தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 209 வெஞ்சமாங்கூடலூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 209 வது தேவாரத்தலம் வெஞ்சமாங்கூடலூர். மூலவர் விகிர்த நாதேஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர், இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் விகிர்தேஸ்வரி, விகிர்தநாயகி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் குடகனாறு. இந்த கோவில் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. ஐந்து நிலை கோபுரமும் பெரிய பிரகாரமும் உள்ளது. இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் சுமார் 17 படிகள் கீழிறங்கித் தான் பிரகாரத்தை அடைய முடியும். படிக்கட்டுகள் இறங்கியதும் நேர் முன்னால் உள்ள நீண்ட முகப்பு மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் சுவாமி சந்நிதி இறைவி சந்நிதி இரண்டையும் உள்ளடக்கி உள்ளது. உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்த மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள், அதையடுத்து வடமேற்குப் பகுதியில் வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. இறைவன் விகிர்த நாதேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பொன்னும் பொருளும் தீர்ந்து விட்டது. எனவே விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் பொன் இல்லை என்றார். உன்னிடம் இல்லாத பொருள் ஏது என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன் தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும் என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள் என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன் பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிடம் முருகன் விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார். நண்பன் உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார்.

இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது. மேலும் இத்தலம் வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும் அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிடுகிறார். சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார் வெஞ்சக்கூடல் பெருமானே என்று பதிகம் பாடியிருக்கிறார். முன்மண்டபத்தில் நடராஜர் அருளுகிறார். பிரகாரத்தில் நால்வர் அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. இக்கோயில் சுவாமியை வணங்கிவிட்டு வெளியேறும்போது படிகளில் ஏறிச்செல்லும்படியாக பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் இங்கு வணங்கிவிட்டு திரும்பும்போதே வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதற்காக இந்த அமைப்புடன் உருவாக்கி இருக்கிறார்கள். மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு கூடல் ஊர் என்று பெயரும் உண்டு.

தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன் ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை தன் கணவர் என்றெண்ணிய அகலிகை பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன் பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர் அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன் சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் அழிந்தன. இக்கோயில் கருங்கற்கள் வெள்ளத்தில் 2 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம். அதன் பின் 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி பெருமுயற்சி செய்து பல லட்சங்கள் திரட்டி திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்து 26-2-1986 அன்று மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.