சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 273 வது தேவாரத்தலம் கேதார்நாத். மூலவர் கேதாரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் கேதாரகவுரி. தீர்த்தம் உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம். இமயமலை அருகே மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் சிவன் கோயில். இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. அம்பாள் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறையாக சுயம்புவாகத் தோன்றியது. கேதம் என்றால் வடமொழியில் துன்பம் என்று பொருள். கேத + ஹர + ஈஸ்வரர் என்றால் துன்பங்களை நீக்குவதில் தலைவர் என்பது பொருள். கேதார முனிவர் வழிபட்டதால் கேதாரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள் நரநாராயண சிகரங்கள் பின்புறம் எழிலாக விளங்க இமய மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த ஒரு விமானத்துடன் கற்றளியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் வடகோடி இமயமலையில் நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர், விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர்.
ஆதிசங்கரர் பிரசிஷ்டை செய்த ஸ்ரீ சக்கிரத்தில் திருக்கேதார ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன் கணேசர் மற்றும் ஸ்ரீசக்ர வடிவில் கௌரியன்னை ஆகிய மூவரும் ஒன்றாக காட்சி தருகின்றனர். இந்த ஸ்ரீ சக்கரத்தின் மேல் தலை வைத்து வணங்கலாம். இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். இக்கோயில் இறைவனை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களும் பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுகின்றார்கள். கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும் பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும் ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.
சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்ளலாம். யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்கின்றனர். ஸ்ரீஆதிசங்கரர் 8ம் நூற்றாண்டில் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறியச் செய்தார். ஆதிசங்கரர் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக இறைவனடி அடைந்தார். தற்போது உள்ள கோவில் 8 ம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன் சிலைகளும் உள்ளன. விஜய கொடியுடன் ஆதிசங்கரரின் தண்டம் இங்கு உள்ளது. ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கம் இங்கு உள்ளது. திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார். இங்கு மலபாரை சார்ந்த லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். ஆதிசங்கரர் ஸ்தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது.
பண்டைய காலத்தில் நரநாரயணர்கள் இருவர் செம்மையான ஜீவகாருண்ய ஆட்சி புரிந்தனர். அவர்கள் மீது பொறாமை கொண்ட மாற்று நாட்டரசன் படையெடுத்து வந்த போது அவனுடன் போர் புரியாது தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை மேற்கொண்டு கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தனர். அவர்களின் தவத்தின் கடுமையைக் கண்ட இந்திரன் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று அவர்கள் தவத்தை கலைக்க தேவ கன்னியை அனுப்பினான். அவர்கள் தங்கள் தொடையிலிருந்து அவளை விட அழகான ஊர்வசியைப் படைத்து தேவ கன்னிக்கு நல்லுரை கூறி சிவனடியார்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தினர். பின் இருவரும் இறைவனுடன் கலந்தனர். கேதார மலையை பின் பக்கம் மலைச் சிகரமாக இருவரும் இன்றும் விளங்குகின்றனர். பைரவர் காவல் தெய்வம் என்பதால் இங்கு அவருக்கு சன்னதி கிடையாது. வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலை பைரவர் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்கள். இக்கோவிலில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் பைரவர் கோவில் உள்ளது.
திருக்கேதாரத்தை சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன. இங்கு உள்ள ரேதஸ் குண்டத்தின் தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன் என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும் இங்கிருந்து தான் இறைவன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் புராணவரலாறு உள்ளது. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. கௌதமர் அகலிகைக்கு சாபம் கொடுத்தபின் இமயமலை வந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தார். துர்வாச முனிவரின் சாபம் பெற்ற விஷ்ணு பூமிக்கு வந்து இமயமலையில் கேதாரநாதரை நோக்கி தவம் செய்த போது மஹாலக்ஷ்மி துணையாக பத்ராட்சை மரமாக காவல் இருந்தாள். எனவே அத்தலம் பத்ரிநாத் எனப்பட்டது. இத்தலம் கேதாரீஸ்வரரின் தலத்திற்கு எதிரே உள்ளது.
இங்கு பாண்டவர்கள் பிறந்து வளர்ந்து சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் வரலாறு உள்ளது. இத்தலத்தில் அர்ஜூனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றான். இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. வைணவர்களான பாண்டவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டுள்ளனர். மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர். பின்னர் இளைப்பாறும் போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதர முடியாது என்றும் முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர். பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது.
பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பின்னர் அசரீரி மூலம் பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார். பின்னர் பாண்டவர்கள் பசுபதிநாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சொர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது. பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மஹாபாரதப் போருக்குப் பின் கண்ணபிரான் வந்து வழிபட்டதாகவும் புராண வரலாறு உள்ளது.
பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால் பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் செல்வார். கோபம் கொண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கும் தனக்கும் இடைவெளி இருந்தால் தானே பிருங்கி சிவனை மட்டும் சுற்றிச் செல்வார் என்று நினைத்து சிவபெருமானுக்கு நெருக்கமாக அமர்ந்தாள். ஆனால் பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி சிவபெருமானைச் சுற்றி வந்து வழக்கம் போல வணங்கிச் சென்று விட்டார். இதனால் வருத்தம் கொண்ட உமையவள் கௌதம மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து பிரிக்க முடியாதபடி சிவபெருமானோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று அம்பிகை கௌதம முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் அளித்த ஆலோசனையின்படி உமையவள் 21 நாள்கள் இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் புனிதத் தலத்தில் அன்னை உமையவள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து அவரது திருமேனியில் சரிபாதி பெற்றாள். அப்படி அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு கேதாரீஸ்வரர் விரதம் என்று பெயர்.
21- ம் நாள் முடிவில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தின்போது சக்தி தேவியை தனது உடலுடன் ஐக்கியமாக்கி அர்த்தநாரீஸ்வரராகத் திருவுருவம் கொண்டார் சிவபெருமான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்களின் பாடல்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்துக்கு 2 பதிகங்கள் இருக்கின்றன. கேதாரிஸ்வரரைப்பற்றி பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும் கேதார்நாத் கோயிலில் நம்மூர் கல்வெட்டுகளைப் போலவே தமிழில் கல்வெட்டுகளாக செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.