கஜலட்சுமி

தாமரை நிறைந்த குளத்தில் கஜலட்சுமி பெரிய தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள். தாமரைகளை ஏந்திய இரண்டு கைகளுடன் தலையில் ஒரு அழகான கிரீடம் உள்ளது. அவளுடைய இரண்டு பக்கங்களிலும் கீழே இரண்டு யானைகள் நின்று கொண்டு தும்பிக்கையால் பானைகளில் தண்ணீர் நிரப்பி பானைகளை மேலே நிற்கும் யானைகளிடம் கொடுக்கிறது. மேலே உள்ள இரண்டு யானைகள் அந்த நீரை வாங்கி கஜலட்சுமியின் தலையில் அபிஷேகம் செய்கின்றன. சுற்றிலும் தேவர் தேவதைகள் நின்று இந்த நிகழ்வை கண்கிறார்கள். இந்த கஜலட்சுமியின் சிற்பம் சுமார் எட்டடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்டது. சிதிலமடைந்த நிலையில் தற்போது உள்ளது. இடம் அஜந்தா எல்லோரா குகைகள் அவுரங்காபாத் மகாராஷ்டிரா.

அஷ்ட புஜ சரஸ்வதி

கல்விக்கு தெய்வமான சரஸ்வதி எட்டு ஆயுதம் கொண்டு அருள்பாலிக்கிறாள். பிரம்மா ஒரு அரக்கனுக்கு கொடுத்த வரத்தின் சக்தியினால் அரக்கன் இந்த உலகத்தை கட்டி வைத்தான். உலகம் இயங்காமல் நின்றது. உலகை மீட்டெடுக்க விருப்பப்பட்ட தெய்வங்கள் சக்தி வாய்ந்த எட்டு தெய்வீக ஆயுதங்களை சரஸ்வதிக்கு கொடுத்தார்கள். ஒரு புலி மீது சென்ற சரஸ்வதி அரக்கனை தோற்கடித்து உலகத்தின் மீதிருந்த கட்டை அவிழ்த்து அரக்கனை அழித்தாள். இடம் கட்சபேஸ்வரர் கோவில், பெரிய காஞ்சிபுரம்.

மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி பதினெட்டு திருக்கரங்களுடன் வெவ்வேறு விதமான ஆயுதங்களை ஏந்தி போரில் வென்ற மகிஷன் மீது வலது ஊன்றி கம்பீரமாக காட்சியளிக்கின்றாள். இடம் மகாதேவ் கோவில். பட்டேஸ்வர் சட்டாரா மாவட்டம். மகாராஷ்டிர மாநிலம்.

தசபுஜ துர்க்கை

தச புஜ துர்க்கை வெட்டப்பட்ட எருமையின் உடலில் இருந்து வெளிவரும் அரக்கனின் கழுத்தைப் பிடித்து சூலத்தினால் மார்பைப் பிளக்கும் காட்சி. வாள் கேடயம் அம்பு வில் வஜ்ரம் மணி ஆகிய ஆயுதங்களை வலது இடது கரங்களில் ஏந்தி வலது காலை மகிஷாசுரனின் மேல் வைத்து இடது காலை கீழே வைத்துள்ளார். மடிந்த மகிஷாசுரனின் எருமைத் தலை தனியே துண்டாக கீழே கிடக்க துர்கையின் சிம்ம வாகனமும் பின்னால் இருந்து கடித்து குதற சீறிப் பாய்ந்து வருகிறது. இடம் ஜோத்பூர் மாவட்டம். ராஜஸ்தான்

விஷ்ணுதுர்க்கை

20 கரங்களில் எண்ணற்ற ஆயுதங்களுடன் சம்ஹாரம் செய்யப்பட மகிஷனின் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை. இடம்: ஸ்ரீவனதுர்கை பீடம் இறைவன்காடு வேலூர் மாவட்டம்.

காளி

இராஜேந்திரசோழர் தனது கலிங்கப் போரின் வெற்றியின் அடையாளமாய் கொண்டு வந்த நிசும்பசூதனியின் அரிய சிற்பம். உதட்டு சாயம் போல தெரிவது குங்கும பூச்சு. இடுப்பில் உள்ளது தற்காலச் சங்கிலி. காலடியில் சும்பன் மற்றும் நிசும்பன். இடம்: செங்கல்மேடு அரியலூர் மாவட்டம்.

காளி மரச்சிற்பம்

எட்டு கரங்களைக் கொண்ட காளி தேவி ஈசனுக்கே உரியதான சந்திரப்பிறைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளார். இங்கே இவள் தீயவற்றை அழிக்க கோபத்துடன் பார்க்கும் கண்கள் மற்றும் கோரைப் பற்களுடன் காட்சியளிக்கின்றாள். தேவி அணிந்துள்ள காதணிகளில் வலது காதில் சிங்கத்தையும் இடது காதில் யானையையும் அணிந்திருக்கிறாள். ஒவ்வொரு கைகளிலும் அரிவாள் வில் அம்பு ஈட்டி மண்டை ஓடு சுடர்விடும் ரத்தினம் என்று தமிழில் அறியப்படும் அரிவாள் வடிவ பலி வாள் ஏந்தியிருக்கிறாள். 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மரத்தில் செதுக்கப்பட்ட காளி தேவியின் சிலை தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரம் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.