அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர் ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது அவனது மனைவி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில் அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்தார்.
கண்ணாடியைப் பார்த்து கணவனும் மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார் கிருஷ்ணர். மாமா இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா பாமாவா மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன் என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன் கிருஷ்ணர் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான். இதென்ன விந்தை என அபிமன்யு கேட்டான். அபிமன்யு என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு என்றார். நோக்கம் எதுவானாலும் பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.