அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில்
கேள்வி: ராமாயண காலத்தில் இருந்த இலங்கைதான் தற்போதும் உள்ளதா? அப்போது ராமனால் அமைக்கப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் இருக்கிறதா? சேதுபாலம் தற்போது இடிக்கப்பட்டால் ஆஞ்சிநேயர் ராம பக்தர்களால் மக்களுக்கு துன்பம் நேருமா?
இறைவன் கருணை கொண்டு கூறும்பொழுது ராமன் சென்ற பாதை என்ற பொருளிலே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த சரிதம் என்பது மெய்யிலும் மெய். அடுத்ததாக அப்பொழுது இருந்த இலங்கையின் அளவு இன்னும் இன்னும் பெரியதப்பா. அதன் ஒரு சிறிய பகுதிதான் இப்பொழுது எஞ்சியிருக்கிறது. இன்னொன்று இப்பொழுது கடல் கொண்ட பூம்புகார் போக எஞ்சியுள்ள பூம்புகார் இருப்பது போலதான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை தேசம். அடுத்ததாக பாலம் எல்லாம் இருப்பது உண்மையென்றாலும் கூட மனித கண்ணுக்கு இப்பொழுது அது புலப்படாது. இன்னொன்று இவற்றை சிதைப்பதால் ராமபிரானுக்கோ அனுமனுக்கோ சினம் வந்துவிடாதப்பா. மனிதன் மனிதனாக வாழாமல் பிறருக்கு சதா சர்வகாலம் தொல்லைகள் தந்துகொண்டே தான் நன்றாக வாழ்வதற்கு பலரை இடர்படுத்தி வாழ்கிறானே? அந்த செயல் ஒன்று தான் இறைவனுக்கு வருத்தத்தையும் சினத்தையும் ஏற்படுத்தும். வருத்தமும் சினமும் இறைவனுக்கு இல்லை. கேள்வி கேட்பதால் நாங்கள் கூறுகிறோம். மற்றபடி ராமாயண காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக சில கற்பனை கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் ராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இறைவன் அருளால் இதுபோன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம் நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரும்.