கிருஷ்ணனை எதிர்த்து போர் புரிந்த அர்ஜுனன்

ஒருநாள் அதிகாலையில் காலவ முனிவர் ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும் நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க கையில் நீரை எடுத்தபோது ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார்.

சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கிருஷ்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். கிருஷ்ணனுடன் நேரடியாகக் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு முனிவரின் கால்களிலும் கிருஷ்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த சிந்திரசேனன் அதைச் செய்யாமல் அவனது மனதில் சூழ்ச்சி ஒன்று பிறந்தது. அர்ஜுனனை தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். அர்ஜுனா உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் அதுதான் க்ஷத்திரிய தர்மம் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.

சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா என்று கேட்டான் சித்திரசேனன். நான் வணங்கும் கிருஷ்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் அர்ஜுனன். என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக என் மீது போர் தொடுத்து என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல் என்று கேட்டான் அர்ஜுனன். தங்கள் ஆத்ம நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன் என்றான் சித்திரசேனன். அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்து விட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. இதனை கண்ட சித்திரசேனன் அர்ஜுனா அதிர்ச்சி அடைந்தவிட்டீர்களா உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா தங்களால் முடியவில்லை என்றால் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என்றான் சித்திரசேனன்.

நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும் நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட நண்பன் மீதே போர் தொடுத்து உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். கிருஷ்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். கடமையைச் செய்யும் போதும் சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கிருஷ்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார் அர்ஜுனன் யுத்தம் ஆரம்பமானது. துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்தது போல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும் ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.

யுதிஷ்டிரனும் பீமனும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. கிருஷ்ணரின் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் சித்திரசேனன். செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார் கிருஷ்ணன். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். தன் ஆத்ம நண்பன் கிருஷ்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் நடக்கப்போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி இந்த யுத்தத்தை ஒரு பயிற்சிக் களமாக அமைத்தேன் என புன்முறுவலோடு கூறினார் கிருஷ்ணன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.