சீதம்ம மாயம்ம தியாகராஜர் கீர்த்தனை

தியாகராஜர் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து ராம ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவருடன் ஒரு உதவியாளர் உட்பட மூவர் வந்து அவரிடம் பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் கோவில்களை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம். அடுத்து ராமேஸ்வரம் செல்ல வேண்டும் இன்று இருட்டி விட்டது. இன்று ஒரு இரவு மட்டும் உங்களது வீட்டு திண்ணையில் தங்கிவிட்டு காலை பொழுது விடிந்ததும் சென்று விடுகிறோம். தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். தியாகராஜர் இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கி வரவேற்றார். இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இரவு உணவிற்கு ஏற்பாடு செய்கிறேன் இங்கேயே நீங்கள் திருப்தியாக சாப்பிடலாம் என்று சொல்லி அவர்களை அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு இவர்கள் சாப்பிடுவதற்கு இரவு உணவை ஏற்பாடு செய்துவிடு என்றார். வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை. இப்போது ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது என்று சிந்தித்தாள். பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வரலாம் என்று நினைத்தவள் வந்தவர்களுக்கு தெரியாதவாறு அரிசி வாங்கிவர பாத்திரத்தை எடுத்து யார் கண்ணிலும் படாமல் புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்தாள். இதனை கவனித்த முதியவர் அவளை தடுத்து நிறுத்தினார். அம்மா எங்களுக்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். எங்களிடம் வேண்டிய அளவு தேனும் தினைமாவும் இருக்கிறது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றார். அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை வியப்புடனும் தர்மசங்கடத்துடனும் பார்த்தாள். தேனும் தினைமாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் கொடுத்தார் முதியவர். தயக்கத்துடனும் அதனை பெற்று கொண்டவள் ரொட்டியை செய்து முடித்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

தியாகராஜர் அவர்களுடன் விடிய விடிய பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு கட்டத்தில் உறங்கி போனார். பொழுது விடிந்தது காலைக் கடன்களை முடித்து விட்டு கூடத்தில் அமர்ந்து வழக்கம் போல ராம நாமத்தை செபித்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். அவரின் எதிரே வந்த விருந்தினர்கள் மூவரும் நாங்கள் விடை பெறுகிறோம். இங்கே தங்க இடம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று மூவரும் கிளம்பினார்கள். தியாகராஜர் அவர்களை வழியனுப்ப அவர்களுடன் வாசலுக்கு வந்தார். அவர்கள் மூவரும் வாசலை கடந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் செல்வதை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் சட்டென்று ஒரு தெய்வீக காட்சி தெரிந்தது. இப்போது அந்த வயோதிகர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி சீதையாகவும் அந்த உதவியாளர் அனுமனாகவும் தோற்றமளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு ஏற்பட்டது. கண்களில் நீர் சுரக்க தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் தியாகராஜர்.

ராமா என் தெய்வமே தசரதகுமாரா ஜானகி மணாளா நீயா என் இல்லத்துக்கு வந்தாய் என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் என்று சொன்னாயே உன் காலை பிடித்து அமுக்கி உன் கால் வலியை போக்குவதை விட்டு உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே. மகாபாவி நான் என் வீட்டில் உண்ண உணவு கூட இல்லை என்று அறிந்து கொண்டு ஆகாரத்தை கொண்டு வந்து ஒரு தாய் தந்தையாய் இருந்து எங்கள் பசியையும் போக்கினாயே உனக்கு அநேக கோடி நமஸ்காரம் என்று நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர். அப்போது அவர் சீதம்ம மாயம்ம என்ற கீர்த்தனையை அவரையும் அறியாமல் பாட ஆரம்பித்தார்.

செந்தூரம்

ராமரின் அரசவைக்கு செல்ல சீதை தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார். சீதையை அரசவைக்கு அழைத்துச் செல்ல ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்டார். சீதையும் கேள் என்றாள். நீங்கள் ஏன் தினசரி உங்கள் நெற்றி வகிட்டில் செந்தூரத்தை வைத்துக் கொள்கிறீர்கள் அது ஏன் என்று கேட்டார். என் கணவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக வைத்துக் கொள்கிறேன் என்றாள் சீதை. அனுமன் சீதையை அரசவையில் விட்டு விட்டு. நான் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அனுமன் சில நிமிடங்கள் கழித்து தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்தார். அனுமா இது என்ன கோலம் என்று ராமர் கேட்டார். அதற்கு அனுமன் அன்னை நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிறு செந்தூரம் தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால் நான் தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை தினமும் பூசிக் கொண்டேன் என்றார். இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும் வெகுளித்தனத்தையும் நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

கோதண்டராமர்

ராமருக்கு உதவி செய்வதற்காக விபீஷணன் ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமர் இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில் ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு கோதண்டராமர் என்று பெயர். இவரது அருகில் அனுமனும் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார்கள். விபீஷணனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் வங்காளவிரிகுடா மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

பிரம்மா பதவிக்கு வரப்போகும் அனுமன்

ராமர் தன் யுக காரியம் முடிந்த நிலையில் தன்னுடன் இருந்தவர்களை வைகுண்டத்திற்கு அழைத்தார். அனைவரும் புறப்பட்டனர் ஆனால் அனுமன் மட்டும் வைகுண்டம் செல்ல விரும்பவில்லை. தான் இன்னும் சிறிது காலம் பூலோகத்திலிருந்து கொண்டு ராமரை தான் முதன் முதலில் சந்தித்த வினாடியிலிருந்து ராம காரியத்தில் ஈடுபட்டு, பட்டாபிஷேகம் முடியும் வரை, ராமருடன் தான் கழித்த பொழுதுகளை அணு அணுவாக அசைபோட்டு ஆனந்திக்க விரும்புவதாகவும் ராம தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்க பூலோகம் தான் தகுதியான இடம் என்றும் ஆகவே தான் இங்கேயே இருக்க விரும்புவதாக ராமரிடம் கூறினார்.

ராமர் இதை கேட்டதும் மகிழ்ந்து ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாய் இருக்க ஆசீர்வதித்து மகேந்திரகிரி சென்று தவம் புரியுமாறு சொன்னார். அவருடைய தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பஞ்ச முகங்களை அருளி எத்திக்கிலிருந்தும் எந்த சோதனையும் ஏற்படாத வகையில் ஆஞ்சநேய, ஹயக்ரீவ, நரசிம்ம, கருட, ஆதிவராக மூர்த்திகளின் திரு முகங்களையும் அவர்களுடைய சக்திகளையும் உனக்குத் தந்தேன். அடுத்து வரும் பிறவியில் நீ தான் பிரம்மா என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

கலியுகம் முடிந்ததும் ஒரு யுகம் வரப்போகிறது அந்த யுகத்தில் ஆஞ்சநேயர்தான் பிரம்மா அதற்காக அவர் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு தவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிற இடம் தான் மகேந்திரகிரி.

ராமரைப் பற்றி காஞ்சி மகா பெரியவர் அருளியது

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல் ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால் அது ராமர்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான். சுக துக்கங்களில் சலனமடையாமல் தான் ஆனந்தமாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப் போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

மக்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ராமராக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும் இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள் சாஸ்திரம் இப்படிச்சொல்கிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகலவேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ அவனே அந்த வேததர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு வாழ்ந்தான். அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு ராமர் என்னும் வேடத்தில் ஸ்ரீமந்நாராயணன் வாழ்ந்தான்.

துளசிதாசர்

துளசிதாசர் காசியில் கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசிப்பார். எப்போதும் ராமநாம செபம் செய்த படி இருப்பார். இரவில் அசுவமேத கட்டிடத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ராம நாமத்தை சொல்லி ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த ராம நாம நீரை குடித்ததும் தாகம் அடங்கி அதற்கு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைந்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப்பட்டது. உரக்க ராமா ராமா என்று சத்தமிட்டு கூவினார். அப்போது அந்த ஆவி கூறியது. பெரியவரே பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன் சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்றார். அதற்கு ஆவி இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே என்றது. திகைத்த துளசிதாசர் எப்படி என கேட்டார். அதற்கு ஆவி உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. அவரிடம் கேட்டால் ராம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வார் என்றது. மேலும் திகைத்த துளசிதாசர் அனுமன் வருகிறாரா எனக்கு தெரியாதே என்றார் துளசிதாசர். ஆமாம் நீங்கள் நாளும் ராமாயணம் கதாகலட்சேபம் செய்யும் போது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே மக்களுக்கு பின்னால் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அங்கு வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து மக்கள் திரும்பும் போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் அவர் செல்வார் என்றது ஆவி. துளசிதாசருக்கு ஆர்வம் மேலிட்டது. அவர் எப்படி இருப்பார் என்று கேட்டார் துளசிதாசர். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு ஆவி சென்றது.

துளசிதாசர் அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அனுமனை கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருந்தார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி ராமன் எப்போது வருவாரோ என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறாள். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் கேட்கிறாள் புலம்புகிறாள். ராமா என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா? உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? நான் உன்னை தேடி வர முடியாதே? யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் துளசிதாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம். பின் வெகு நேரம் ஆகியும் துளசிதாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர். எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ அஞ்சன புத்ரா என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது.

துளசிதாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் கண் விழித்து நான் எங்கிருக்கிறேன் என்று வினவினார். இது தான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். இங்கே அமர்ந்து ராம நாமத்தை செபியுங்கள் செய்யும். ராம தரிசனம் கிடைக்கும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீங்கள் ராம நாமத்தை சொன்னால் உங்களுடன் நான் இருப்பேன் என்று கூறிய அனுமன் அங்கிருந்து மறைந்து விட்டார். துளசிதாசரும் ராமஜபம் செய்தார். ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக்கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள் வந்தார்கள். இவர்களை பார்த்த துளசிதாசருக்கு சந்தேகம் வந்தது. வந்தவர்களின் தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் துளசிதாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார்கள். இவர்களை பார்த்த துளசிதாசர் இவர்கள் பெரிய வீரர்கள் என்றாலும் என் ராம லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்க கவசமும் தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக்கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

துளசிதாசரிடம் சிறிது நேரம் கழித்து வந்த அனுமன் ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா என்று கேட்டார். திடுக்கிட்ட துளசிதாசர் பார்க்கவில்லையே என்றார். அதற்கு அனுமன் இந்தப் பக்கமாகதானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார். வந்தது ராம லட்சுமணர்களா ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ராமர் உங்கள் விருப்பப்படி தான் வர வேண்டுமா? அவரின் விருப்பப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே துளசிதாசர் சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாதவன் நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். இன்னும் ஒருமுறை தயவு செய்யுங்கள். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார். சரி நீங்கள் அருகில் இருக்கும் மந்தாகினி நதியில் இறங்கி நீராடி ஜபம் செய்யுங்கள். ராமரின் தரிசனம் கிடைக்கும் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடி நீராடி ராம நாம செபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார். நதியில் நீராடுதல் இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் தங்களிடம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது தருகிறேன் என்று சந்தனத்தை எடுத்தார். சந்தனம் கேட்டவர்கள்எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றார்கள்.

துளசிதாசரும் அதற்கென்ன நாமம் போட்டு விடுகிறேன் என்று இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைத்தார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை காட்டினான். துளசிதாசர் இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்த்தது. பார்த்தவுடன் மெய் மறந்து சிலை போல் இருந்தார் துளசிதாசர். அந்தப் இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டு அவருடைய நெற்றியிலும் வைத்தான். தன்னுடன் வந்தவனுக்கும் வைத்தான். அப்போது அவர்கள் உட்கார்ந்திருந்திருந்த படித்துறைக்கு அருகே இருந்த மாமரத்தில் ஒரு கிளி கூவியது.

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர

பொருள்: சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.

துளசிதாசர் கிளியின் சத்தத்தின் பொருளை உணர்ந்து திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். துளசிதாசரை என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர். மறுகணம் ராம லட்சுமணர்கள் மறைந்தார்கள்.

குளிகை

ராவணனின் மனைவியான மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அச்சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என இருக்க இலங்கை வேந்தன் தனது குலகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்து யாராலும் வெல்ல முடியாத வீரமும் மிகுந்த அழகும் நிறைந்த அறிவும் கொண்ட மகன் தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் வேண்டுகோள் விடுத்து அதற்கான வழிமுறைகளையும் அவரிடம் கேட்டான். அதற்கு சுக்கிராச்சாரியார் கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை கூறினார். உடனடியாக நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து ஒன்றாக அடைத்து விட்டான் ராவணன். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் தவித்துப் போனார்கள். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப் போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும் அதற்கும் தாங்கள் தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டு அது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார்கள். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்கள் ஒன்பது பேரைத் தவிர நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் ராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம் என்றார்.

சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். சனீஸ்வரன் ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது. குளிகன் (மாந்தன் எனவும் அழைப்பர்) பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். குழந்தை பிறந்து முதன் முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடி மின்னலுடன் அடர்மழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். அவன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று இந்திரனை வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான். இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்ததால் குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மிதக்கும் பாறைகள்

விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் ஒரு சமயம் கங்கைக் கரையில் மரங்களின் கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் திரிவதுமாக இருந்தான். அப்போது சற்று தூரத்தில் ஒரு அந்தணர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்து கொண்டிருப்பது அவன் கண்களில் பட்டது. மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்துக் கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான். கோபம் கொண்ட அந்தணர் நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று சாபமிட்டார். அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நின்றன.

தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகளுடன் ராமர் பயன்படுத்திய பாறைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பூரி ஜெகநாதர் கோவில் குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ் பத்திரிநாத் அலகாபாத் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை. புதுச்சேரியில் உள்ள அனுமன் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்.

அக்னி தீர்த்தம்

ராமர் சீதையின் புனிதத்தை உலகிற்கு காட்டுவதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார். சீதையின் புனிதத்தில் அக்னி மிகவும் வெப்பமடைந்து தாங்க முடியாத வேதனையை அனுபவித்தான். அக்னியைப் பார்த்த ராமர் நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள் என்றார். அக்னிபகவான் அந்தப் பகுதி கடலில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடம் அக்னி தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும். இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர் ஆசிர்வதித்தார்.

முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமான போது இந்த கோவிலும் சிதைந்து போனது. அந்த புயலுக்கு பின்னர் அங்கிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகள் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டன. தனுஷ்கோடி அழிந்த பிறகு ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

ஜனாபாய்

ராமயணத்தில் கைகேயிடம் பணியாளாக இருந்தவள் கூனி. கைகேயியை ராமனுக்கு எதிராகத் தூண்டி பாவத்தை சேர்த்துக் கொண்டவள். இவளே கிருஷ்ணரின் அவதாரத்தில் கம்சனுக்கு சந்தனம் பூசி விடும் பணி செய்தாள். கம்சனின் நாட்டுக்கு வந்த கிருஷ்ணனை பார்த்து மெய் மறந்து அவனுக்கும் சந்தனம் பூசினாள். அதன் பலனாக அவளது கூனை கிருஷ்ணன் நிமிர்த்தினான். அடுத்த பிறவியில் பாண்டுரங்க பக்தையான ஜனாபாய் என்ற பெயரில் பிறந்தாள்.

பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம் பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண் குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர் திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும் தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்ற ஞானி ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார். கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பாண்டுரங்கனின் சிறந்த பக்தரான நாமதேவர் சிறுவயதிலேயே சிறந்த ஞானியாக விளங்கியவர். நூறு கோடி பாடல்கள் பாடி இறைவனுக்கே உணவளித்த பாக்கியம் பெற்றவர். தன் தாய் குனாயி அம்மையாரிடம் ஜனாபாயை ஒப்படைத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்

நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஒருநாள் இரவு கடும் காற்றுடன் மழை பெய்ததால் நாமதேவரின் வீட்டுச் சுவர் ஈரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதைக் கண்ட பாண்டுரங்கன் தன் பக்தனின் துன்பத்தை துடைக்க தானே நேரில் வந்து மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினார். பாண்டுரங்கனைக் கண்ட நாமதேவரும் ஜனாபாயும் அவரது திருவடியில் விழுந்து வணங்கினர். பகவானுக்கு சேவை செய்யும் பாக்கியம் ஜனாபாய்க்கு கிடைத்தது. வேகமாக வெந்நீர் தயார் செய்து சேறாகி இருந்த அவரது பட்டு பீதாம்பரத்தை வாங்கி துவைத்து உலர வைத்தாள். அதுவரை பாண்டுரங்கன் ஜனாபாயின் கந்தல் துணியை உடுத்திக் கொண்டார். அது அவரது திருமேனிக்குப் பொருத்தமாகவும் இருந்தது. பீதாம்பரம் உலரும் வரை பாண்டுரங்கன் சிறிது நேரம் கண்ணயர விரும்பினார். அவர் படுத்துக் கொள்வதற்கு வசதியாக தன் அறையில் இருந்த பழைய துணிகளையும் சாக்கு பைகளையும் ஜனாபாய் விரித்தாள். பகவானின் பாதங்களை மெதுவாகப் பிடித்து விட்டாள். ஆதிசேஷனின் மலர்ப்படுக்கையில் அயர்ந்து உறங்கும் பாண்டுரங்கன் வைகுண்டத்தை விட இங்கு சுகமாக தூக்கம் வருகிறதே என்று அழுக்குத் துணியிலேயே நன்றாகத் தூங்கி எழுந்தார். பிறகு ஜனாபாய் உடவு பரிமாற நாமதேவர் குடும்பத்தாருடன் பாண்டுரங்கன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.

நாமதேவர் பாண்டுரங்கனுக்கு தன் கையால் சோற்றை ஊட்டி விட அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த ஜனாபாய் தனக்கும் அது போல் பாக்கியம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டாள். இதை அறிந்த பாண்டுரங்கன் அவளது அறைக்கு சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாபாயிடம் எனக்கும் ஒரு கவளம் ஊட்டி விடு தாயே என்று கேட்டுக் கொண்டார். ஆனந்தக் கண்ணீர் வழிய அவள் பாண்டுரங்கனுக்கு ஊட்டி விட்டாள். நிஜபக்தி ஒன்றுக்கே கட்டுப்படும் பாண்டுரங்கன், ஜனாபாயின் மடியிலேயே தலை வைத்து படுத்து விட்டார். பிறகு அவள் பகவானின் தசாவதார லீலைகளைப் பாடலாகப் பாடியபோது ரசித்து மகிழ்ந்தார். ஜனாபாய் உரலில் மாவு அரைத்தபோது தானியத்தை தன் கையால் தள்ளி விட்டு உதவியும் செய்தார்.

நாமதேவரின் பக்தியையும் ஜனாபாயின் பக்தியையும் உலகிற்கு தெரிவிக்க திருவுள்ளம் கொண்டார் பாண்டுரங்கன். தன் பட்டு பீதாம்பரம் ஜனாபாய் வீட்டுக் கொடியில் காய்ந்து கொண்டிருக்க அவளின் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டு மறைந்து போனார். கோவிலின் கதவை மாலை நேர வழிபாட்டிற்காக திறந்த அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். பாண்டுரங்கன் அணிந்திருந்த அருமையான காசி பட்டும் ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன. ஒரு கந்தல் துணி சிலையில் சுற்றப்பட்டிருந்தது. ஜனாபாயின் குடும்பத்திற்கு மிகவும் பழக்கமான அர்ச்சகர் இது ஜனாபாயின் துணி போல இருக்கிறதே என்று சொல்ல எல்லாரும் நாமதேவரின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த பட்டு பீதாம்பரத்தைப் பார்த்து இவள் தான் பாண்டுரங்கனின் பீதாம்பரத்தையும் ஆபரணங்களையும் திருடிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று சொல்லி வீட்டில் சோதனை செய்யத் தொடங்கினர். அவளது படுக்கை அறையில் ஆபரணங்கள் இருந்தன. அவளிடம் நகைகளை எப்போது திருடினாய்? பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே? என்று விசாரித்தனர். ஜனாபாய் இதற்கெல்லாம் கலங்கவில்லை. நான் தவறு செய்யாதவள். அப்படி தவறு செய்ததாக நீங்கள் கருதினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் எனக் கூறி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள். அவள் பொய் சொல்வதாக நினைத்த அர்ச்சகர்கள் அரசனிடம் புகார் கூறினர். அவளை பொதுவீதியில் கழுவேற்றும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. ஜனாபாயை கழுமர மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.

ஜனாபாய் கழுமரத்தைப் பார்த்து கைகூப்பி விட்டல விட்டல ஜெய ஜய விட்டல என்று பாடினாள். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. பாண்டுரங்கன் ஓடி வந்து ஜனாபாயைத் தழுவிக் கொண்டு உன் நிஜபக்தியை உலகிற்குத் தெரிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று சொல்ல ஜனாபாய் அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள். ஜனாபாயின் புகழும் அவளது கீதங்களின் உயர்வும் நாடெங்கும் பரவியது. பாண்டுரங்கனே நேரில் வந்து ஜனாபாய் மற்றும் நாமதேவரின் பாடல்களை எழுதி தொகுத்தும் கொடுத்தார். அமுதமயமான அந்த பாடல்களே இன்றும் பண்டரிபுரத்தில் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.