சகுனியை பெருமைபடுத்திய கிருஷ்ணர்

குருசேத்திரப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர் தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். யாகம் தொடங்கலாமே சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்றா எனக் கேட்டார் கிருஷ்ணர். ஆயிற்று கண்ணா முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான் அர்ஜுனன். யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில் கேட்டார் கிருஷ்ணர். குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான் என்றார் யுதிஷ்டிரன். வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான் அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. என்னாயிற்று கண்ணா உனக்கு முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே என்றார் கிருஷ்ணர் அமைதியாக. பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா கேட்டான் அர்ஜுனன். அர்ஜுனா வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து எத்தனை தடைவந்தாலும் தகர்த்து தன் லட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் லட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர்கள் தோற்கவில்லை. ஆனால் எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் லட்சியமும் வெல்லவில்லையே என கேட்டான் யுதிஷ்டிரன். போரில் உடன்பிறந்தவர் உற்றார் உறவினர் பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது. உங்கள் வாரிசுகளை அழித்த பின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள் கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள். அப்படிப் பார்த்தால் சகுனியின் லட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே என அர்ஜுனன் கேட்க சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜுனா எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய் என்றார் கிருஷ்ணர்.

கெளரவர்களை அழிப்பதே சகுனியின் லட்சியமா ஏன் கிருஷ்ணா என்று அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார். கெளரவர்களை மட்டும் அல்ல உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம் இலட்சியம் எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால் கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி என்றார் கிருஷ்ணர். பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான் என்றார் கிருஷ்ணர். சகுனி துரோகி நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே என்றார் திருதராஷ்டிரன். இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான் உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால் தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி உங்கள் எல்லோரையும் விட நல்லவனே என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணா எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான் தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன சொல் கிருஷ்ணா என கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன். அது எனக்கும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா முடியாதா கேட்டார் கிருஷ்ணர். கோபப் படாதே கிருஷ்ணா யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே என்றார் யுதிஷ்டிரர் அமைதியாக. யுதிஷ்டிர வீரனாக நல்லவனாக ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் என்பதை அறிவாயா தப்பிப் பிழைத்தவன் சகுனி தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் லட்சியம் வெல்வதற்காக இதில் என்ன தவறு போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களாகும் போது அவன் கொண்ட லட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே என்றார் கிருஷ்ணர்.

திரௌபதியை துகிலுரிக்க வைத்தது சகுனி செய்த தர்மமா என கேட்டான் பீமன். பீமா யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன் எங்களுக்கு பதிலாக கிருஷ்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால் அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே. திரௌபதியின் அவமானம் சகுனியால் திட்டமிடப்பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யுதிஷ்டிரனும் துரியோதனனும் தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான் பழிகாரன் அல்ல கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன். கிருஷ்ணா பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும் என்றான் சகாதேவன் அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார் அவரைப் பின் தொடர்ந்தான் சகாதேவன்.

கிருஷ்ணா சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன் என்றான் பணிவுடன். சகாதேவா காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது கவலை வேண்டாம். அது மட்டுமின்றி இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே. என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன் அவன். உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. அவனை என் பக்தனாக அவன் விரும்பாவிடினும் அவனை நான் ஏற்றுக் கொண்டதனால் யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன். என்னை விரும்பி நினைப்பதோ விரும்பாமல் நினைப்பதோ என்னை நினைப்பது மட்டுமே முக்கியம். ஒருவனை நான் ஆட்கொள்ள அதுபோதும் என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.