அஸ்தினாபுரம் அரியணைக்காக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த போர் குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் இருப்பதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. படைகளும் அதன் வகைகளும்
ஒரு தேரும் ஒரு யானையும் ஐந்து காலாட்களும் மூன்று குதிரைகளும் சேர்ந்தது ஒரு பத்தி.
மூன்று பத்தி ஒன்று சேர்ந்தது ஒரு சேனாமுகம்.
மூன்று சேனாமுகம் ஒன்று சேர்ந்தது ஒரு குல்மம்.
மூன்று குல்மம் ஒன்று சேர்ந்தது ஒரு கணம்.
மூன்று கணங்கள் ஒன்று சேர்ந்தது ஒரு வாகினி.
மூன்று வாகினி ஒரு பிருதனை.
மூன்று பிருதனை ஒரு அனீகினி.
பத்து அனீகினிகள் ஓர் அக்ரோணி சேனை.
ஓர் அக்ரோணி படை என்பது
21870 தேர்கள்
21870 யானைகள்
65610 குதிரைகள்
109350 காலாட்படைகள் ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர் அணியில் 11 அக்ரோணி படைகளும் பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.
அதிரதர்
இவர்கள் இருப்பதிலே திறமை அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர் தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று ஒரே சமயத்தில் பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர் ஆவார்.
மகாரதர்
இவர்கள் அதிரதருக்கு அடுத்தபடியாக தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள்.
சமரதர்
இவர்கள் மகாரதருக்கு அடுத்தபடியாக ஒரு சமயத்தில் ஒரு தேர்வீரரோடு போரிடும் வல்லமை கொண்டவர்.