அனுமனின் ராம நாமம்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் அனுமனுக்கு கோயில் உள்ளது. மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் செந்தூரம் பூசப்பட்ட திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். பிரேம் பீகுஜி மகராஜ் என்பவரால் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலில் தினமும் நடைபெற்று வரும் ராம் தூன் என்ற நாம சங்கீர்த்தனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1964ம் ஆண்டு முதல் இந்த ராம பஜனை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்ற பதிமூன்று எழுத்துக்கள் கொண்ட ராம மந்திரம் இங்கே இடைவிடாமல் 24 மணி நேரமும் ஜபிக்கப்பட்டு வருகிறது.

இந்த ராம நாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் பங்கேற்க விரும்பினால் இரண்டு நாட்களுக்கு முன்பே திருக்கோயில் நிர்வாகத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நிர்வாகம் திருக்கோயில் அறவிப்பு பலகையில் அறிவித்துள்ள கால நேரப்படி முன்னரே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தவறாமல் வந்து பஜனையில் பங்கேற்க வேண்டும். இந்த ஜப சேவையில் சிறியவர் பெரியவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். இப்படி ராம் தூன் பஜனை தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற ஆலய நிர்வாகம் எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்கிறது. முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் உரிய காலத்தில் வராத பட்சத்தில் நான்கு பேர் அடங்கிய ஒரு பஜனைக் குழுவினை எந்நேரமும் எந்தவிதமான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு பஜனை செய்திடத் தயாராக வைத்திருக்கிறார்கள்.

அகண்ட நாம சங்கீர்த்தனம் என்ற இந்தத் தொடர் பஜனையை கின்னஸ் உலக சாதனையாக 1984ல் உலக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கௌரவித்துள்ளார்கள். கடந்த 2001ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பங்கர நிலநடுக்கத்தின் போதும் இந்த அனுமன் கோயிலுக்க எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. ராமநாம பஜனும் எந்தவிதமான தடங்களும் இன்றி தொடர்ந்து நடந்த வண்ணமிருந்தது என்பதே இத்தலத்து அனுமனின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.