முக லிங்கங்களைப் போன்றே தனிச் சிறப்பு வாய்ந்தவை தாரா லிங்கங்கள். லிங்கத்தின் பாணப்பகுதியில் முகங்களுக்கு பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள். பல்லவ அரசர்கள் வெகு சிறப்பாக தாரா லிங்கங்கள் அமைத்தனர் என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகைகளாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் தாரா எனப்படும்.
நான்கு பட்டைகள் கொண்டது வேத லிங்கம். பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம்.
எட்டு பட்டைகள் கொண்டது அஷ்ட தாரா லிங்கம். பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் இந்த லிங்கம் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயம் மற்றும் திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயத்தில் இந்த லிங்கம் உள்ளது.
பதினாறு பட்டை கொண்டது ஷோடச தாரா லிங்கம். சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு பட்டை களாகக் கொண்டது. ஆகையால் சந்திர கலா லிங்கம் என்றும் இதற்கு பெயர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்தில் இந்த லிங்கம் உள்ளது. மற்றும் காஞ்சி கயிலாயநாதர் ஆலயத்தின் சுற்றாலயத்தில் இந்த லிங்கம் உள்ளது.
முப்பத்திரண்டு பட்டை கொண்டது தர்மதாரா லிங்கம். தர்மத்தின் 32 வகையைக் குறிப்பிடுவதால் தர்ம லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்பிகை 32 அறங்களை வளர்த்த காஞ்சிபுரத்தில் வயல் வெளியில் 32 பட்டைகளைக் கொண்ட கலை நயமிக்க இந்த லிங்கம் உள்ளது.
அறுபத்து நான்கு பட்டை கொண்டது சதுஷ்சஷ்டி லிங்கம். சிவபெருமானின் 64 லீலா விநோதங் களை விளக்கும் வகையில் 64 பட்டைகள் கொண்டது. இது சிவலீலா சமர்த்த லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் 64 பட்டைகள் 64 யோகினி சக்திகளைக் குறிக்கும்.