ராமருடன் அனுமன் புரிந்த போர்

ராமர் ராவண வதமெல்லாம் முடிந்து அயோத்தி திரும்பினார். ராமருக்கு பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. யாகம் ஒன்றை செய்ய வசிஷ்டர் விஸ்வாமித்திரர் போன்ற பல மகரிஷிகள் முன்னிலையில் யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்த ராமர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆணையிட்டார். அயோத்தி நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த இடம் தேர்வு செய்யப்பட்டு யாகம் விமரிசையாக துவங்கியது. அப்போது ராமனின் ஆளுகைக்கு உட்பட்ட தேசம் ஒன்றை ஆண்டு வந்த சகுந்தன் என்கிற அரசன் வந்தான். யாகம் ஒன்று மிகப் பெரிய ரிஷிகளை கொண்டு நடத்தப்பட்டு வருவதை பார்த்து வியந்தவன் உள்ளே சென்று அவர்களிடம் ஆசி பெற தீர்மானித்தான். ஆனால் வேட்டையாடி விட்டு திரும்பிக் கொண்டிருந்த காரணத்தால் அப்படியே யாகசாலைக்குள் செல்ல விருப்பமின்றி வெளியே நின்றபடி உள்ள இருந்த ரிஷிகளை பார்த்து வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறி விட்டுச் சென்றான். இதை நாரதர் கவனித்துவிட்டார். நேராக விஸ்வாமித்திரரிடம் சென்று விஸ்வாமித்ர மகாமுனிவரே ராமனின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டின் சிற்றரசன் சகுந்தன். அவன் இந்த யாகசாலை முன்பு நின்று வசிஷ்டாதி முனிவர் யாவருக்கும் என் வணக்கங்கள் என்று கூறி விட்டுப் போகிறான். வசிஷ்டரைப் போன்று தாங்களும் ராமருக்குக் குருதானே? தாங்களும் தானே முக்கியப் பொறுப்பேற்று இந்த யாகத்தை நடத்துகிறீர்கள்? தங்கள் பெயரையும் சொல்லிச் சகுந்தன் வணக்கத்தைத் தெரிவித்திருக்க வேண்டாமா? வேண்டுமென்றே விஷமத்தனமாகத் தங்களை இந்தச் சிற்றரசன் அவமானப்படுத்தியிருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று தன் கலகத்தை ஆரம்பித்தார். இதனைக் கேட்ட விஸ்வாமித்திரர் கோபம் கொண்டார். என்ன ஆணவம் அவனுக்கு அவனை இப்போதே என்று சபிக்க எத்தனித்தார். உடனே இதனை தடுத்த நாரதர் குறுக்கிட்டு விஸ்வாமித்திரரே சற்றுபொறுங்கள். சகுந்தனை சபித்து தங்கள் தவவலிமையை ஏன் குறைத்துக் கொள்கிறீர்கள் ராமனை அழைத்து சகுந்தனை தண்டிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடுங்கள் என்றார். நாரதரின் கருத்தை ஏற்றுக் கொண்டார் விஸ்வாமித்திரர்.

ராமனை தன்னை வந்து சந்திக்கும்படி பணித்தார். இராமனும் விஸ்வாமித்திரரை வந்து சந்தித்தார். நடந்தவற்றை அவரிடம் விளக்கிய விஸ்வாமித்திரர் உன் குருவை அவமதித்தவனுக்கு என்ன தண்டனை தரப்போகிறாய் என்று கேட்டார். நீங்கள் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன் என்றார் ராமர். இன்று மாலை சூரியன் மறைவதற்குள் சகுந்தனின் தலை என் காலடியில் கிடக்கவேண்டும் என்கிறார் விஸ்வாமித்திரர். சகுந்தனை தேடி புறப்பட்டார் ராமர். நாரதர் உடனே சகுந்தனிடம் ஓடிச்சென்று நடந்தவற்றை சொல்லி உன்னை தண்டிக்க ராமரிடம் சொல்லியிருக்கிறார் விஸ்வாமித்தரர். உன் தலையை துண்டிக்க ராமர் வந்து கொண்டிருக்கிறார் என்றார். இதனை கேட்டு திடுக்கிட்ட சகுந்தன் ராமரை எதிர்க்க என்னால் முடியாது ஆகையால் என் தலையை நீங்களே துண்டித்து ராமரிடம் கொடுத்து விடுங்கள் என்று உடைவாளை நாரதர் கைகளில் கொடுத்தான். இதனை கேட்ட நாரதர் உன் மீது எந்த தவறும் இல்லை எனும் போது நீ ஏன் வீணாக உயிர்த்தியாகம் செய்யவேண்டும்? நீ மாண்டுவிட்டால் உன் மனைவி மக்களுக்கு குடிகளுக்கு யார் இருக்கிறார்கள் என்றார். அதற்கு சகுந்தன் இதிலிருந்து தப்பிக்க நீங்கள் தான் ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டான். உனது நாட்டின் எல்லையில் இருக்கும் கானகத்தில் உள்ள மலைப் பகுதியில் தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி வசிக்கிறாள். அவளிடம் சென்று அவரனடைந்து விடு. அவள் ஒருவளால் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்றார். சகுந்தனும் உடனே அஞ்சனா தேவி வசிக்கும் கானகத்திற்கு சென்று அவளை தேடினான். நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது. அஞ்சனா தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் தீ மூட்டி அஞ்சனா தேவி சரணம் என்று கூறியபடி அதில் குதித்து உயிர்த் தியாக செய்ய முயன்றான் சகுந்தன். அப்போது அஞ்சனாதேவி அவன் முன் வந்து எதற்காக என்னை தேடிக்கொண்டிருந்தாய்? தற்போது உயிரையும் அதற்காக தியாகம் செய்ய துணிந்து விட்டாய் என்று கேட்டாள். அதற்கு சகுந்தன் எனக்கு அடைக்கலம் கொடுங்கள் அது உங்களால் மட்டும் தான் இப்போது முடியும் என்றான். அதற்கு அந்தனாதேவி என்ன விபரம் என்று சொல் என்று கேட்டாள். எனக்கு அடைக்கலம் கொடுப்பதாக முதலில் வாக்கு கொடுங்கள் அதன் பிறகு சொல்கிறேன் என்று சகுந்தன் பிடிவாதமாக நிற்றான். வேறு வழியில்லாமல் அஞ்சனா தேவி உனக்கு அபயமளிக்கிறேன் கவலைப்படாதே இப்போது விவரத்தை சொல் என்றாள்.

ராமர் என்னுடன் யுத்தம் செய்து தனது தலையை எடுக்க வந்து கொண்டிருக்கிறார் என்று நடந்தவைகள் அனைத்தையும் விவரமாக சொன்னான் சகுந்தன். அனைத்தையும் கேட்ட அஞ்சனா தேவி திடுக்கிட்டாள். இருப்பினும் கொடுத்த வாக்கின்படி சகுந்தனை காப்பது தன் கடமை என்பதால் அனுமனை தன் முன் வரும்படி நினைத்தாள். தாய் அஞ்சனாதேவி நினைத்த அடுத்த நொடி அனுமன் அங்கே தோன்றினான். என்னை அழைத்த காரணத்தை சொல்லுங்கள் தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன் என்றார் அனுமன். அஞ்சனா தேவி அனைத்தையும் சொல்லி என்னிடம் சரணடைந்தவனை காப்பாற்ற வேண்டியது உன்கடமை என்று கூறி சகுந்தனை ராமனின் அஸ்திரத்திடமிருந்து காக்கும் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தாள் அஞ்சனாதேவி. இக்கட்டான சூழ்நிலை தனக்கு ஏற்பட்டதை எண்ணி வருந்தினான் அனுமன். இருப்பினும் தாய் சொல்லை காப்பாற்ற வேண்டியது தன் கடமே என்று எண்ணிய அனுமன் உயிரினும் மேலான தனது ராமரையே எதிர்க்க துணிந்தான். தனது வாலால் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி அதனுன் சகுந்தனை அமரச் செய்து செய்து அதன் மேல் தான் உட்கார்ந்து கொண்டார் அனுமன். சகுந்தனை தேடி அந்தப் பகுதிக்கு வந்த ராமர் அவனை கண்டுபிடிக்க இயலாமல் சகுந்தனின் தலையை கொய்து வாரும் அஸ்திரத்தில் மந்திரத்தை செபித்து எய்தினார் அம்பை எய்தினார். ராமர் எய்த அஸ்திரம் மீண்டும் அவரது காலடியிலேயே வந்து வீழ்ந்தன. சக்தி மிக்க ராம பாணத்தை எய்தார் கூட தோற்று விட்டது. ராம பாணமும் திரும்பி அவரது காலடியில் விழுந்தது. ராமருக்கு ஒன்றும் புரியவில்லை. ராம பாணம் தோற்றதாக சரித்திரமேயில்லையே என்ன காரணம் என்று புரியாமல் யோசித்த படி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமா உனது எதிர்பக்கம் உற்றுக் கவனி காரணத்தை நீயே அறிவாய் என்றார். ராமர் எதிர் பக்கம் உற்று கவனித்தார்.

ராமரின் காதில் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று ராம நாமம் ஒலிப்பது கேட்டது. இது அனுமனின் குரலாயிற்றே அவன் ஒருவனால் தான் இத்தனை பக்தியுடனும் தீர்க்க்கத்துடனும் ராம நாமத்தை கூற முடியும் என்று தீர்மானித்தார். ராமா நீ நினைப்பது சரிதான். அனுமன் அங்கே இராம நாமம் ஜபித்து கொண்டிருக்கிறான். உன்னை விட உன் நாமத்திற்கு சக்தி அதிகம். உன் நாமத்தை அனுமன் இதயப்பூர்வமாக செபித்துக் கொண்டிருக்கும்போது அவனைமீறி அவன் காவல் காத்துக்கொண்டிருக்கும் சகுந்தனை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது ராமபாணம் மட்டுமல்ல பிரம்மாஸ்திரம் கூட இதன் முன் பலிக்காது என்றார். இதற்குள் சினம் தணிந்த விஸ்வாமித்திரர் தன்னால் ஒரு நிரபராதியின் உயிர் போய் விடக்கூடாதே என்று அங்கு ஓடி வந்தார். ராமா நிறுத்து நிறுத்து சகுந்தனை ஒன்றும் செய்துவிடாதே என்றார். அதற்கு ராமர் குருநாதா என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் சொன்னதை நான் இப்போது நிறைவேற்றா விட்டார் நான் வாக்கு தவறினான் ஆவேன். அதனால் உங்களின் கட்டளைப்படி சகுந்தனின் தலையை சூரிய அஸ்தமனத்திற்குள் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்றார். தான் போட்ட முடிச்சை தானே அவிழ்க்க விரும்பிய நாரதர் சகுந்தனை வெளியே வரும்படி அழைத்து விஸ்வாமித்திரரின் பாதங்களில் அவன் தலைபடும் படி வீழ்ந்து வணங்கச் சொன்னார். இப்போது ராமரிடம் திரும்பிய நாரதர் ராமா விஸ்வாமித்திரரிடம் நீ கொடுத்த வாக்குப் படி இப்போது சகுந்தனின் தலை அவரது பாதத்தில் வீழ்ந்து கிடக்கிறது உன் வாக்கு பொய்க்கவில்லை. உனது ராம மந்திரத்தின் பெருமையை உலகிற்கு காட்டுவதற்காகவே இந்த லீலையை செய்ததாக நாரதர் கூறினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.