தத்தாத்ரேயர்

அத்ரி முனிவருக்கு மகனாக பிறப்பேன் என வாக்களித்த சிவ பெருமான் அவருக்கு தத்தாத்ரேயராகத் தோன்றினார். இவரைக் குறித்து இராமாயணம் மகாபாரதத்தில் பல குறிப்புகள் உள்ளன. இதில் முக்கிய குறிப்பாக கார்த்தவீரிய அர்ஜுனன் இவரிடம் வரம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.

இவர் பிரம்மா விஷ்ணு சிவனின் தலை இணைந்து மூன்று தலைகளும் ஆறு கைகளுடன் அருளுகிறார். ஒவ்வொரு கைகளிலும் இறைவனுக்குரிய பொருட்களை கையில் வைத்திருக்கின்றார். பிரம்மாவின் குறியீடாக ஜெபமாலை விஷ்ணுவின் குறியீடாக சங்கு மற்றும் சக்கரம் சிவனின் குறியீடாக திரிசூலம் மற்றும் உடுக்கை ஆகியவை ஆறு கைகளில் வைத்துள்ளார். இவரின் ரூபம் பெரும்பாலும் தனிமையில் வாழும் ஒரு சந்நியாசி போலவும் இவரைச் சுற்றி நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இடம் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல் திருச்சி.

ஆதி நடராஜர்

சிவதாண்டவத்தில் உன்னதமான ஆனந்த தாண்டவம் புடைப்பு சிற்பமாக நீளம் அகலம் 40 செமீ அளவில் சிறியதாக செதுக்கப்பட்டுள்ளது. நடனமாடும் சிவனின் கையில் உடுக்கை இல்லை. காலடியில் முயலகன் இல்லை. சிவனின் இரு காதுகளிலும் ஒரே விதமான குழைகள். தீச்சட்டி இடதுகையில் இல்லாமல் வலது கையில் ஏந்தப்பட்டிருக்கிறது. எப்போதும் அவர் கழுத்தைச் சுற்றியிருக்கும் நல்லபாம்பு கழுத்தில் இல்லாமல் தனியாகத் தரையில் படம் எடுத்தபடி இருக்கிறது. இந்தச் சிறிய சிற்பத்தில் வலது புறத்தில் ஒரு சிவகணம் முக்காலியில் அமர்ந்து ஒருபக்க மேளம் ஒன்றைத் தட்டிக் கொண்டிருக்கிறார். இடம் அவனிபஜன பல்லவேஸ்வரம் கோவில் (ஸ்தம்பேஸ்வரர் கோவில்) சீயமங்கலம் திருவண்ணாமலை.

அக்கமாதேவி குகை லிங்கம்

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.

சதிதாண்டவமூர்த்தி

சிவபெருமான் தட்சனின் மகள் சதிதேவிதை திருமணம் செய்ததைக் கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த தன்மகள் சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தார். இதனால் சதி தேவியார் யாகத்தை அழிக்க யாககுண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார். ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு ஆட்டின் தலையை பொருத்தினார். பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். அப்போது அவர் ஆடிய ருத்ரதாண்டவமே சதிதாண்டவமூர்த்தி எனப்படுகிறது. இதனைக் கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.

இந்த அரிய சோழர்கால சிற்பம் தற்போது கேரள மாநிலம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது.