தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 241 செய்யாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 241 வது தேவாரத்தலம் செய்யாறு. புராணபெயர் திருவோத்தூர், திருஓத்தூர். மூலவர் வேதபுரீஸ்வரர், வேதநாதர்.. இறைவன் இத்தலத்தில் சதுர ஆவுடை வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தினந்தோறும் இறைவன் மீது சூரியஒளிக்கதிர் படும். அம்பாள் பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி. அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார். தலமரம் பனைமரம். தீர்த்தம் மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம், சேயாறு. சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் செய்யாறு என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும். சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம் 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து 2வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்திற்கும் 2வது கோபுர வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. நந்தி சுவாமியை நோக்கியில்லாமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கறது.

இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருந்தார். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இத்தலமும் ஒன்று. கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் அனைவரையும் தரிசிக்கலாம். சண்டேஸ்வரர் ஒரு காலை மடக்கி ஒரு காலைத் தொங்கவிட்டு ஒருகையில் மழுவுடன் ஒரு கையை மடக்கிய காலின் தொடை மீது வைத்தவாறு காட்சி தருகிறார். சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை திருஞானசம்பந்தர் மீது ஏவினர். திருஞானசம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகலிங்கத்தில் கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதற்கு மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை, அதற்கு மேல் 11 சர்ப்பம், அதற்கு மேல் லிங்கம் அதற்கு மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது. பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றது. கோவிலில் உள்ள 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும். சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது. முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கின்றார். இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

ஒத்து என்றால் வேதம் மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர் சிவனடியார்களிடம் எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இது பற்றி கூறினர். உடனே திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது திருஞானசம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்குகின்றன. தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். விசுவாவசு என்னும் மன்னனிடம்தோற்று ஓடி காட்டில் திரிந்த தொண்டைமான் என்னும் மன்னன் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி விசுவாவசுவுடன் போரிட்டு வெற்றி பெருமாறு பணித்தார். இதனை கேட்ட மன்னன் எங்ஙனம் போரிடுவேன் என்று அஞ்சியபோது நந்தி உனக்கு படைத் துணையாக வருவார் நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக என்றார். மேலும் நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றேன் நீ போய்ப்பார் அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார் என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க அவனுக்கு படைத்துணையாகும் நிலையில் மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப அவனும் அவ்வாறே சென்று விசுவாவசுவை வென்றான்.

ராஜாதிராஜன், குலோத்துங்கன், ராஜேந்திரன், விக்ரமசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இறைவன் ஓத்தூர் உடைய நாயனார் என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும் நிவேதனத்திற்கும் அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள்.

2 thoughts on “தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 241 செய்யாறு

  1. Prakash D Reply

    Respected sir
    This temple is 241 temple
    Do you have any supportive reference.
    Because I read in one website telling it is 189 th temple
    Kindly help sir

    • Saravanan Thirumoolar Post authorReply

      1. தேவாரம் பாடல்களை பாடியவர்கள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் இவர்கள் எந்த கோவிலில் முதலில் பாடினார்கள் இரண்டாவது பாடினார்கள் என்ற இந்த எண்ணிக்கை வரலாறு தற்போது யாரிடமும் இல்லை.

      2. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இந்தக் கோவில் தேவாரம் பாடல் பெற்றது நம்பர் 1 இந்த கோவில் தேவாரம் பாடல் பெற்றது நம்பர் 2 என்று எண்ணிக்கை வைத்தவர்கள் யார் என்ற சரியான வரலாறு எமக்கு தெரிந்து இல்லை. பெரிய புராணத்தில் வரும் பாடல்களை வைத்து பிரித்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம். இப்பொது இருக்கும் எண்ணிக்கை சிலர் தங்களுக்கு தெரிந்த வரையில் பிரித்து வைத்திருக்கிறார்கள் என்றே கருதுகிறோம். பல வலைதளங்களில் பல வகைகளில் எண்ணிக்கை இருக்கிறது. இது தான் இந்த கோவிலின் எண் என்று சொல்பவர்கள் யாரிடமும் சரியான ஆதாரம் இருப்பது போல் எமக்கு தெரியவில்லை. எமக்கு தெரிந்த வரையில் யாம் எண்ணிக்கை வைத்து பதிவேற்றி இருக்கிறோம்.

      3. எந்த கோவில் எந்த எண்ணிக்கையில் இருந்தால் என்ன ஐயா! எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருந்தால் இறைவனை விட்டு விடுவோம் ஐயா! நன்றி

Leave a Reply to Prakash DCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.