சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி. இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் காசிபைரவர் இருக்கிறார். பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த பைரவர் நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர் பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன் பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில் முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர். இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பக்தர்கள் பைரவரின் பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தை கோயிலின் தல மரமாக இருக்கும் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருகிறார் என்று கோயிலின் தல வரலாறு சொல்கிறது.
பைரவர் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனவர் என்பதற்கு சான்றாக பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரும் வடை மாலையும் சில மணி நேரங்களில் விஷம் போல் நீல நிறமாக மாறி விடுகிறது. ஆகையால் தீர்த்தமோ வடை மாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில் இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள் படைக்கப்படும் வடை மாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கூட பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.