில் கடுமையாக நோய் வாய்ப்பட்டாள் முத்தம்மை. தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்து கொண்ட முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். மரணம் நெருங்கிய காலத்தில் தன் மகள் ஆதிலட்சுமியை அழைத்தாள் முத்தம்மை. மகளே ஆதி என்ற உனது பெயரைப் போலவே ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது. நான் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறிய முத்தம்மை அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதிலட்சுமியின் கரத்தில் வைத்தாள். ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன் என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் முருகன். முத்தம்மையின் முகத்தில் புன்னகை மலர்ந்து முக்தியடைந்தாள்.

அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் ஆதிலட்சுமி. தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தாள் ஆதி. அருணகிரியே சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார் ஆதி. அருணகிரிநாதர் சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இந்த செய்தி தெரிந்தும் ஆதிலட்சுமி அம்மையார் விரைவில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இளமையிலேயே திருமந்திரம் தேவாரம் திருமுருகாற்றுப்படை திருக்குறள் காரிகை ஆகிய தமிழ் நூல்களைப் படித்து அதில் புலமை பெற்றிருந்தார். உலா ஏசல் கலம்பகம் கோவைசிந்து தூது பரணி மடல் மாலை எனப்படும் நூல் வகைகளைப் பயின்றும் காம சாஸ்திர நூல்களை ஆராய்ந்தும் புலமை வாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். உரிய வயதில் திருமணத்தை அவருக்கு செய்து வைத்தார் அவரது சகோதரி ஆதிலட்சுமி. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும் விதி வசத்தால் வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் தனது சொத்தையும் இழந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாக சொத்தை இழந்ததோடு பெரும் நோயும் வந்து சேர்ந்தது அருணகிரிக்கு. அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட கட்டிய மனைவியைக் நெருங்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். இதனால் இவர் சகோதரி தன்னை நெருங்குமாறு கோபத்துடனும் வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைத் தடுத்து ஆட்கொண்டார்.

அருணகிரிநாதரை தடுத்தாட் கொண்டது அருணாசலேஸ்வரர் என்றும் முருகக் கடவுள் என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளது. அந்தப் பெரியவர் அவருக்கு முருகக் கடவுளைப் பற்றிச் சொல்லி சரவணபவ ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி முருகனைப் போற்றிப் தவவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்தோடு இருந்த அருணகிரிநாதர் பெரியவர் சொன்னது சரியாகக் கேட்கவில்லை. ஒரு பக்கம் பெரியவரின் பேச்சு மறுபக்கம் குழப்பமான மனது. தவத்தினால் மனம் சற்றுத் தெளிவடைகிறது என நினைத்தால் மீண்டும் மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. தவம் வரவில்லை என்ன செய்யலாம்? குழப்பத்திலும் கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரிநாதர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்த போது இரு கரங்கள் அவரைத் தாங்கி காப்பாற்றின. திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்க முருகர் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில் வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்தார். முருகன் அவரை அருணகிரிநாதரே என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து யோக மார்க்கங்களும் மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படி அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. நாதர் என்ற பட்டத்தைப் பெற்ற அருணகிரி அன்று முதல் அருணகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.

அருணகிரிநாதர் உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்றதும் முருகனை இரு கரம் கூப்பித் தொழுதார். அப்போது முருகர் அருணகிரிநாதரே இந்தப் பிறவியில் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய் என்று அருளினார். முருகனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும் பாடல் புனையும் வழி அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். அப்போது முருகர் யாமிருக்க பயமேன் அஞ்சேல் என்று சொல்லி முத்தைத் தரு பத்தித் திருநகை என பாடல் பாடுமாறு ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்து விட்டு முருகர் மறைந்தார். முருகர் வந்து உபதேசம் செய்து சென்ற பின்னர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மௌனமாக தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர். தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். சிறிது நாளில் அவரது உடம்பில் இருந்த நோய்கள் அனைத்தும் மறைந்து விட்டது. இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரிநாதரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க அருணகிரிநாதருக்கும் அரசனுக்கும் நட்பு உண்டானது.

அருணகிரிநாதருக்கும் மன்னனுக்கும் உண்டான நட்பு அரண்மனையின் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானுக்கு பொறாமையை உண்டாக்கியது. தேவியின் பக்தனான சம்பந்தாண்டான் தேவியின் குமாரனனான முருகனை பாடி தொழுது வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் பொறாமை குணம் அதிகமாகி மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான் சம்பந்தாண்டான். அரசரிடம் நேரடியாக சென்றவன் அருணகிரிநாதரைப் பற்றி பேச ஆரம்பித்தான். அரசே நான் உங்கள் நெருங்கிய நண்பன். உங்கள் நன்மையே நாடுபவன். உங்களுக்கு நல்லதேயே செய்ய நினைக்கிறேன். அருணகிரிநாதர் பற்றி நீங்கள் சரிவர தெரியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர்கள். இந்த நட்பு வேண்டாம். பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தவன் அந்த அருணகிரிநாதர். உற்றார் உறவினர்கள் அனைவரும் அவனை கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாய வித்தையால் இப்போது அனைத்து வியாதிகளும் மறைந்திருக்கலாம். சித்து வேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு முருகன் நேரில் வந்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தான் நான் முருகனுக்கு அடிமை என்று சொல்லித் திரிகின்றான். அவன் பேச்சை நம்பவேண்டாம் என்று சொன்னான்.

அருணகிரிநாதரின் ஆன்ம பலத்தையும் அவரின் பக்தியையும் யோக சக்தியையும் அரசர் நன்கு உணர்ந்திருந்தார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும் அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம் பேசிய அரசர் நீங்கள் பெரிய தேவி உபாசகர் என்பதை நான் அறிவேன். அருணகிரிநாதர் பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல் பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான் அரசன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக மன்னா தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதே போல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்ய வேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும் சம்மதமா? என்று சவால் விட்டான். அரசனும் தேவி தரிசனம் ஒருபக்கம் இன்னொரு பக்கம் முருகன் தரிசனம் சம்மதமே என்று சொன்னான் அரசன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன் என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவியது.

அருணகிரிநாதரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய சம்பந்தாண்டான் தன் தவ வலிமையால் தேவியிடம் அருணகிரிநாதரை வெற்றி பெற அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு தேவியோ உனது தவ வலிமை அனைத்தையும் நீ வீணடித்து விட்டாய். ஆகவே இனி உனக்கு எமது காட்சி கிடைக்காது என்று அசீரிரியாக பதில் அளித்தாள். உடனே சம்பந்தாண்டான் தேவியிடம் ஒரு சிறு விண்ணப்பம் வைத்தான். அருணகிரிநாதர் நாளை முருகனை அழைத்துப் பாடும் போது முருகனை உனது அன்பினால் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ய நினைத்த தேவி இதற்கு சம்மதித்தாள்.

அருணகிரிநாதர் அரசர் சொல்லி அனுப்பிய இடத்திற்கு வந்தார். அனைவரும் அங்கு கூடி விட்டார்கள். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவி தான் அழைத்ததும் வந்து விடுவாள். முதலில் அருணகிரிநாதரை முருகரின் தரிசனத்தை கிடைக்க செய்யுங்கள் என்றான். அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரிநாதர் முருகரை நினைத்து திருப்புகழ் பாடினார். முருகரை தேவி தன் அன்பானால் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆகையால் முருகர் தரிசனம் அங்கு கிடைக்கவில்லை. முருகர் ஏன் வரவில்லை என்று தன் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட அருணகிரிநாதர் சம்பாந்தாண்டானின் சூழ்ச்சியை அறிந்து கொண்டார். முருகனை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும் இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லி விட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அருணகிரிநாதர் பக்திப் பரவசத்துடன் மனமுருகி மயிலை துதித்துப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம் மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அருணகிரிநாதரின் மகிமையை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இப்போது சம்பந்தாண்டானின் முறை வந்தது. சம்பந்தாண்டான் எவ்வளவோ முயற்சித்தும் தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.

அருணகிரிநாதர் தொடர்ந்து தல யாத்திரையாகத் தமிழ்நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்து அங்குள்ள முருகப் பெருமான் மேல் திருப்புகழ் பாக்களைப் பாடி வந்தார். வயலூருக்கு வருமாறு ஆணையிட்ட முருகனை வயலூர் சென்று தரிசித்தார். விராலிமலைக்கு வருமாறு கூறி வழியையும் காண்பித்தார். அத்தலத்தையும் அருணகிரிநாதர் சென்று வணங்கினார். முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருகி வழிபட்டபின் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் செல்லும் வழி காடாக இருந்ததால் மயில் அவருக்கு வழி காட்டியது. செந்திலாண்டவன் அவருக்கு நடராஜரைப் போல திருத்தாண்டவம் ஆடினார். ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் சுமார் 200 தலங்களைத் தரிசித்து வடநாடு ஈழநாடு முதலிய பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகனைத் தரிசித்தார்.

அருணகிரிநாதர் ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருக்கும் போது இடையில் வந்த தென்பெண்ணையாற்றின் வளங்கொழிக்கும் நடுநாட்டில் சனியூர் என்ற ஊரில் ஒரு வைணவப் பெரியார் இருந்தார். அவர் பெயர் வில்லிபுத்தூரார். இவர் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். வியாச பாரதக் கதையை தமிழில் மணிப்பிரவாள நடையில் எழுதி பெரும் புகழ் பெற்றவர். வரபதியாட் கொண்டான் என்ற கொங்கு நாட்டு அரசனின் அரசவைப் புலவராக வீற்றிருந்து அரசர்க்குரிய அனைத்து மரியாதைகளுடன் வரகவி என்று மக்களால் போற்றப்பட்டவர் இப்படி தனக்கு ஏற்பட்ட புகழால் கல்விச் செருக்குண்ட வரகவி தம்மிடம் வாதுக்கு வருபவர்களை வென்று கவிபாடி காது அறுப்பார். இவர் அருணகிரியாரின் அருட்செயல்களைக் கேட்டு பொறாமை அடைந்தார். கவிஞர்களின் காதுகளை அறுக்கும் அடாத செயலைக் கேட்டறிந்த அருணகிரியார் வருத்தப்பட்டார். இச்செயல் இனி நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற கருணையினால் வில்லிபுத்தூராரை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மன்னர்கள் கூடிய பேரவையில் அருணகிரநாதருக்கும் வில்லியாருக்கும் பல்வேறு வகையான வாதங்கள் நடந்தன. ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் ஒருவர் பாட மற்றொருவர் பொருள் கூறவேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது. பொருள் சொல்ல முடியாதவர் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. முதலில் அருணகிநாதர் கந்தர் அந்தாதி என்ற பிரபந்தம் பாடினார். ஒவ்வொரு பாடலுக்கும் வில்லியார் பொருள் விளக்கம் கூறிவந்தார். 54-ஆம் பாடலகிய

திதத்தத்தத் தித்தக திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதிதித்த தேதுத்த தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாத திதேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே என்ற பாடலுக்கு பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்தார். பாடல் முழுவதும் தகர வர்க்கத்தால் ஆனது இப்படி ஒரு பாடல் இருக்காது இது பொய் பாடல் என்று வில்லிபுத்தூரார் கூறினார். இது மெய்ப்பாடலே இப்பாடலின் விளக்கத்தை கற்றோர் ஏற்றுக் கொள்ளுமாறு அருணகிரிநாதர் எடுத்துரைத்தார். அரசவை அருணகிரியாரைப் பாராட்டியது. வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு காதருக்கும் கருவியை அருணகிரியாரிடம் கொடுத்து தன் காதை அறுக்குமாறு செருக்கு அழிந்து பணிந்து நின்றார். கருணைமிகுந்த அருணகிரிநாதர் அவ்வாறு செய்யவில்லை. இனி எங்கும் யாரையும் வாதுக்கு இழுத்து காதை அறுக்காதீர்கள். நன்று தமிழ்ப்பணி செய்வீர் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அன்று முதல் காதறுக்கும் தொழிலைக் கைவிட்டார் வில்லிபுத்தூரார். கருணைக்கு அருணகிரி என மக்களால் போற்றப்பட்ட அருணகிரிநாதர் மீண்டும் திருவண்ணாமலை வந்தடைந்தார்.

அருணகிரிநாதரிடம் தோல்வி அடைந்த சம்பந்தாண்டான் அவரை பழி வாங்கத் துடித்தான். அந்த நேரத்திற்காக காத்திருந்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான் தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரிநாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன் தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலை பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான் சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை அரசனிடம் காண்பித்து அருணகிரிநாதர் இறந்து விட்டார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான். அரசனும் உண்மை அறியாது அவ்வுடலைத் தகனம் செய்தான். பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது தேடினார். தன் உடல் அழிக்கப்பட்டதை கடவுள் செயலாகக் கருதினார்.

அருணகிரிநாதர் கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர் மன்னிடம் நான் இறைவனிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார் என்றார். அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாகவும் திருத்தணியில் உள்ள முருகன் கையில் அமர்ந்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளது. திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்த போது முருகரால் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் முருகர் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் பல ஆண்டுகளாக இங்கும் அங்கும் எனச்சில ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. 1871 இல் வ.த. சுப்ரமணிய பிள்ளை ஒரு மாவட்ட நடுவராக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் சுற்றுப்பயணத்தில் இருந்த போது அதிகாலை பண்டாரம் ஒருவரால் ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர் திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை சுவடிகள் உள்ளிட்ட திருப்புகழ் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதி நூல்களாக வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் வ.சு செங்கல்வராய பிள்ளையால் விளக்கம் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. திருப்புகழை மக்களிடையே பரவச் செய்தவர்களில் ஒருவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆவார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனார் திருமழிசை ஆழ்வார் முதலிய அடியார்கள் குறித்தும் திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றியவை

கந்தர் அந்தாதி 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் 108 பாடல்கள்
கந்தரனுபூதி 52 பாடல்கள்
திருப்புகழ் 1307 பாடல்கள்
திருவகுப்பு 25 பாடல்கள்
சேவல் விருத்தம் 11 பாடல்கள்
மயில் விருத்தம் 11 பாடல்கள்
வேல் விருத்தம் 11 பாடல்கள்
திருவெழுகூற்றிருக்கை

One thought on “அருணகிரிநாதர்

  1. ELAVARASAN J T Reply

    அருணகிரிநாதர் பிறந்தது ஆனி முலம்.
    முருகன் தண்டத்தில் (அருணகிரிநாதர்க்கு முத்தி கிடையாது) அமர்ந்த நாள் புரட்டாசி மாதம் , உத்திர நட்சத்திரம், தனுர் லக்னத்தில் அமர்ந்தார். முருகன் இடத்தில் இன்று உள்ளார், அவ்வரே வரம் வேண்டினார்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.