கிருஷ்ண ஜெயம் என்றோ நரசிம்ம ஜெயம் என்றோ யாரும் சொல்வதில்லை. ஸ்ரீ ராமஜெயம் என்று மட்டும் ஏன் சொல்லப்படுகிறது என்றால் ராமன் தர்மத்தினுடைய பிரதிநிதியாகத் திகழ்ந்தான். ராமன் என்றால் தர்மம். ராமன் தர்மத்தின் மறு உருவம். ஸ்ரீ ராமஜெயம் என்றால் தர்மத்திற்கு ஜெயம் உண்டாகட்டும் என்று பொருள். எந்த சூழ்நிலையிலும் சுகத்தையும் துக்கத்தையும் ஒரு போல பாவித்துக் கொண்டு அதர்மத்தை அழித்து தர்மத்தை கடைபிடித்து தர்மத்தைக் காப்பாற்றுபவர்களுக்கு அடைக்கலம் தருபவனாக ராமன் விளங்கினான் என்பது தான் ராமாவதாரத்தின் மகிமை தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பதை நிரூபணம் ஆக்கியவர் ராமர். எந்தெந்த உபதேசங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ராமர் நினைத்தாரோ அவற்றை எல்லாம் அவரே வாழ்ந்து காட்டினார். வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தர்மங்களை மேற்கோள் காட்ட தானே அப்பாதையில் சென்று தன் மக்களுக்கு வழி காட்டினார். நாடாள வேண்டும் என்றாலும் சரி இல்லை காட்டுக்கு போக வேண்டும் என்றாலும் சரி இரண்டையும் ஒரே மனோநிலையில் ஏற்றுக் கொண்டவர் ராமர்.