ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பி அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமர் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார். ராமருடன் இருந்த சீதாதேவி பரதன் லட்சுமணன் சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒரு நாள் ராமர் அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும் அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடம் தெரிவித்தனர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும் அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ராமரும் அனுமதி வழங்கினார்.
ராமர் காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம் இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லையே என்றார். நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம் என்று பதிலளித்தார்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா என்று கேட்டார் ராமர். அவர்களும் ஆம் என்றார்கள். ராமர் புன்னகைத்து இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அப்படி ஒரு நிலை வராமால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றார்கள். நடந்தவைகளை ராமர் அனுமனிடம் தெரிவித்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாற் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதையும் ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.
ராமரின் உத்தரவுப்படி அனுமன் அவரது அறை வாசலில் அமர்ந்து ராம நாமத்தை செபித்துக் கொண்டிருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது. இரவில் ராமர் படுக்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். திறந்த அவரது வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. ராமருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதை பயந்தாள். பரதன் லட்சுமணன் சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தார்கள். அண்ணா அண்ணா என்று அழைத்தனர். அரண்மனை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்து விட்டு எந்த நோயும் இல்லை என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு அனுமனிடம் கேட்கலாமா என்று முதலில் தோன்றியது. பிறகு வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். ராமர் அசையாமல் இருந்தார். சிறிது நேரம் தியானம் செய்த வசிஷ்டர் அனுமனால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார். அனுமனிடம் அனைவரும் வந்து ராமரைப் பார்க்கும்படி சொல்ல துள்ளிக் குதித்து வந்த அனுமன் கை விரலால் ராமரன் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்குப் போடுவார். உங்களுக்கு இது தெரியவில்லை என்றார். அனைவரும் தலை குனிந்தனர். பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதை புரிந்துகொண்ட அவர்கள் அனுமனை மனதார பாராட்டினர்.
ராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட பக்தியை உலகிற்க்கு எடுத்துக் காட்ட ராமர் செய்த திருவிளையாடல்