ராமரும் லட்சுமணனும் சீதையின் குரலைக் கேட்டு விரைந்து வந்து பொன் மானைப் பார்த்து வியந்தார்கள். லட்சுமணன் மானின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகமடைந்தான். மான் வடிவில் வந்திருப்பது ராட்சசன் மாரீசன் என்பதை லட்சுமணன் புரிந்து கொண்டான். ராமரை பார்த்து இந்த அழகிய கற்கள் பதிக்கப்பட்ட பொன் மான் வடிவில் இருப்பது மாரீசன் என்ற ராட்சசன் ஆவான். இயற்கையில் இப்படி ஒரு மிருகம் கிடையாது. நம்மை ஏமாற்ற ஏதோ தந்திரம் செய்து நம்மை தாக்க இங்கே வந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன் என்றான். லட்சுமணன் சொன்னதை கேட்டதும் மானின் அழகில் மயங்கிய சீதை ராமரிடம் இந்த மான் தங்க நிறத்தில் நவரத்ன கற்களும் ஜொலிக்க அழகாக இருக்கிறது. இதனுடன் நான் விளையாட ஆசைப்படுகின்றேன். நாம் இக்காட்டை விட்டு அரண்மனைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. இங்கிருந்து செல்லும் போது இந்த மானையும் தூக்கிச்சென்று விடலாம். நமது அரண்மனை தோட்டத்தில் இதனுடன் ஆனந்தமாக பொழுதை கழிக்க ஆசைப்படுகின்றேன். இந்த மானைப் பார்த்தால் பரதன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். இந்த மானை பரதனுக்கு பரிசாக கொடுக்கலாம். இந்த மானை பிடித்து எனக்கு தாருங்கள். நமது குடிலில் இந்த மானை கட்டி வளர்க்கலாம் என்று விடாமல் ராமரிடம் மானை பிடித்து கொடுக்க சொல்லி பேசிக்கொண்டே இருந்தாள்.
ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். சீதையின் பேச்சைப் பார் லட்சுமணா. அவளின் பேச்சில் இருந்து அந்த மான் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நமக்கு தெரிகிறது. அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது எனது கடமை. அந்த மான் ராட்சசனாக இருந்தால் இக்காட்டில் இருக்கும் முனிவர்களுக்கு நாம் கொடுத்த வாக்கின்படி அதனை அழிப்பது நமது கடமை. வந்திருப்பது ராட்சசனா என்று நமக்கு தெரியாது. ஆகையால் நீ வில் அம்புடன் கவனத்துடன் சீதைக்கு பாதுகாப்பாக இரு. எந்த சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எச்சரைக்கையுடன் இரு. நான் அந்த மானை உயிருடனோ அல்லது ராட்சசனாக இருக்கும் பட்சத்தில் கொன்றோ கொண்டு வருகிறேன் என்று வில் அம்புடன் கிளம்பினார். லட்சுமணன் யுத்தத்திற்கு தயாராக இருப்பது போல் வில் அம்புடன் சீதைக்கு காவலாக இருந்தான்.
ராமர் மானை பின் தொடருந்து ஓடினார். ராமர் தன்னை பின் தொடர்ந்து வருகின்றாரா என்று மான் திரும்பி திரும்பி பார்த்து காட்டிற்குள் ஓடியது. மானை ராமரால் பிடிக்க முடியவில்லை. ராமரை காட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு இழுந்து வந்தது மான். ராமர் தனது வில்லை எடுத்தார். இதனை கண்ட மான் உருவில் இருந்த மாரீசனுக்கு தான் ராமரின் கையால் இறக்கப் போகின்றோம் என்று தெரிந்துவிட்டது. ராமரின் கண்ணில் படாமல் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி மான் இருக்கும் திசையை நோக்கி செலுத்தினார். அம்பு மானை குத்தியது. மான் உருவத்தில் இருந்த மாரீசன் தனது சுய உருவத்தை அடைந்தான். ராவணன் சொன்னபடி சீதை லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்தியபடி கீழே விழுந்து இறந்தான் மாரீசன்.