ராமரின் முன்னோர்கள்

  1. பிரம்மாவின் மகன் – மரீசீ
  2. மரீசீயின் மகன் – கஷ்யபர்
  3. கஷ்யபரின் மகன் – விவஸ்வான்
  4. விவஸ்வானின் மகன் – மனு
  5. மனுவின் மகன் – இஷ்வாகு
  6. இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி
  7. விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா
  8. புரண்ஜயாவின் மகன் – அணரன்யா
  9. அணரன்யாவின் மகன் – ப்ருது
  10. ப்ருதுவின் மகன் – விஷ்வாகஷா
  11. விஷ்வாகஷாவின் மகன் – ஆர்தரா
  12. ஆர்தராவின் மகன் – யுவான்ஷ்வா-1
  13. யுவான்ஷ்வாவின் மகன் – ஷ்ரவஷ்ட்
  14. ஷ்ரவஷ்டின் மகன் – வ்ரதஷ்வா
  15. வ்ரதஷ்வாவின் மகன் – குவலஷ்வா
  16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
  17. த்ருதஷ்வாவின் மகன் – ப்ரோமத்
  18. ப்ரோமத்தின் மகன் – ஹர்யஷ்வா
  19. ஹர்யஷ்வாவின் மகன் – நிகும்ப்
  20. நிகும்பின் மகன் – சன்டஷ்வா
  21. சன்டஷ்வாவின் மகன் – க்ருஷஸ்வா
  22. க்ருஷஸ்வாவின் மகன் – ப்ரஸன்ஜீத்
  23. ப்ரஸன்ஜீத்தின் மகன் – யுவான்ஷ்வா-2
  24. யுவான்ஷ்வாவின் மகன் – மன்தாத்தா
  25. மன்தாத்தாவின் மகன் – அம்பரீஷா
  26. அம்பரீஷாவின் மகன் – ஹரிதா
  27. ஹரிதாவின் மகன் – த்ரதஸ்யு
  28. த்ரதஸ்யுவின் மகன் – ஷம்பூத்
  29. ஷம்பூத்தின் மகன் – அனரண்யா-2
  30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
  31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் – ஹர்யஷ்வா 2
  32. ஹர்யஷ்வாவின் மகன் – வஸுமான்
  33. வஸுமாவின் மகன் – த்ரிதன்வா
  34. த்ரிதன்வாவின் மகன் – த்ரிஅருணா
  35. த்ரிஅருணாவின் மகன் – திரிசங்கு
  36. திரிசங்கு வின் மகன் – ஹரிசந்திரன்
  37. ஹரிசந்திரநநின் மகன் – ரோஹிதாஷ்வா
  38. ரோஹிதாஷ்வாவின் மகன் – ஹரித்
  39. ஹரித்தின் மகன் – சன்சு
  40. சன்சுவின் மகன் – விஜய்
  41. விஜயின் மகன் – ருருக்
  42. ருருக்கின் மகன் – வ்ருகா
  43. வ்ருகாவின் மகன் – பாஹு
  44. பாஹுவின் மகன் – சாஹாரா
  45. சாஹாராவின் மகன் – அசமஞ்சன்
  46. அசமஞ்சனின் மகன் – அன்ஷுமன்
  47. அன்ஷுமனின் மகன் – திலீபன்
  48. திலீபனின் மகன் – பகீரதன்
  49. பகீரதனின் மகன் – ஷ்ருத்
  50. ஷ்ருத்தின் மகன் – நபக்
  51. நபக்கின் மகன் – அம்பரீஷ்
  52. அம்பரீஷனின் மகன் – சிந்து த்வீப்
  53. சிந்து த்வீப்பின் மகன் – ப்ரதயு
  54. ப்ரதயுவின் மகன் – ஸ்ருது பர்ணா
  55. ஸ்ருது பர்ணாவின் மகன் – சர்வகாமா
  56. சர்வகாமாவின் மகன் – ஸுதஸ்
  57. ஸூதஸின் மகன் – மித்ரஷா
  58. மித்ராஷாவின் மகன் – சர்வகாமா 2
  59. சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா3
  60. அனன்ரண்யாவின் மகன் – நிக்னா
  61. நிக்னாவின் மகன் – ரகு
  62. ரகுவின் மகன் – துலிது
  63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
  64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
  65. ரகுவின் மகன் – அஜன்
  66. அஜனின் மகன் – தசரதன்
  67. தசரதனின் மகன் – ஸ்ரீ ராமர்
  68. ஸ்ரீ ராமரின் மகன்கள் – லவ குசா
  69. குசாவின் மகன் – அதிதி
  70. அதிதியின் மகன் – நிஷதா
  71. நிஷதாவின் மகன் – நலா
  72. நலாவின் மகன் – நபா

ராமாயணத்தின் தத்துவம்

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள். ‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா – ராமர்
மனம் – சீதை
மூச்சுக் காற்று – அனுமன்
விழிப்புணர்வு – லட்சுமணன்
அகங்காரம் – ராவணன்

ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர். தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள். பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய வாய் (பேசுதல்) கைகள் (செயல்) கால்கள் (போக்குவரவு) எருவாய் (கழிவுகளை நீக்குதல்) கருவாய் (இன்பமும் பிறப்பும்) ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும் உணர்வு உறுப்புகளாகிய கேட்டல் (காதுகள்) ருசித்தல் (வாய்) முகர்தல் (மூக்கு) பார்த்தல் (கண்கள்) உணர்தல் (தோல்) ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் ஆகும்.

கௌசல்யை என்றால் ஆற்றும் சக்தி (திறன்) என்று பொருள்.

மனம் என்னும் சீதை ஆசை என்னும் ராவணனால் கவரப்படும் பொழுது எதனாலும் பாதிக்கப்படாத ஆத்மா என்னும் ராமர் பரமாத்மாவிடம் இருந்து விலகி நிற்கிறார். அப்போது நமக்குள் பத்து தேர்களாக இருக்கும் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் கௌசல்யை என்னும் திறனை பயன்படுத்தி அடக்கி ஆண்டால் ராமர் என்ற ஒளியை உணரலாம். இந்த ராமர் என்ற ஒளியை மனம் என்னும் சீதையுடன் சேர்க்க லட்சுமணன் என்ற விழிப்புணர்வின் துணையோடு பிராணனை (மூச்சுக்காற்றை) அனுமனின் உதவியோடு கவனித்து மனதை ஆத்மா என்ற பரமாத்மாவோடு ஒருமுகப்படுத்த வேண்டும். அப்போது அகங்காரம் என்னும் ராவணன் அழிந்து விடுவான். அதன் பிறகு மனம் எனும் சீதை ராமராகிய ஆன்மாவோடு ஒன்று சேர்ந்து மனம் எண்ணங்களற்ற நிலையை அடைந்து பேரின்பத்தில் இருக்கும்.

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில் – 2

வால்மீகி ராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இது உண்மையா? இடைச்செருகலா?

மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கத்தான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில் தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒருவேளை அது உண்மை என்றால் அப்பேற்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் பின்னால் வந்த மனிதன் தான் சாப்பிடும் மாமிச உணவிற்கு வசதியாக ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு வசதியாக வைத்துக் கொண்டான்.

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில்

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில்

கேள்வி: ராமாயண காலத்தில் இருந்த இலங்கைதான் தற்போதும் உள்ளதா? அப்போது ராமனால் அமைக்கப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் இருக்கிறதா? சேதுபாலம் தற்போது இடிக்கப்பட்டால் ஆஞ்சிநேயர் ராம பக்தர்களால் மக்களுக்கு துன்பம் நேருமா?

இறைவன் கருணை கொண்டு கூறும்பொழுது ராமன் சென்ற பாதை என்ற பொருளிலே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த சரிதம் என்பது மெய்யிலும் மெய். அடுத்ததாக அப்பொழுது இருந்த இலங்கையின் அளவு இன்னும் இன்னும் பெரியதப்பா. அதன் ஒரு சிறிய பகுதிதான் இப்பொழுது எஞ்சியிருக்கிறது. இன்னொன்று இப்பொழுது கடல் கொண்ட பூம்புகார் போக எஞ்சியுள்ள பூம்புகார் இருப்பது போலதான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை தேசம். அடுத்ததாக பாலம் எல்லாம் இருப்பது உண்மையென்றாலும் கூட மனித கண்ணுக்கு இப்பொழுது அது புலப்படாது. இன்னொன்று இவற்றை சிதைப்பதால் ராமபிரானுக்கோ அனுமனுக்கோ சினம் வந்துவிடாதப்பா. மனிதன் மனிதனாக வாழாமல் பிறருக்கு சதா சர்வகாலம் தொல்லைகள் தந்துகொண்டே தான் நன்றாக வாழ்வதற்கு பலரை இடர்படுத்தி வாழ்கிறானே? அந்த செயல் ஒன்று தான் இறைவனுக்கு வருத்தத்தையும் சினத்தையும் ஏற்படுத்தும். வருத்தமும் சினமும் இறைவனுக்கு இல்லை. கேள்வி கேட்பதால் நாங்கள் கூறுகிறோம். மற்றபடி ராமாயண காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக சில கற்பனை கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் ராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இறைவன் அருளால் இதுபோன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம் நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரும்.

திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்

ராமர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட பின்னர் ராமருடன் இருந்த ஆனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு கிளம்பினார்கள். செல்லும் வழியில் பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கினார்கள். அப்போது அங்கு வந்த நாரதர் யுத்தத்தில் வெற்றி பெற்ற ராமருக்கு தனது வாழ்த்துக்களை சொல்லி அவரிடன் பேச ஆரம்பித்தார். ராவணன் அழிந்த பின்னரும் ராட்சசர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து ரக்தராக்ஷகன் என்ற இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணனை போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர்கள். ஆகையால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு ராமர் தாங்கள் சொன்னபடி அந்த ராட்சசர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த ராட்சசர்களை அழிக்கும் ஆற்றலுடைய மாவீரன்அனுமனை அனுப்புகிறேன் என்றார்.

ராமரின் கட்டளையே பணிவுடன் அனுமன் ஏற்றுக் கொண்டார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அஷ்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான ராட்சசர்களை வெல்ல இது போதாது. எனவே திருமால் தன்னுடைய சங்கு சக்கரத்தையும் பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும் ஶ்ரீருத்ரன் தனது மழுவையும் அனுமனுக்கு அளித்தார்கள். ராமர் தனது வில்லையும் அம்பையும் வழங்கினார். அனைவரும் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கிய அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார். அதன்பின் வந்த கருடாழ்வார் தனது சிறகுகளை அளித்தார். சிவபெருமான் பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்து தன்னுடைய சிறப்புக்குரிய மூன்றாவது கணணை அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்) பத்து கைகளும் (தசபுஜம்) கொண்ட வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்த அனுமன் தனக்கு தரப்பட்ட கடமையை செய்து முடித்துவிட்டு ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் புறப்பட்டார். அனுமன் வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய ஒரு இடத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அவர் தங்கிய இடம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனுமனுக்கு கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியே கோவிலின் முகப்பைப் பார்த்து சதுர்புஜத்துடன் ஒரு கையில் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமியின் சாட்டையையும் ஏந்தி காட்சி அளிக்கிறார். திருக்கடவூர் தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது.

ஜனகரின் அதிகாரம்

ஜனகருடைய ஆட்சியில் அந்தணர் ஒருவர் தவறு செய்து விட்டார். அவரைத் தண்டிக்கத் தீர்மானித்த ஜனகர் நீங்கள் உடனே இந்த ராஜ்யத்தை விட்டு வெளியேறுங்கள் என உத்தரவிட்டார். அதைக் கேட்ட அந்தணர் மன்னா உங்கள் நாட்டின் எல்லை எதுவரை என்று எனக்கு தெரியாது. எல்லை எது என்று சொன்னால் அதைத் தாண்டிச் சென்று விடுவேன் என்றார். ஜனகர் இந்த மிதிலை முழுவதும் என் அதிகாரத்திற்கு உட்பட்டது தானே பிறகு ஏன் இந்த அந்தணர் இப்படி கேட்கிறார் என்று சிந்திக்க ஆரம்பித்தார். எனது அதிகாரம் இந்த அரண்மனைக்குள் மட்டும் தான் இருக்கும். இந்த அந்தணர் என் எல்லையைத் தாண்டி விட்டால் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வார். அதன்பின் அவர் மீது அதிகாரம் செலுத்த என்னால் முடியாது என சிந்தித்தார். சிறிது நேரத்தில் இந்த அரண்மனைக்குள் என் அதிகாரம் செல்லும் என்று நினைத்தது கூட தவறு தான் காரணம் இந்த அரண்மனைக்குள் அமர்ந்து கொண்டு ஜனகராகிய நான் கட்டளை இடுகிறேன். எனது உடம்பே நீ இப்படியே இளமையாக இரு என்று கட்டளையிட்டால் என் உடம்பு என் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இளமையாக இருக்குமா என சிந்தித்தார். என் உடம்பின் மீது கூட எனக்கு அதிகாரம் இல்லை அப்படியிருக்க இன்னொருவரை வெளியேறச் சொல்ல எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கருதினார். மொத்தத்தில் இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும் தனக்குத்தானே அதிகாரம் செய்து கொள்ளக்கூட அதிகாரம் இல்லை என்பது புரிந்தது. எல்லாம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை அவர் சூசகமாகப் புரிந்து கொண்டார்.

ஜனகர் அந்தணரிடம் என் அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த உலகில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் நீங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தண்டனையை ரத்து செய்து விட்டார். அந்தணர் அவரிடம் என்ன இது இவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தும் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்களே என்று வியப்புடன் கேட்டார். மனதில் தோன்றிய அனைத்தையும் அந்தணரிடம் சொன்னார் ஜனகர். அப்போது அந்தணர் தர்மதேவதையாக உருமாறி நின்றார். ஜனகரே உன்னைச் சோதிக்கவே அந்தணராக வந்தேன். தவறிழைத்தது போல நாடகம் ஆடினேன். நாட்டின் எல்லை எது என்று ஒரே ஒரு கேள்வி கேட்க அது உலக வாழ்வின் யதார்த்தத்தை உமக்கு புரிய வைத்து விட்டது. உம் போல உத்தமரை உலகம் கண்டதில்லை என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்.

இந்தக்கதை மூலம் தவறு செய்தவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதனும் கூட தன்னால் தான் உலகம் நடக்கிறது என எண்ணக்கூடாது. கடவுளின் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் மனதில் ஆணவத்திற்கே இடமிருக்காது.

சீதையின் கால்தடம்

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் லெபாக்ஷி என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பாறையில் சீதையின் வலது பாதம் பதிந்த இடமென நம்பப்படுகிறது. இந்தக் கால் தடத்தினுள் வற்றாது நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. எங்கிருந்து நீர் சுரக்கிறது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த பாதத்தில் வற்றாமல் நீர் சுரப்பது சீதையின் பாதம் என்று நம்புவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த கால் தடம் சுமார் இரண்டரை அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்துடனும் இருக்கிறது. இவ்வளவு பெரிய பாதம் எப்படி என்று சிந்திந்தால் இந்தப் பாதத்தின் அளவைக் கொண்டு கணிக்கும் போது சீதையின் உயரம் சுமார் 25 அடிகளாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. அதற்கான வரலாற்றுக் குறிப்புகளாக ராமாயணக் காலத்தில் மனிதர்களின் உயரம் 25 அடிகள் என்கின்றன சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது. திரேதா யுகத்தில் மனிதர்களின் உயரம் 25 அடிகள் எனவும் துவாபர யுகத்தில் 15 அடிகளாகக் குறைந்து தற்போது கலியுகத்தில் ஏழிலிருந்து ஒன்பது அடிகளாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான வரலாற்றுத் தகவல்களையொட்டி எழும் நம் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான விடைகள் கிடையாது.

ஜடாயுவின் இறக்கைகளை ராவணன் வெட்டியதும் ஜடாயு இப்பாறையின் மேல் விழுந்தான். அப்போது அவருக்கு தேவையான தண்ணீரை கொடுக்க வேண்டும் என்பதற்காக சீதை தன் காலைப் பதித்து அதில் நீர் சுரக்கச் செய்தாள். அந்த நீரை ஜடாயு அருந்தி ராமர் வரும் வரை உயிர் வாழ்ந்தார் என்று வரலாறு உள்ளது.

லட்சுமணன்

ராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி பலர் விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராமர் ராவண கும்பகர்ணனை அழித்ததை விட லட்சுமணன் இந்திரஜித்தை அழித்ததே மாபெரும் வீர செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்த்தார்கள். ராமர் ஏதும் அறியாதவர் போல் அகத்தியரிடம் சுவாமி எதை வைத்து அப்படி கூறிகிறீர்கள். ராவணனின் மகன் இந்திரஜித் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். ராமரை பார்த்து சிரித்த அகத்தியர் ராமா அனைத்தும் அறிந்தவன் நீ லட்சுமணனின் பெருமையை என் வாயால் சொல்ல வேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய். நானே அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கூறுகிறேன் என்று பேச ஆரம்பித்தார். ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர் புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்து பிரம்மாவால் இந்திரஜித் என்ற பெயரைப் பெற்றது அனைவருக்கும் தெரியும். நான்முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க வேண்டுமென்று இந்திரஜித்திடம் கோரிக்கை வைத்தார். அதற்கு இந்திரஜித் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான். பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும் அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காமல் இருப்பவனும் அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஆசையோடு ஏறெடுத்து பார்க்காமல் இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறிய வரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். இந்த அறிய வரங்களுக்கு ஏற்ப வாழ்ந்த லட்சுமணன் இந்திரஜித்தை அழித்தான் என்று சொல்லி முடிந்தார்.

ராமர் அகத்தியரிடன் லட்சுமணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அகஸ்தியர் அனைத்தும் அறிந்தவன் நீ ஆனாலும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அறியாதவன் போல் கேள்வி கேட்கிறாய் என்பதை நான் அறிவேன். இதற்கான பதிலை லட்சுமணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லட்சுமணனை அவைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகத்தியர். லட்சுமணன் அவைக்குள் வந்ததும் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கி நின்றான். ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். லட்சுமணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமலும் உறக்கம் இல்லாமலும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறார். எப்படி உன்னால் இதனை செய்ய முடிந்தது. எப்படி இச்செயலை செய்தாய் என்று அனைவரும் அறியும்படி இந்த சபையில் விளக்கமாக சொல் என்று கேட்டுக் கொண்டார்.

ராமரின் கேள்விக்கு லட்சுமணன் பதில் சொல்ல ஆரம்பித்தான். ரிஷிமுக பர்வதத்தில் சீதையை தேடி அலைந்த போது சீதையால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும் போது சீதையின் பாத அணிகலன்களை தவிர வேறு அணிகலன்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை. காரணம் சீதையின் முகத்தை நான் பார்த்தது இல்லை. அவர்களின் பாதத்தை மட்டுமே நான் தினமும் பார்த்து வணங்குவேன். இவ்வாறாக எந்த பெண்ணின் முகத்தையும் பார்க்காதவனாக பதினான்கு ஆண்டுகள் இருந்தேன். வனத்திற்கு உங்களுடன் கிளம்பியதும் எனது மனைவி ஊர்மிளையிடம் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடால் அவளிடம் நீ என்னுடன் வர வேண்டாம் என் முகத்திலும் நீ இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றேன். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. அப்படியே ஆகட்டும் என்று அவளுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அதன் பிறகு வனவாசத்தின் போது நீங்களும் சீதையும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வந்தாள். அப்போது நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன்.

ராமரையும் என் சீதையையும் பாதுகாக்கவே நான் வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீங்கள் ஆட்கொள்ள கூடாது. என் மனைவி ஊர்மிளைக்கு என் தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கி சுகமாக இரு என்று வாக்கு கொடுத்திருக்கிறேன். அதன்படி நீங்கள் எனக்கு கொடுக்கும் தூக்கத்தை எனது மனைவிக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். நித்ராதேவியும் அதற்கு சம்மதித்து எனது தூக்கத்தை எனது மனைவிக்கு கொடுத்து விட்டாள். அதனால் வனவாசத்தின் போது எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் பதினான்கு ஆண்டுகளும் நீங்கள் தூங்கும் நேரம் உங்களுக்கு பாதுகாப்பாக விழித்துக் கொண்டிருந்தேன். https://tsaravanan.com/lakshmanan-urmilai/ நமது குருநாதராகிய விஸ்வாமித்திரர் அவரது யாகத்திற்கு காவல் புரிவதற்காக நம்மை அழைத்துச் சென்றார். அப்போது நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசி எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் உபதேசித்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தேன். அதன் பலனாக பதினான்கு ஆண்டுகளும் எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் இருந்தேன் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன். சபையினர் அருந்த அனைவரும் லட்சுமணனை ஆச்சரியமாக பார்த்தனர். லட்சுமணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லட்சுமணனை ஆரத்தழுவி கொண்டார்.

பத்ராசலம் ராமர் கோவில்

ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடத்தில் உள்ள ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். அவர் ராமனுடைய வரலாற்றை முழுவதுமாக படித்து ராம நாமத்திலேயே இருப்பார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப்பட்ட போது மக்களிடம் வரியாக வசூலித்த பொற்காசுகள் இருந்தது. அந்தப் பொற்காசுகளை அப்படியே கோவில் கட்ட செலவிட்டு விட்டார். இதையறிந்த தானீஷா என்னிடம் அனுமதி வாங்காமல் வரிப்பணத்தை எடுத்து நீ எப்படி கோவில் கட்டலாம் என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்தான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். இந்த நிலையில் ராமர் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பொற்காசுகளை கொடுத்தது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது கோபண்ணாவுக்கு தெரிந்தது. ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். இன்றும் ஆந்திராவில் உள்ள ஒரு மியூசியத்தில் ராமர் நவாப்பிடம் கொடுத்த அந்த பொற்காசுகள் நவாப்பின் பொற்காசுகள் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ராமஜெயம்

கிருஷ்ண ஜெயம் என்றோ நரசிம்ம ஜெயம் என்றோ யாரும் சொல்வதில்லை. ஸ்ரீ ராமஜெயம் என்று மட்டும் ஏன் சொல்லப்படுகிறது என்றால் ராமன் தர்மத்தினுடைய பிரதிநிதியாகத் திகழ்ந்தான். ராமன் என்றால் தர்மம். ராமன் தர்மத்தின் மறு உருவம். ஸ்ரீ ராமஜெயம் என்றால் தர்மத்திற்கு ஜெயம் உண்டாகட்டும் என்று பொருள். எந்த சூழ்நிலையிலும் சுகத்தையும் துக்கத்தையும் ஒரு போல பாவித்துக் கொண்டு அதர்மத்தை அழித்து தர்மத்தை கடைபிடித்து தர்மத்தைக் காப்பாற்றுபவர்களுக்கு அடைக்கலம் தருபவனாக ராமன் விளங்கினான் என்பது தான் ராமாவதாரத்தின் மகிமை தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பதை நிரூபணம் ஆக்கியவர் ராமர். எந்தெந்த உபதேசங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ராமர் நினைத்தாரோ அவற்றை எல்லாம் அவரே வாழ்ந்து காட்டினார். வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தர்மங்களை மேற்கோள் காட்ட தானே அப்பாதையில் சென்று தன் மக்களுக்கு வழி காட்டினார். நாடாள வேண்டும் என்றாலும் சரி இல்லை காட்டுக்கு போக வேண்டும் என்றாலும் சரி இரண்டையும் ஒரே மனோநிலையில் ஏற்றுக் கொண்டவர் ராமர்.