தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 269 திருக்கோணமலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 269 வது தேவாரத்தலம் இலங்கையில் உள்ள திருக்கோணமலை. மூலவர் கோணேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். பிரம்மா வடிவமைத்து வாயு பகவானால் எடுத்து வந்து வைக்கப்பட்டவர் தக்ஷிண கைலாய மலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆவார். அம்பாள் மாதுமையாள். தீர்த்தம் பாவநாசம். தலமரம் கல்லாலமரம். முதலில் கல்லால மரத்துக்கு பூஜை செய்துவிட்டு பின்னரே மூலவர் மற்றும் கோயில் சன்னதிகளில் பூஜை நடைபெறுகிறது. 33 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது. இக்கோவில் பதினெட்டு மகாசக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் திபெத்திலுள்ள திருக்கயிலாய மலையினையும் சிதம்பரம் கோயிலையும் திருகோணமலையையும் கந்த புராணத்தில் மிக முக்கிய மூன்றினுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்தன. இங்கு மகாவலி கங்கை அருகிலுள்ள கடலுடன் கலப்பதால் இப்பகுதி முழுவதும் நீர்வளம், நிலவளம் பெற்று செழிப்பாக இருந்தது. மேலும் குறிஞ்சியும், நெய்தலும், முல்லையும் ஒன்று சேருமிடத்தில் இத்தலம் அமைந்திருந்தது.

சமுத்திரக்கரை ஓரமாக மலை அடிவாரத்தின் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பிறகு கி.மு 306 ல் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் கடலில் மூழ்கி விட்டதாகவும் இன்னும் மலையின் அடியில் கடலுக்கு மிக அருகில் மலைக்குகை போன்ற பண்டைய கால கோயிலை நினைவுபடுத்தும் பகுதிகள் காணப்படுகின்றன. இத்தலத்திற்கு திருக்குணமலை, திருமலை, தட்சிண கயிலாயம், கோகர்ணம், திரிகூடம், மச்சேஸ்வரம் எனப் பல பெயர்கள் உண்டு. அக்காலத்தில் தாமரைத்தண்டு நூலினால் திரி செய்து விளக்கேற்றி இக்கோயிலில் வழிபட்டு வந்தனர். இதன் காரணமாக திரிதாய் என்ற பெயரும் உண்டு. 1624 ல் ஏற்பட்ட போர்த்துக்கீசிய படையெடுப்பில் இத்தீர்த்தக் கேணியையும் சுனையையும் தூர்த்து விட்டனர். தற்போதுள்ள கேணிதீர்த்தம் ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளது. இக்கோயிலை பல்லவர்கள் சோழர்கள் பாண்டியர்கள் மற்றும் பல அரசர்கள் திருப்பணிகள் செய்து மிக நல்ல நிலையில் வைத்திருந்தனர். ஏராளமான தங்க நகைகளும் நவரத்தினங்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக இருந்தன. 1624 வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில் சுவாமி மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் நகர்வலம் வந்த வேளையில் போர்ச்சுகீசியத் தளபதி வீரர்களுடன் பக்தர்கள் போல வேடமிட்டு கோயிலினுள் நுழைந்து அங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்று விட்டு கோயிலிலிருந்த தங்க நகைகள் நவரத்தினங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். ஆசியாவிலேயே மிகச் செழிப்பான செல்வவளம் கொண்ட இக்கோயில் முற்றிலும் சூறையாடப்பட்டது.

இதனை கேள்வியுற்ற பக்தர்களும் அர்ச்சகர்களும் சில முக்கிய விக்கிரகங்களை உடனடியாக அகற்றி குளங்களிலும் கிணறுகளிலும் மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்களை அருகிலுள்ள தம்பலகாமம் என்ற இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து ரகசியமாக பூஜை செய்து வந்தனர். அந்த இடத்தில் தற்போது ஆதிகோணநாதர் என்ற பெயரில் இறைவன் திருவருள் பாலிக்கிறார். பின்னாளில் திருக்கோணமலை கோயிலுக்குச் சொந்தமான மானியங்களில் பெரும்பகுதி இக்கோயிலுக்கும் சொந்தமாயிற்று. பராந்தக சோழனுக்குப் பயந்து பாண்டிய மன்னன் இலங்கையில் பாதுகாப்பாக மறைந்திருந்த காலத்தில் ஆதிகோணேச்சுவரருக்கு பல திருப்பணிகள் செய்து வழிபட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது.

இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரிய தீர்த்தக் கேணியும் மற்றும் பிற மண்டபங்களும் இருந்தன என்பதை விஸ்பன் நகரில் உள்ள வரலாற்றுச் சான்றான படத்தின் மூலம் அறிய முடிகிறது. 16-ம் நூற்றாண்டில் வந்த குளக்கோட்டன் என்ற மன்னன் இக்கோயிலை மீண்டும் புதுப்பித்தான் மன்னனின் திருப்பணி மட்டுமின்றி சோதிட ரீதியில் குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை போர்த்துகீசியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று கோயிலின் எதிர்காலம் பற்றிய 16ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டும் உள்ளது. 1000 தூண்கள் என்றழைக்கப்பட்ட இக்கோயிலின் தூண்களையும் கற்களையும் பெயர்த்து எடுத்த பின்பே கோயிலை பறங்கியர்கள் தரைமட்டமாக்கினார்கள். அத்தூண்களையும் கற்களையும் கொண்டு புகழ்பெற்ற பிரட்ரிக் கோட்டையை பலப்படுத்திக் கட்டியதாக வரலாறு உள்ளது. பறங்கியர் தளபதி இக்கோவில் கோபுரத்தை பார்த்து உருகி தன் படையில் ஓவியம் வரைபவனைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான். அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது.

மிகப் பழைய காலத்திய இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன. போர்ச்சுக்கீசிய படையினால் சிதைவிடைந்த இக்கோயிலின் ஒரே ஒரு தூண் மட்டும் பின்னர் 1870 ல் சுவாமி பாறைக்கு அருகில் நினைவுச்சின்னமாக பக்தர்களின் துணையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதும் எவ்வித பூஜைகளும் இங்கு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமிகள், பக்தர்கள், சுவாமி பாதைக்குச் சென்று பூ, பழம், தேங்காய் உடைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். பின்னர் 1944 ஆம் ஆண்டில் திருகோணமலை கோட்டையினுள் நீர்த்தேக்கம் அமைக்க அகழாய்வு செய்தபோது சில விக்கிரகங்கள் கிடைத்தன. பின்னர் 1950 ஆண்டில் கடற்கரை அருகில் பொதுக்கிணறு தோண்டியபோது மேலும் சில விக்கிரகங்கள் கிடைத்தன. இறையருளால் அனைவரும் வியக்க மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவை அனைத்தும் 1952 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு மீண்டும் இக்கோயில் புத்துயிர் பெற்றது. பழைய கோயிலுடன் ஒப்பிடுகையில் இது சிறிய கோயில். இருப்பினும் எம்பெருமான் திருவருளினால் மீண்டும் அனைத்து விக்கிரகங்களும் வெளிப்பட்டது.

கோவிலில் பாண்டியனின் கயல் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது. இக்கோயிலின் தொன்மையை உணர்த்துகிறது. ராவணன் தனது தாயாரின் சிவபூஜைக்காக தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாக தட்சிண கயிலாய புராணத்தில் உள்ளது. இதற்குச் சான்றாக ராவணன் வெட்டு என்ற மலைப்பிளவு இன்னும் இப்பகுதியில் காணப்படுகிறது. கடல் சீற்றத்திற்குப் பிறகு கோயில் அருகிலுள்ள சுவாமிலை எனப்படும் குன்றின் உச்சியில் கோயில் மீண்டும் அமைக்கப்பட்டது. திரேதா யுகத்தில் ராவணன் இந்த ஆலயப் பகுதியில் வந்திருந்தபோது மரணம் அடைந்துவிட்ட அவனுடைய தாயாருக்கு கர்மாக்களை அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவின் மூலம் செய்தான். அப்போது விஷ்ணு பகவான் அவனுக்கு அந்தத் தலத்தின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஏழு இடங்களில் தனது தடியினால் தட்டி ஏழு சுனைகளை எழுப்பினார். அதைக் கண்ட ராவணன் வந்துள்ளவர் விஷ்ணு என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு அந்தணருக்கு அத்தனை மகிமை உள்ளதா என வியந்திருக்கிறான். பாதாளத்தில் இருந்து எழுந்திருந்த அந்த ஏழு சுனைகள் விஷ்ணு பகவான் உருவாக்கிய கன்னித் தீர்த்தம் ஆகும். இந்த ஆலயப் பகுதிகள், அனைத்துக் கட்டிடங்கள், குளங்கள், மண்டபங்கள் எனக் கட்டி முடிக்கப்பட்ட அனைத்துமே தேவ கணங்களுடன் மனிதர்கள் சேர்ந்து செய்தவை.

முன்னொரு காலத்தில் இந்தியாவின் சோழ மண்டலத்தில் மனு நீதியைச் சேர்ந்த வரராமதேவர் என்னும் அரசர் நல்லாட்சி செய்து வந்திருந்தார். அவர் பெரும் சிவபக்தர். அடிக்கடி அனைத்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருபவர். மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்திருந்த வரராமதேவர் ஒருமுறை மச்சேந்திரபுராணத்தில் கூறப்பட்டு இருந்த கோணேசர் ஆலயத்தின் பெருமை பற்றிப் படித்து அறிந்தார். ஆகவே அந்த ஆலயத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இலங்கைக்கு வந்து திருகோணேசரை தரிசனம் செய்து விட்டுச் சென்றார். திறந்த வெளியில் மேற்கூரை இல்லாமல் கட்டிடங்கள் இல்லாமல் இருக்கும் திருக்கோணேஸ்வரரை வழிபட்டவர் அதன் மீது அதிக பக்தி கொண்டு அடிக்கடி அங்கு வரலானார். ஒவ்வொரு முறையும் இங்கு அவர் வந்தபோது அவர் பெரும் செல்வத்தை கொண்டு வந்து அந்த ஆலயத்தில் இருந்த கிணறு ஒன்றில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் சென்றார். இதற்குக் காரணம் எந்தக் காலத்திலாவது அந்த செல்வத்தைக் கண்டெடுப்பவர்கள் அந்த நிதி உதவியைக் கொண்டு அங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டும் என்ற ஆசையினால் அவர் அப்படிச் செய்தார். அவர் ஆலயத்தை அமைக்க முடியாமல் இருந்ததின் காரணம் அவர் அங்கு வந்து வழிபட்ட நேரத்தில் அவருக்கு வாரிசு எதுவும் இருக்கவில்லை. தான் ஒரு ஆலயத்தை அமைக்கத் துவங்கி தனக்கு இறுதிக் காலம் வந்து விட்டால் இந்த ஆலயப் பணிகள் அப்படியே நின்று விடக் கூடும் மேலும் அந்நிய நாட்டில் இருந்த இந்த இடத்தில் ஆலயத்தை அமைக்க அந்த நாட்டில் இருந்த மன்னர்களின் ஆதரவும் இல்லை. ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே தனக்குப் பிறகு சோழ நாட்டை ஆளத் தகுதியானவர் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அந்நிய நாட்டில் வந்து ஒரு ஆலயத்தை அமைக்க முடியும் என்று எண்ணி செல்வத்தை கிணற்றில் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்தார்.

மனுநீதி கண்டசோழ வரராமதேவர் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்து விட்டுச் சென்று இருந்த அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அங்கிருந்த பூத கணங்கள் பாதுகாத்து வந்தன. இப்படி இருந்த காலத்தில் சோழ மண்டலத்தில் அரசாண்டு வந்த வரராமதேவருக்கு சிவபெருமானின் அருளினால் குளக்கோட்டான் பிறந்தார். குளக்கோட்டான் பிறந்ததின் காரணம் சிவபெருமானின் அருளே என முழுமையாக நம்பிய வரராமதேவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை அவர் ஏற்றார். அவருடைய மகனான குளக்கோட்டான. ஒருமுறை பூத கணங்கள் மூலம் அவரது தந்தை சேமித்து வைத்திருந்த செல்வத்தைப் பற்றியும் திருக்கோணேஸ்வர சிவலிங்கத்தின் மகிமையும் தெரிந்து கொண்டார். இங்கு வந்து திருக்கோணேஸ்வரரை வணங்கலானார். அப்போது அவர் தனது தந்தையார் கிணற்றில் பதுக்கி வைத்து விட்டுச் சென்று இருந்த செல்வத்தை பூத கணங்களின் உதவியுடன் கண்டு பிடித்தார். பின் அந்த செல்வத்தைக் கொண்டே தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு பிரம்ம லோகத்தில் உள்ளதைப் போன்ற அழகான ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார்.

ஆலயம் ஸ்தாபிக்க முடிவு செய்த உடன் இதற்கென சோழ நாட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட அமைப்பு தொழிலாளர் குடும்பங்களையும் வரவழைத்தார். அவர்களை இங்கு குடி அமர்த்தினார். தான் ஆலயம் அமைக்க இருந்தது அந்நிய தேசத்தில் என்ற பயமும் இல்லை. அந்த எண்ணமும் அவருக்கு ஏற்படவில்லை. பொற்குவியல் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு பல மாத காலம் பாடுபட்டு கோணேசர் ஆலயத்தில் மஹா மண்டபம், நுழைவு மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்னதான சத்திரம், மறைகளை ஓதுவார் மடம் என ஆகியவற்றைப் பெரிய அளவில் அமைத்தார். இத்துடன் அங்கேயே அன்னை உமாதேவிக்கு ஒரு தனி ஆலயத்தையும் உருவாக்கி அதன் பாதுகாப்புக்காக அதைச் சுற்றி மதிலையும் கட்டினார். மானிடப் பிறவியில் பெறும் பாவங்களை நீக்கிக் கொண்டு இறையருள் பெறப் பாவநாசம் எனும் ஒரு புனித தடாகத்தை அங்கேயே உருவாக்கினார். சிவபெருமான் நீராடுவதற்கு என ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தார். அத்தனை பக்தி ஈசன் மீது அவருக்கு இருந்தது. கோணேசர் ஆலயத்தைத் தரிசிக்க வருகை தரும் முனிவர்கள், துறவிகள், அடியார்கள் போன்றோர்கள் தங்குவதற்கும் பெரும் மண்டபங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறிய சிக்கல் ஒன்றும் ஏற்பட்டது.

ஆலயம் வடிவமைக்கப்பட்டு வந்திருந்த நேரத்தில் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னனின் வாரிசாகப் பிறந்திருந்த ஆடகசௌந்தரி என்ற பெண் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்று இருந்தாள். அவள் அதிகாரத்தில்தான் திரிகோணமலைப் பகுதியும் இருந்து வந்தது. அவள் அதிகாரத்தில் இருந்த பகுதியில் அவள் கட்டளையைப் பெறாமல் அந்நிய தேசத்து மன்னன் ஒருவன் வந்து பெரிய ஆலயம் அமைக்கின்றான் என்கிற செய்தி அவளுக்குச் செல்கிறது. செய்தி கிடைத்து அதைக் கேள்விப்பட்டதும் அவள் உடனே தனது அமைச்சரை பெரும் படையுடன் அனுப்பி அந்த ஆலயத்தை இடித்துத் தள்ளி விட்டு வருமாறு அனுப்பினாள். ஆனால் திரிகோண மலைக்கு வந்த அவளது அமைச்சரோ தேவலோகத்தைப் போலவே ஜொலித்துக் கொண்டிருந்த அங்கிருந்த ஆலய நிலையைப் பார்த்து பிரமித்துப் போயினர். தனது அரசி செய்ய இருந்த தவற்றை உணர்ந்தார். அந்தத் தேவலோக ஆலயத்தை இடிப்பதை விட அந்த மன்னனையே தனது அரசிக்கும் கணவராக ஏற்பாடு செய்து விட்டால் நல்லது நடக்கும் என எண்ணம் கொண்டனர். நாடும் வளம் பெருகும் அல்லவா என நினைத்தார்கள். இதை மனதில் கொண்டு இரு நாட்டு அரசர் அரசியிடமும் தூது போய் நல்லவற்றை எடுத்துக் கூறி நியாயத்தை எடுத்துரைத்தனர். தேவ காரியத்தை மனதில் கொண்டே எதுவும் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக எடுத்துரைத்து அவர்களுடைய திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார்கள். இப்படியாக குளக்கோட்டான் மற்றும் ஆடகசௌந்தரி இருவரின் திருமணமும் நல்ல முறையில் நடைபெற்று இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவும் வளர்ந்தது.

குளக்கோட்டனைப் பற்றி குறிப்பு கைலாச புராணம் எனும் நூலில் உள்ளது. இதைத் தவிர இங்குக் கிடைத்துள்ள பல்வேறு கல்வெட்டுக்களும் அவனது பெருமையைப் பறை சாற்றுகின்றன. இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்த பின் ஆலய மேற்பார்வைக்காகவும் பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்காக பல இனப்பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து வந்து ஆலயப் பகுதியில் குடி அமர்த்தினார். தானும் தனது மனைவியான ஆடகசௌந்தரியுடன் அடிக்கடி இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி வழிபட்டுச் சென்றார். மகிழ்ச்சியாக இவ்விதம் வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஆடகசௌந்தரி கர்பமுற்று ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்த பின் சில காலத்தில் அவள் மரணம் அடைந்து விட்டாள். இதனால் குளக்கோட்டான் வருத்தம் அடைந்தாலும் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ராஜ்யத்தில் உள்ள ஆலயத்தை தன் காலத்துக்குப் பிறகும் நன்கு பராமரிக்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தனக்குக் கீழ் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒரு இளவரசரை இங்கு வரவழைத்து அவருக்கு பூபாலவன்னிபம் என்ற சிறப்புப் பட்டதைத் தந்தான். அவரையும் தன் மகனுடன் சேர்த்து தன் ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்ய ஆட்சியில் அமர்த்திய பின் தான் உலக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

ஆன்மீக வாழ்வில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில காலம் வாழ்ந்திருந்தார். பெரும் சிவபக்தரான அவர் ஒருநாள் ஆலயத்துக்குள் சென்று கருவறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டார். இதற்கு முன்னர் இதுபோன்று அவர் பல முறை செய்திருக்கின்றார். கருவறையை மூடிக் கொண்டு பூஜை செய்த பின் வெளியே வருவார். ஒருநாள் அப்படிப்பட்ட நிலையிலேயே கருவறைக்கு உள்ளே சென்றவர் வெகு நேரம் ஆகியும் குளக்கோட்டான் வெளியில் வரவில்லையே எந்த விதமான பூஜை செய்யும் ஓசையும் வரவில்லையே என கவலை கொண்டவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு குளக்கோட்டான் காணப்படவில்லை. மாறாக ஈசனார் பாதத்தின் கீழ் புத்தம் புதிய தாமரை மலர் மலர்ந்து இருந்ததைக் கண்டிருக்கிறார்கள். இவரை ஆலயத்திலுள்ளேயும் வெளியெங்கேயும் காணவில்லை. மூடிய கருவறைக்குள் புத்தம் புதிய தாமரை மலரும் திடீர் எனத் தோன்றிய அதிசயத்தையும் கண்டு யாருக்கும் விளங்கவில்லை. மூத்த பண்டிதர்கள் மூலமே நடந்த உண்மையை அறிந்து கொண்டார்கள். குளக்கோட்டான் தேவர்களில் ஒருவராகவே இருந்து மானிட உடலை எடுத்து இந்த ஆலயத்தை நிர்மாணிக்க வந்திருந்தார் என்றும் வந்த காரியம் முடிந்த பின் தேவலோகத்துக்கே சிவன் பாதம் மூலம் சென்று விட்டார் என்றும் அதனால்தான் அவர் உடலை அங்குக் காணவில்லை என்றும் பண்டிதர்கள் கூறினார்கள். மேலும் சோதிட ரீதியில் குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை வேற்று அரசர்கள் உடைப்பார்கள் என்றும் பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்றும் கூறினார்கள். இவை அனைத்தும் அங்கு உள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயிலின் அழகினைக் கேள்விப்பட்ட திருஞான சம்பத்தர் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து தனது தேவாரப் பதிகத்தில் பாடல் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.