ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரவிவலசையில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் 20மீ உயரமும் 3மீ அகலமும் கொண்டது. இந்த சிவலிங்கம் திறந்தத வெளியில் உள்ளது.
தல புராணத்தின் படி திரேதா யுகத்தில் ராமர் ராவணனைக் கொன்றுவிட்டு அயோத்திக்குத் திரும்பும் போது அவர்களின் மருத்துவரான சுஷேணன் சுமஞ்ச பர்வதத்தில் தங்கி சிவபெருமானுக்காக தவம் செய்ய விரும்பினார். அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு உதவ விரும்பினார். சிறிது நேரம் கழித்து ராமர் அனுமனை அனுப்பி சூஷேணனை பற்றி விசாரிக்கச் சொன்னார். அனுமன் வந்தபோது சுஷேணன் இறந்து விட்டதைக் கண்டான். சுஷேணனின் உடலைக் கண்டு மனம் வருந்திய அவர் உடலை மான் தோலால் மூடி அதன் மேல் சில மல்லிகைப் பூக்களை வைத்துவிட்டு அந்தச் செய்தியை ராமருக்குத் தெரிவிக்கச் சென்றார். ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணன் அங்கு வந்து மரியாதை செலுத்தி அவர்கள் மான் தோலை அகற்றும்போது ஒரு சிவலிங்கம் இருந்தது. சுயம்பு லிங்கத்தின் அருகில் உள்ள புஷ்கரிணியில் (குளத்தில்) நீராடி பூஜை செய்துவிட்டு புறப்பட்டனர். சிவலிங்கம் படிப்படியாக வளர்ந்தது. சிவலிங்கம் வந்ததில் இருந்து மக்கள் நலம் பெற ஆரம்பித்தனர். இந்த சுவாமி மல்லிகாஜூன சுவாமி என்று அழைக்கப்பட்டார். மல்லிகைப் பூ மற்றும் அஜினா என்றால் மான் தோல் என்று பொருள். அதனால் அவர் மல்லிகாஜின சுவாமி என்று அழைக்கப்பட்டார்.
பிற்காலத்தில் துவாபரயுகத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தில் இருந்த போது அர்ஜுனன் இந்த சுவாமியை வழிபட்டுள்ளார். எனவே அவர் மல்லிகார்ஜுன சுவாமி என்று அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் தெக்கலியின் ராஜா இந்த சிவலிங்கத்தைச் சுற்றி கோயில் கட்ட முயன்றார். ஆனால் அது வெற்றிபெறவில்லை. சிவபெருமான் அவரது கனவில் தோன்றி அவரை கோயிலில் அடைக்க வேண்டாம் என்றும் தன்னைத் தொட்டு பக்தர்களை அடையும் காற்று அவர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்று கூறினார். அதனால் கோவில் கட்டப்படவில்லை. அவர் சூரிய ஒளியில் (தெலுங்கில் எண்டா) வெளிப்பட்டதால் இந்த சுவாமி ஸ்ரீ எண்டல மல்லிகார்ஜுன ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார்.