தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #11 திருவெண்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 11 வது தேவாரத்தலம் திருவெண்காடு. மூலவர் சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர், திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் பிரமவித்யாநாயகி. மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து சுவேதாரண்யரை கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ வலது மேற்கரத்தில் அக்கமாலை உள்ளது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும். தலமரம் வடஆலமரம், கொன்றை, வில்வம். தீர்த்தம் சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள். நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் தல விருட்சத்தின் கீழ் உள்ளது. பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இங்கு தான்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர் மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது. கரையில் சூரிய தீர்த்த லிங்கம் உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் சுவேதாரண்யர், அகோரர், நடராசர் என 3 மூர்த்திகள் உள்ளனர். பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி என 3 அம்பாள் உள்ளனர். சூரிய, சந்திர, அக்கினி என 3 தீர்த்தங்கள் உள்ளது. வடஆலமரம், கொன்றை, வில்வம் என 3 தலவிருட்சம் என்று எல்லாமே மூன்றாக உள்ளது.

சிவபெருமான் பக்தர்களுக்காக 64 வித உருவங்களில் காட்சியளித்துள்ளார். இவர் 43 வது உருவம் ஆகும். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தி இத்தலத்தில் மட்டுமே உள்ளார். இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம். பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. இவர் இங்கு நவதாண்டவம் புரிந்தார். எனவே ஆதி சிதம்பரம் என்றும் பெயர் உள்ளது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை உள்ளது. ஸ்படிக லிங்கமும் சிதம்பர ரகசியம் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது. இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். மூலவர் அகோரமூர்த்தியும் உற்சவ அகோரமூர்த்தியும் இருவருமே இடது காலை முன் வைத்து வலக்காலை அடியெடுத்து வைப்பது போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிறு இரவு 12:00 மணிக்கும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும் மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து அம்மா என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். திருஞானசம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்பாள் சன்னதியின் பிரகாரத்தில் உள்ளது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்த கோயில் இது.

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று நந்தி தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்தது. நந்திதேவர் சிவனிடம் முறையிட சிவன் அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சுவேதாரண்யவரர் சன்னதி மண்டபத்தில் இருக்கும் நந்தியின் உடம்பில் அசுரன் தாக்கிய காயங்களாக ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், ஐராவதம் வெள்ளையானை, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.