தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #9 திருச்சாய்க்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 9 வது தேவாரத்தலம் திருச்சாய்க்காடு. புராண பெயர் மேலையூர். மூலவர் சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர், இந்திரேஸ்வரர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் குயிலினும் நன்மொழியம்மை. தலமரம் பைஞ்சாய், கோரை. தீர்த்தம் காவிரி, ஐராவத தீர்த்தம். பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால் இத்தலம் இப்பெயர் பெய்ற்றது. காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் இக்கோவிலும் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு 2. மயிலாடுதுறை 3. திருவிடைமருதூர் 4. திருவையாறு 5. திருவாஞ்சியம். கோயிலுக்கு தெற்கில் கோயில் குளம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன. விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபக்கம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். ஒரு திருமுகமும் நான்கு திருக்கரஙளும் கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் கோதண்டம் ஒரு கரத்தில் அம்பு ஒரு கரத்தில் வில் மற்றெரு கரத்தில் கொடியுடன் காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டர மணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க சிக்கலில் அம்பாள் முருகனுக்கு வேல் கொடுத்தது போல் சிவன் இந்த வீர கண்டரமணி கொடுத்துள்ளார். கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் யானையால் புக முடியாத கோயில் என்பதாகும். இக்கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.

63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர் நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும் என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம் என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க எனக்கூறி மறைந்தார்.

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன் அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. உடனே சிவன் தோன்றி இந்திரா இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல் இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக என அருள்புரிந்தார். உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சோழர் கால கல்வெட்டுகள் பத்தும் பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.