தில்லை நடராஜர்

தில்லையில் கிபி 1648 ஆம் ஆண்டில் முகலாய மன்னர் படையெடுப்பின்போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் நடராஜர் சிவகாமி விக்ரகங்களை இரண்டு மர பேழைகளில் (பெட்டி) பாதுகாப்பாக வைத்து மதுரை கொண்டு வந்து சில காலம் தங்கி மதுரையில் வழிபாடு செய்தார்கள். பின் அங்கிருந்து இரவு நேரங்களில் பயணம் செய்து குடுமியாண் மலையை சென்றடைந்து தங்கினார்கள். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு கேரளா மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து பூமிக்கடியில் குழி தோண்டி சுவாமி வைக்கப்பட்டிருந்த பேழைகளை மறைத்து வைத்தார்கள் பின் அந்த இடத்தில் புளியமரம் ஒன்றை நட்டு வைத்து தங்கள் ஊருக்கு திரும்பினார்கள். காலம் கடந்தது.

சிதம்பரத்தில் அமைதி திரும்பி 35 ஆண்டுகளுக்கு பின் முன்னோர்கள் சொன்ன குறிப்புகளை வைத்துக் கொண்டு இளம் தீட்சிதர்கள் பல குழுக்களாக பிரிந்து விக்ரகத்தை தேடினார்கள். அதில் ஒரு குழுவினர் புளியங்குடிக்கு சென்று பல இடங்களில் தேடியும் புலப்படாமல் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தார்கள். அப்போது முதலாளி ஒருவர் தனது வயதான வேலைக்காரனிடம் அந்த பசு மாட்டை கொண்டு போய் அம்பலம் புளியில் கட்டு என கூறியுள்ளார். அங்கு இருந்த தீட்சிதர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அம்பலம் புளி என்ற வார்த்தை குறித்து வயதானவரிடம் விளக்கம் கேட்டதற்கு, எனக்கு தெரியாது. எனது முதலாளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார். தீட்சிதர்கள் அந்த முதலாளியிடம் சென்று அம்பலம் புளி குறித்து கேட்டார்கள். அதற்கு முதலாளி இந்த இடத்தில் ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல ஆண்டுகளாக அம்பலம் புளி என்ற இடத்தில் வழிபட்டு வந்தார். இங்குள்ள சிறு துளையில் விலை மதிப்பில்லாத சுவாமி திருவுருவத்தை கண்டுள்ளார். இந்த சுவாமியை பற்றி அறிந்தவர்கள் இங்கு வருவார்கள். அதுவரை நீ பாதுகாக்க வேண்டும் சுவாமியை தேடி வருபவர்கள் உண்மையானவர்களா என சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆசான் கூறியதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்ட தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்து தில்லைவாழ் அந்தணர்களுடன் மூல மூர்த்திக்கு உரியவர்கள் தாங்கள்தான் என்ற ஆதாரங்களை எடுத்து சென்று கேரளா முதலாளியிடம் கொடுத்து சம்மதம் பெற்று தீட்சிதர்களே அம்பலம் புளி மரத்தின் அடியை தோண்டினார்கள். பூமிக்கடியில் இருந்து நடராஜப் பெருமானையும் சிவகாமசுந்தரி அம்மனையும் கணடெடுத்தாரகள். சுவாமிகளை புதிய பேழை ஒன்றில் வைத்து சிதம்பரத்திற்கு எடுத்து வந்தார்கள். வரும் வழியில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சபாபதி மண்டபத்தில் வைத்து சில காலம் தங்கி பூஜை செய்தார்கள். பின் புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சிதம்பரத்திற்கு வந்தார்கள். 1688 ஆம் ஆண்டில் மீண்டும் பொன்னம்பலத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

நடராஜரையும் சிவகாமி அம்மையையும் கொண்டு செல்ல பயன்படுத்திய மரப் பேழைகள் படத்தில் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.