விருத்தாசுரன் என்ற அரக்கன் இந்திரலோகத்தில் நுழைந்து அங்கிருந்தவர்களையெல்லாம் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினான். அவனுடைய தாக்குதலைக் கண்டு பயந்த அனைவரும் இந்திரனிடம் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றனர். இந்திரன் தனது படையுடன் சென்று விருத்தாசுரனை எதிர்த்துப் போரிட்டான். விருத்தாசுரனின் அசுரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இந்திரன் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து வெளியேறினான். மேலும் விருத்தாசுரன் தன்னைக் கண்டுபிடித்து அழித்து விடுவானோ என்று பயந்து தாமரைத் தண்டு ஒன்றினுள் சென்று மறைந்து கொண்டான். பின்னர் அங்கிருந்தபடியே விருத்தாசுரனை எதிர்த்துப் போரிடுவதற்கான பலம் வேண்டி தவம் செய்யத் தொடங்கினான். இந்திரன் இல்லாததால் தேவலோகத்தை நிர்வகிக்க முடியாமல் போனது. எனவே தற்காலிகமாக ஒரு இந்திரனைத் தேர்வு செய்ய தேவர்கள் முடிவு செய்தனர். இந்திரப் பதவியில் அமர்ந்தால் விருத்தாசுரன் நம்மை அழித்து விடுவான் என்கிற பயத்தால் பலரும் அந்தப் பதவியை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் பூலோகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வந்த நகுசன் என்ற மன்னனை இந்திரப் பதவியில் அமர்த்த தேவர்கள் முடிவு செய்தனர்.
நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பலனால் தேவர்கள் அவனைத் தேர்வு செய்தனர். நகுசனிடம் சென்று தேவர்கள் தங்கள் கோரிக்கையை கூறினர். நகுசனும் தேவர்கள் விருப்பப்படி இந்திரப் பதவியை ஏற்றுக் கொண்டான். அந்தப் பதவியில் அமர்ந்ததும் அவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போயின. இந்திரப் பதவியின் பெயரிலான கர்வமும் பேராசையும் நகுசனை ஆட்டிப்படைத்தது. இந்திரலோகத்தில் இருக்கும் அனைத்துச் செல்வங்களும் பொருட்களும் தனக்குரியது என்று உரிமை கொண்டாடினான். அது மட்டுமின்றி அங்கிருக்கும் நடன மங்கைகளும் இந்திராணியும் கூட தனக்கே சொந்தமானவர்கள் என்றான். இதனால் கவலையடைந்த இந்திராணி தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று நகுசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.
தேவகுரு நகுசனைத் தனியாக அழைத்து அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை. அடுத்த நாள் தன்னைத் தேடி வந்த இந்திராணியிடம் இனி நகுசன் உன்னைத் தேடி வரும் பொழுது நீ அவனை ஏற்றுக் கொள்ள எந்த மறுப்பும் தெரிவிக்காதே. இந்திரலோகத்தில் இருக்கும் குறு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கில் அவர்கள் உன்னைச் சுமந்து வந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பி விடு. அதன் பிறகு உனக்கு அவனால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று தேவகுரு சொல்லி அனுப்பினார். நகுசன் இந்திராணியைத் தேடிச் சென்ற போது அவளும் தேவகுரு சொன்னதைச் சொல்லி அனுப்பினாள். நகுசன் குறு முனிவர்களைத் தேடிச் சென்று தன்னைப் பல்லக்கில் அமர வைத்து இந்திராணி இருக்கும் இடத்துக்குச் சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். அவன் இந்திரப் பதவியில் இருப்பதால் முனிவர்களான அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் அவனை அந்தப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் சென்றனர். அப்படித் தூக்கிச் செல்லும் வழியில் நகுசன் அவர்களிடம் வேகமாக வேகமாக என்று பொருள் தரும் வகையில் சமஸ்கிருத வார்த்தையான சர்ப்ப சர்ப்ப என்று சொல்லி விரட்டிக் கொண்டே இருந்தான். அந்தப் பல்லக்கைச் சுமந்து சென்ற முனிவர்களில் ஒருவரான அகத்தியருக்கு அது எரிச்சலைத் தந்தது. கோபமடைந்த அகத்தியர் நகுசனைப் பார்த்து எங்களைச் சர்ப்ப சர்ப்ப என்று விரட்டிய நீ இப்போதே மலைப்பாம்பாக மாறி பூலோகத்தில் விழுந்து காட்டில் அலைந்து திரிந்து கஷ்டப்படு என்று சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்த நகுசன் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி தான் தெரியாமல் செய்த தவறை மன்னித்துச் சாபத்திலிருந்து விமோசனம் தந்தருளும்படி வேண்டினான். அகத்தியர் கோபம் குறைந்து நகுசனே நீ பூலோகத்தில் மலைப்பாம்பாக வாழ்ந்து வரும் காலத்தில் வனவாழ்க்கை மேற்கொள்ளும் பாண்டவர்களில் ஒருவரான பீமன் உன்னிடம் மாட்டிக் கொள்வான். அவனை உன்னிடமிருந்து மீட்பதற்காக அவனுடைய சகோதரன் ஒருவன் வருவான். அவன் நீ கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்வான். அப்போது உனக்கான சாபம் நீங்கும் என்றார். முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த நகுசன் அஜகரம் என்கிற பெயரில் மலைப்பாம்பாக மாறினான். அவனுடைய பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போயின. மலைப்பாம்பு அங்கிருந்த மலைக்குகை ஒன்றைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டது. அந்தக் காட்டிற்குள் இருந்த பறவைகளும் விலங்குகளும் அந்த மலைப்பாம்பிற்கு இரையாகிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் கடந்து பின் பாண்டவர்கள் தங்களின் வனவாழ்க்கைக்காக அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு நாள் பாண்டவர்களில் ஒருவரான பீமன் மட்டும் காட்டுக்குள் தனியாகச் சென்று பல விலங்குகளை வேட்டையாடினான். மலைப்பாம்பு வசித்த குகையின் அருகில் அவன் சென்றபோது அது அவனைச் சுற்றிவளைத்துக் கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் பீமனால் அதன் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை. மலைப்பாம்பு பீமனை விழுங்க முயன்றபோது அதற்கு தன்னுடைய முந்தைய வாழ்வும் சாபமும் நினைவுக்கு வந்தது. இந்த நிலையில் காட்டிற்குள் சென்ற தம்பியைக் காணாததால் அவனைத் தேடி யுதிஷ்டிரர் காட்டுக்குள் வந்தார். அப்போது மலைப்பாம்பிடம் பிடிபட்டிருக்கும் தன் தம்பியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
யுதிஷ்டிரர் அந்த மலைப்பாம்பிடம் பாம்பே உன் பசிக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன். என் சகோதரனை உன் பிடியிலிருந்து விட்டு விடு என்று கேட்டார். நீ கொண்டு வந்து கொடுக்கும் உணவு எதுவும் எனக்குத் தேவையில்லை. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் நான் உன் சகோதரனை விட்டு விடுகிறேன். சரியான பதில்களைச் சொல்லாவிட்டால் உன் சகோதரனை மட்டுமில்லாமல் உன்னையும் சேர்த்து எனக்கு இரையாக்கிக் கொள்வேன் என்றது மலைப்பாம்பு. யுதிஷ்டிரர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் மலைப்பாம்பு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தார். அவரது பதில்களால் மகிழ்ந்த மலைப்பாம்பு பீமனை விடுவித்தது. மலைப்பாம்பு சாப விமோசனம் பெற்று நகுசனாக சுய உருவம் பெற்றான். அவன் யுதிஷ்டிரரை வணங்கி இந்திரலோகம் சென்றடைந்தான்.
மிகவும் நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Thank you