அஸ்திரங்கள் என்பவை அம்பு தர்ப்பை பொருட்களின் மேல் மந்திரங்களால் உருவேற்றப்பட்ட மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். அஸ்திரங்கள் அனைவருக்கும் கிட்டிவிடாது. முறையான பயிற்சியும் குருவின் துணையும் இறையருளும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும். இந்த அஸ்திரங்களுக்கு அம்புகள் அவசியம் தேவையில்லை. ஒரு தர்பை புல்லை எடுத்து அந்த அஸ்திரத்திற்கு உண்டான மந்திரத்தை ஜெபித்து இலக்கை நோக்கி விசினால் கூட அஸ்திரம் தனது பணியை செய்துவிடும்.
பிரம்மாஸ்திரம்: பிரம்மாவின் அஸ்திரம். இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது.
பிரம்மஸ்ரிஷா: பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.
இந்திராஸ்திரம்: இந்திரனின் அஸ்திரம். ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.
வஜ்ராயுதம்: இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.
பாசுபதாஸ்திரம்: சிவனின் அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும் அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.
ஆக்னேயாஸ்ச்திரம்: அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்
வருணாஸ்திரம்: வருணனின் அஸ்திரம். எல்லை இல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்
வாய்வாஸ்திரம்: வாயுவின் அஸ்திரம். கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம்.
சூரியாஸ்திரம்: சூரியனின் அஸ்திரம். இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம்.
நாகாஸ்திரம்: நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைப்பதற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான எதிரான அஸ்திரம் கிடையாது.
நாகபாசானம்: விஷம் கொண்ட நாகங்கள் இலக்கை கட்டி மயக்கமடைய செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.
மோகினி அஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது
சம்மோஹனம்: எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது
பிரம்மோஹனம்: சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது
நாராயனாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். எண்ணற்ற அம்புகளையும் சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால் நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்
வைஷ்ணவாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.
பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல் வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.
