துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்று அதை ஒரு பொக்கிஷமாகப் போற்றி ஒரு தாயத்தில் மறைத்து வைத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டார். இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த ரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ணர் ஒருவர் தான். பாரதப்போரில் துரோணர் கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்ட நிலையில் தர்மத்தை காக்க அவரை அழிக்க வேண்டும். அவர் குரு தட்சணை என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை நிலை நாட்ட முயற்சிப்பவரை தர்மம் காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதை துரோணரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது.
அதன்படி ஒரு முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் துரோணரிடம் சென்றார். சுவாமி என்னுடைய ஒரே பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போது ஒரு வரன் அமைந்திருக்கிறது. ஆனால் மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான் கருணை கூர்ந்து உதவி செய்ய வேண்டும். உங்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டு துரோணரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே அந்த முதியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட துரோணர் முதியவரின் யாசகத்தை நிராகரிக்க முடியாமல் மன வேதனையுடன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அவரது கைகளில் கொடுத்து ஐயா பெரியவரே இது மிகவும் மதிப்பு வாய்ந்த தங்கத் தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்கல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறி மானசீகமாக மணமக்களை போர் முனையில் இருந்தே ஆசீர்வதித்தார். வந்த வேலை முடிந்தவுடன் முதியவரான கிருஷ்ணர் துரோணருக்கு வணக்கம் செலுத்தி விட்டு திரும்பினார். துரோணரிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசான குரு பக்திக்கு உதாரணமான ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்துக்கொண்டார். அதன் மூலம் குரு பக்திக்கு உரிய மரியாதையையும் குருவை போற்றும் உத்தம சீடனின் மேன்மையையும் அனைவருக்கும் உணர்த்தினார். அதன்பின் தனது யுக்தியால் துரோணரை அழித்தார்.