சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 265 வது தேவாரத்தலம் மாகாளம். புராணபெயர் இரும்பை மாகாளம். மூலவர் மாகாளேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் குயில்மொழிநாயகி, மதுரசுந்தரநாயகி. அம்பாள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல் தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாள். இதனால் அம்பாளுக்கு குயில்மொழி நாயகி என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தம் மாகாள தீர்த்தம். தலமரம் புன்னை. இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் உள்ளது. அவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம் காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டு இத்தலமான இந்த இரும்பை மாகாளம். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் உள்ளது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிக்கின்றது.
கோவில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. இங்குள்ள விமானம் ஏகதள விமானம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் வலது புறம் விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இக்கோலம் நடராஜரின் சந்தோஷ கோலம் ஆகும். இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன் அம்பாள் நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. பிராகார சுற்றுச் சுவர் உட்புறம் முற்றிலும் விதவிதமான உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன். அங்கங்கே ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. கருவறை முன்புறச் சுவர் முழுவதும் செப்புத் தகட்டால் வேயப்பட்டு தங்கமுலாம் பூசியது போன்று பளபளப்புடன் திகழ்கிறது. துவாரகாலகர்கள், மாகாளர் உருவம், கடுவெளிச்சித்தர் உருவம் செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.
சிவனிடம் வரம் பெற்ற அம்பன் அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி மகாகாளி அவதாரம் எடுத்து தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள் இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும் தெற்கே மயிலாடுதுறை பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் மகாகாளநாதர் என்ற பெயர் பெற்றார்.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலம். அவனது ஆளுகைக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியை குணசீலன் என்னும் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவனது எல்லையில்தான் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் இருந்தது. அதை சிறந்த முறையில்பராமரித்து வழிபட்டு வந்தான். இந்நிலையில் குணசீலனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. மழையின்றி பயிர்களெல்லாம் கருகின. குடிமக்கள் தவித்தனர். இதைக் கண்டு கவலையுற்ற குணசீலன் மாகாளேஸ்வரர் ஆலயத்திற்குச்சென்று இவ்வளவு கொடிய பஞ்சத்திற்குக் காரணம் என்ன என்று மனமுருகிவேண்டி நின்றான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய மாகாளேஸ்வரர் மன்னா நம் ஆலயத்தின் எதிரே குளக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் கடுவெளிச்சித்தர் எனது பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்த வண்ணம் தவம் செய்துகொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி புற்று வளர்ந்து அவர் உடலின் பெரும்பகுதியை மூடிவிட்டது. அந்தநிலையிலும் உக்கிரமான தவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த தவாக்னியின் வெப்பத்தால்தான் இத்தகைய வறட்சி ஏற்பட்டுள்ளது. அவரது தவம் கலைந்தால் தான் மழை பொழியும். அதே சமயம் அவரது தவத்தை பலவந்தமாகக் கலைத்தால் சித்தரின் கோபத்துக்காளாகி அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். எனவே ஏதேனும் உபாயத்தைக் கையாண்டே தவத்தைக் கலைக்க வேண்டும் என்று கூறி மறைந்துவிட்டார்.
தூக்கம் கலைந்து எழுந்த மன்னன் நீண்ட நேரம் யோசித்து சித்தரின் தவத்தை பலவந்தமாக இல்லாமல் கலைக்க பெண்களால் தான் முடியும் என்று முடிவு செய்தான். பொழுது புலர்ந்ததும் கோவிலில் நடனமாடும் சுந்தரவல்லியை அழைத்து மன்னன் தன் எண்ணத்தைக் கூறினான். அதைக் கேட்டு சுந்தரவல்லி மிரண்டு போனாள். எனினும் மன்னன் கட்டளையை மீற முடியாதென்பதால் கடுவெளிச் சித்தர் தவம் செய்யும் இடத்திற்குச் சென்று வணங்கி நின்றாள். சித்தர் கண் விழிப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லாதிருப்பதை உணர்ந்த சுந்தரவல்லி அவரைத் தொட்டு தவத்தைக் கலைக்கலாமா என்று யோசித்தாள். அவ்வாறு செய்தால் சித்தரின் கோபம் தன்னை எரித்து விடும். செய்யாமல் போனாலும் மன்னரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். என்ன செய்யலாம் என்று புரியாமல் தவித்த சுந்தரவல்லி மன்னரின் கோபத்துக்கு ஆளாவதை விட சித்தரால் எரிக்கப்பட்டால் மோட்சமே கிட்டும் என்றெண்ணி அவரது தவத்தைக் கலைக்க முடிவு செய்தாள். அவரையே நெடுநேரம் கவனித்தபடி அவள் நின்றிருந்தபோது அரச மரத்திலிருந்து ஒரு இலை சித்தரின் கையில் விழ அவர் அதைத் தன் வாயிலிட்டு மென்று தின்றார். இதைப் பார்த்த சுந்தரவல்லி சித்தர் அரச இலையையும் காற்றையும் உட்கொண்டே தவத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அவள் மறுநாள் உப்பும் காரமும் சேர்த்த அப்பளத்தை அரச இலை அளவுக்குச் செய்து எடுத்து வந்து சித்தரின் கையில் வைத்தாள். அதை அவர் வாயிலிட வழக்கத்திற்கு மாறான சுவையிருப்பதை உணர்ந்து மெல்ல கண் திறந்தார். அப்போது அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய சுந்தரவல்லி சுவாமி அரசர் உத்தரவுப்படி நான் இவ்வாறு நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருளி என் பாத பூஜையை ஏற்க என் இல்லத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அவ்வாறே அவளை மன்னித்த கடுவெளிச் சித்தர் அவள் இல்லத்திற்குச் சென்று சுந்தர வல்லியின் பாத பூஜையை ஏற்றார். பின்னர் சித்தரிடம் மன்னன் நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும் மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார்.
சித்தரின் தவம் பலவந்தமின்றி கலைந்ததால் வானம் இருண்டது. தொடர்ந்து ஒரு வாரம் அடைமழைபெய்தது. ஏரி குளங்கள் நிரம்பின. ஆறுகள் பெருக்கெடுத்தன. மக்கள் மகிழ்ச்சியோடு விவசாயப் பணிகளைத் துவக்கினர். பஞ்சமும் நீங்கியது. சில மாதங்களுக்குப்பின் மாகாளேஸ்வரருக்கு மிகச் சிறப்பாக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஐந்தாம் நாள் உற்சவத்தில் மன்னன் குணசீலன் கலந்து கொண்டு சிறப்பித்தான். அன்று நடன அரங்கில் சுந்தரவல்லியின் நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மன்னனுடன் திரளான மக்களும் கண்டு களித்துக் கொண்டிருந்த அந்த நடனத்தைக் காண கடுவெளிச்சித்தரும் வந்திருந்தார். ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சுந்தரவல்லியின் காற்சலங்கை கழன்று விழுந்தது. அதைக் கண்ட கடுவெளிச்சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி நொடிப்பொழுதில் அங்கு சென்று கழன்று விழுந்த சலங்கையை எடுத்து சுந்தரவல்லியின் காலில்கட்டினார். இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு நடன மங்கையின் காலை சித்தர் தொடலாமா என்று கடுவெளிச் சித்தரைப் பழித்தனர். அதைக் கண்டு கோபமுற்ற சித்தர் மனித வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்தில் ஒரு பாடலைப் பாடி மாகாளேஸ்வரர் சந்நிதி முன் சென்று இதற்கெல்லாம் காரணம் இவர் தான் என்று மாகாளேஸ்வரரை கோபத்துடன் நோக்கினார். சித்தரின் கடும் கோபத்தினால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி தேவியுடன் தோன்றிய சிவபெருமான் அனைவருக்கும் காட்சி தந்து மறைந்தார்.
இதைக் கண்ட மன்னனும் மக்களும் கடுவெளிச் சித்தரின் மகிமையை உணர்ந்து தங்கள் பிழையைப் பொறுத்தருளுமாறு அவரிடம் மன்னிப்பு வேண்டினர். மேலும் பிளந்த லிங்கத்தை ஒன்றாகச் சேர்க்கும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சித்தர் ஒரு பாடலைப் பாட, பிளவுபட்ட மூன்று பகுதிகளும் ஒன்றிணைந்தன. பின்னர் செப்புத் தகடால் அந்த லிங்கத்தை பந்தனம் செய்தார் சித்தர். இந்த லிங்கம் தான் இன்றளவும் இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் மூலவராக உள்ளார். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி நடந்த சில காலத்திற்குப் பின் அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன் பிளவுபட்ட லிங்கத்திற்கு மாற்றாக வேறொரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய எண்ணி காசியிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வந்தான். அதைப் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது என்னை அப்புறப்படுத்த வேண்டாம் என்று இறைவன் அசரீரி மூலம் ஆணையிட மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டு காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வேறொரு பகுதியில் பிரதிஷ்டை செய்தான். இந்த லிங்கத்தை தற்போது அம்பாள் சந்நிதியின் கிழக்குப் பகுதியில் காணலாம். பொதுவாக உடைந்த லிங்கத்திற்கு பூஜை செய்யக்கூடாது என்பது ஆகம விதியாகும். ஆனால் அதற்கு விலக்காக இரும்பை மாகாளேஸ்வரருக்கு மட்டும் இன்றளவும் பூஜை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரும்பை மகாகாளேஸ்வரரர் திருக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரர் ஊர்த்தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர், பட்டினத்தார் பாடல்கள் பாடியுள்ளனர்.