ராமயணத்தில் கைகேயிடம் பணியாளாக இருந்தவள் கூனி. கைகேயியை ராமனுக்கு எதிராகத் தூண்டி பாவத்தை சேர்த்துக் கொண்டவள். இவளே கிருஷ்ணரின் அவதாரத்தில் கம்சனுக்கு சந்தனம் பூசி விடும் பணி செய்தாள். கம்சனின் நாட்டுக்கு வந்த கிருஷ்ணனை பார்த்து மெய் மறந்து அவனுக்கும் சந்தனம் பூசினாள். அதன் பலனாக அவளது கூனை கிருஷ்ணன் நிமிர்த்தினான். அடுத்த பிறவியில் பாண்டுரங்க பக்தையான ஜனாபாய் என்ற பெயரில் பிறந்தாள்.
பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம் பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண் குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர் திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும் தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்ற ஞானி ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார். கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பாண்டுரங்கனின் சிறந்த பக்தரான நாமதேவர் சிறுவயதிலேயே சிறந்த ஞானியாக விளங்கியவர். நூறு கோடி பாடல்கள் பாடி இறைவனுக்கே உணவளித்த பாக்கியம் பெற்றவர். தன் தாய் குனாயி அம்மையாரிடம் ஜனாபாயை ஒப்படைத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்
நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஒருநாள் இரவு கடும் காற்றுடன் மழை பெய்ததால் நாமதேவரின் வீட்டுச் சுவர் ஈரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதைக் கண்ட பாண்டுரங்கன் தன் பக்தனின் துன்பத்தை துடைக்க தானே நேரில் வந்து மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினார். பாண்டுரங்கனைக் கண்ட நாமதேவரும் ஜனாபாயும் அவரது திருவடியில் விழுந்து வணங்கினர். பகவானுக்கு சேவை செய்யும் பாக்கியம் ஜனாபாய்க்கு கிடைத்தது. வேகமாக வெந்நீர் தயார் செய்து சேறாகி இருந்த அவரது பட்டு பீதாம்பரத்தை வாங்கி துவைத்து உலர வைத்தாள். அதுவரை பாண்டுரங்கன் ஜனாபாயின் கந்தல் துணியை உடுத்திக் கொண்டார். அது அவரது திருமேனிக்குப் பொருத்தமாகவும் இருந்தது. பீதாம்பரம் உலரும் வரை பாண்டுரங்கன் சிறிது நேரம் கண்ணயர விரும்பினார். அவர் படுத்துக் கொள்வதற்கு வசதியாக தன் அறையில் இருந்த பழைய துணிகளையும் சாக்கு பைகளையும் ஜனாபாய் விரித்தாள். பகவானின் பாதங்களை மெதுவாகப் பிடித்து விட்டாள். ஆதிசேஷனின் மலர்ப்படுக்கையில் அயர்ந்து உறங்கும் பாண்டுரங்கன் வைகுண்டத்தை விட இங்கு சுகமாக தூக்கம் வருகிறதே என்று அழுக்குத் துணியிலேயே நன்றாகத் தூங்கி எழுந்தார். பிறகு ஜனாபாய் உடவு பரிமாற நாமதேவர் குடும்பத்தாருடன் பாண்டுரங்கன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.
நாமதேவர் பாண்டுரங்கனுக்கு தன் கையால் சோற்றை ஊட்டி விட அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த ஜனாபாய் தனக்கும் அது போல் பாக்கியம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டாள். இதை அறிந்த பாண்டுரங்கன் அவளது அறைக்கு சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாபாயிடம் எனக்கும் ஒரு கவளம் ஊட்டி விடு தாயே என்று கேட்டுக் கொண்டார். ஆனந்தக் கண்ணீர் வழிய அவள் பாண்டுரங்கனுக்கு ஊட்டி விட்டாள். நிஜபக்தி ஒன்றுக்கே கட்டுப்படும் பாண்டுரங்கன், ஜனாபாயின் மடியிலேயே தலை வைத்து படுத்து விட்டார். பிறகு அவள் பகவானின் தசாவதார லீலைகளைப் பாடலாகப் பாடியபோது ரசித்து மகிழ்ந்தார். ஜனாபாய் உரலில் மாவு அரைத்தபோது தானியத்தை தன் கையால் தள்ளி விட்டு உதவியும் செய்தார்.
நாமதேவரின் பக்தியையும் ஜனாபாயின் பக்தியையும் உலகிற்கு தெரிவிக்க திருவுள்ளம் கொண்டார் பாண்டுரங்கன். தன் பட்டு பீதாம்பரம் ஜனாபாய் வீட்டுக் கொடியில் காய்ந்து கொண்டிருக்க அவளின் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டு மறைந்து போனார். கோவிலின் கதவை மாலை நேர வழிபாட்டிற்காக திறந்த அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். பாண்டுரங்கன் அணிந்திருந்த அருமையான காசி பட்டும் ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன. ஒரு கந்தல் துணி சிலையில் சுற்றப்பட்டிருந்தது. ஜனாபாயின் குடும்பத்திற்கு மிகவும் பழக்கமான அர்ச்சகர் இது ஜனாபாயின் துணி போல இருக்கிறதே என்று சொல்ல எல்லாரும் நாமதேவரின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த பட்டு பீதாம்பரத்தைப் பார்த்து இவள் தான் பாண்டுரங்கனின் பீதாம்பரத்தையும் ஆபரணங்களையும் திருடிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று சொல்லி வீட்டில் சோதனை செய்யத் தொடங்கினர். அவளது படுக்கை அறையில் ஆபரணங்கள் இருந்தன. அவளிடம் நகைகளை எப்போது திருடினாய்? பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே? என்று விசாரித்தனர். ஜனாபாய் இதற்கெல்லாம் கலங்கவில்லை. நான் தவறு செய்யாதவள். அப்படி தவறு செய்ததாக நீங்கள் கருதினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் எனக் கூறி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள். அவள் பொய் சொல்வதாக நினைத்த அர்ச்சகர்கள் அரசனிடம் புகார் கூறினர். அவளை பொதுவீதியில் கழுவேற்றும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. ஜனாபாயை கழுமர மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.
ஜனாபாய் கழுமரத்தைப் பார்த்து கைகூப்பி விட்டல விட்டல ஜெய ஜய விட்டல என்று பாடினாள். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. பாண்டுரங்கன் ஓடி வந்து ஜனாபாயைத் தழுவிக் கொண்டு உன் நிஜபக்தியை உலகிற்குத் தெரிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று சொல்ல ஜனாபாய் அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள். ஜனாபாயின் புகழும் அவளது கீதங்களின் உயர்வும் நாடெங்கும் பரவியது. பாண்டுரங்கனே நேரில் வந்து ஜனாபாய் மற்றும் நாமதேவரின் பாடல்களை எழுதி தொகுத்தும் கொடுத்தார். அமுதமயமான அந்த பாடல்களே இன்றும் பண்டரிபுரத்தில் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.