விதுரர்

ஆணி மாண்டவ்யர் மிகப் பெரிய ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.

அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.

நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார்.

வள்ளல் கர்ணன்

தர்மாத்மா என்று இந்த உலகத்தாரால் புகழப்படுகின்ற பாண்டவர்களின் மூத்த சகோதரர் தர்மர் யார் எதைக் கேட்டாலும் தந்து கொண்டே இருக்கிறார். அவரின் சகோதரர்களும் யார் என்ன கேட்டாலும் தானம் செய்கிறார்கள். இன்னும் கூறப் போனால் துரியோதனனும் யார் கேட்டாலும் எதை கேட்டாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க அனைவரையும் விட கர்ணனைதான் பொதுமக்கள் அனைவரும் வள்ளல் என்று கூறுகிறார்கள். அனைவரையும் விட கர்ணன் எப்படி உயர்வாக இருக்க முடியும்? இன்னும் கூறப் போனால் துரியோதனனுக்கு உட்பட்ட ஒரு சிறு ராஜ்ஜியத்தைதான் கர்ணன் ஆண்டு கொண்டு இருக்கிறான். கர்ணனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் ஒரு வகையில் பார்த்தால் துரியோதனன் தந்ததுதான். கர்ணன் தருவதை எல்லாம் ஒரு வார்த்தைக்கு கொடை என்றாலும் துரியோதனனுக்குதான் அந்தப் புகழ் போய் சேர வேண்டும்? சராசரியான மனிதர்கள் வேண்டுமானால் இப்படி புரியாமல் பேசலாம். ஆனால் கிருஷ்ணரும் கர்ணனை வள்ளல் என்றே சொல்கிறார். ஏன் அப்படி என்று பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர் கர்ணனும் வள்ளல் மற்றவர்களும் வள்ளல். ஆனால் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான்? என்பதை அனைவருக்கும் காட்டுகிறோம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

கிருஷ்ணர் சில தினங்கள் கழித்து உடலெல்லாம் தளர்ந்த ஒரு வயோதிகராக துரியோதனன் சபைக்கு வந்து மன்னா துரியோதனா உன் புகழ் கேட்டு இருக்கிறேன். உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார். பெரியவரே தாராளமாக கேளுங்கள். எதை வேண்டுமானாலும் தருகிறேன். உலக நன்மைக்காக நான் மாபெரும் வேள்வி ஒன்று செய்ய இருக்கிறேன். அந்த வேள்விக்கு வேண்டிய விருக்ஷங்களை (மரங்களை) நீ தர வேண்டும். எத்தனை வேண்டுமானாலும் என் அரண்மனையில் இருந்தும் சேமிப்புக் கிடங்கில் இருந்தும் எனக்கு உட்பட்ட வனங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதே என் வீரர்களை உம்மோடு அனுப்புகிறேன் என்றான் துரியோதனன். அதற்கு இப்பொழுது வேண்டாம். நாளை வேள்வி என்றால் அதற்கு இரு தினங்கள் முன்பாக வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி முதியவர் சென்று விட்டார். இதே பெரியவர் துரியோதனனை பார்த்த பிறகு தருமரை அர்ஜுனனை ஏனைய அரசர்களை பார்த்து கேட்கிறார். அனைவரும் உடனே தருவதாக கூறினாலும் தேவையான பொழுது நான் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விடுகிறார். இறுதியாக கர்ணனிடம் சென்று கேட்க கர்ணனும் உடனே தருவதாக கூற உடனே வேண்டாமப்பா. வேண்டும் பொழுது நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டார். அப்படி சென்று வந்த மறு தினத்தில் இருந்து தொடர்ந்து விடாமல் சில தினங்கள் வருணனின் பொழிவு நிகழ்ந்தது.

தேசம் எங்கும் ஒரே வெள்ளக்காடாக மாறியது. பிறகு ஒரு தினம் மழை நின்றது. ஆனால் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. பொது மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடையாமல் இருக்க அந்தந்த தேச அரசர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த முதியவர் துரியோதனனிடம் சென்று துரியோதனா அன்று சொன்னேனே உலக நன்மைக்காக வேள்வி செய்யப் போகிறேன் என்று. ஆமாம் நாளை செய்யலாம் என்று இருக்கிறேன். விருக்ஷங்களைக் கொடு என்றார். துரியோதனனுக்கு சரியான சினம் வந்து விட்டது. பெரியவரே ஏதாவது சிந்தனை இருக்கிறதா உமக்கு? இத்தனை தினங்களாக எங்கே போயிருந்தீர்கள்? தேசத்தில் நடந்தது உமக்கு தெரியாதா? ஒரே மழை வெள்ளம். இப்பொழுது எல்லா மரங்களும் நனைந்து இருக்கும். எப்படி அவை வேள்விக்குப் பயன்படும்? அன்றே தருகிறேன் என்று சொன்னேனே. ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? இப்படி காலமில்லா காலத்தில் வந்து கேட்டு என்னை இடர் படுத்துகிறாயே? போ போ என்று சொல்லி விட்டார்.

ஏனைய அனைத்து அரசர்களும் இதே பதிலையே கூற இறுதியாக கர்ணனை பார்க்க வந்தார். அந்தப் பெரியவர் கர்ணனைப் பார்த்துக் கேட்ட பொழுது பெரியவரே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த உதவியை கேட்கிறீர்கள். தேசமெங்கும் வெள்ளமாக இருக்கிறது. எல்லா திசைகளிலும் நீர் நிறைந்து மரங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அன்றே தந்திருப்பேன். நீங்களும் வேள்வி செய்திருக்கலாம். இறைவனின் சித்தம் அவ்வாறில்லை போல் இருக்கிறது. கொடுக்க முடியாத ஒரு சூழல் வந்து விட்டதே. என்ன செய்வது? இறைவா எனக்கு வழி காட்டு என்ற கர்ணனுக்கு சட்டென்று ஒரு சிந்தனை தோன்றியது. தன் சேவகர்களை எல்லாம் அழைத்து என் அரண்மனையில் உள்ள அனைத்து மரங்களையும் கதவுகளையும் (இடித்து பெயர்த்து) இந்தப் பெரியவருக்குத் தந்து விடுங்கள் என்று கூறிவிட்டான். அவ்வளவுதான். அந்த செய்தி பரவிய பிறகு அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். கர்ணா ஏன் உனக்கு இவ்வாறு ஒரு சிந்தனை வந்தது? ஒருவர் என்னிடம் வந்து உதவி கேட்கிறார். அந்த உதவியை தரக் கூடிய வாய்ப்பு சாதாரண நிலையில் அமையவில்லை. ஆனால் வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. இப்பொழுது வேள்விதான் முக்கியம். பெரியவருக்கு கொடுத்த வாக்குதான் முக்கியம். உலக நன்மைதான் முக்கியம். நான் என்ன அரண்மனையில் பிறந்தவனா? அரண்மனையில் வளர்ந்தவனா? இடையில் வந்ததுதானே இந்த வாழ்வு? நான் எங்கு வேண்டுமானாலும் ஒண்டிக் கொள்ளலாம். ஆனால் வேள்வி குறிப்பிட்ட தினத்தில் நடந்தாக வேண்டும். எனவேதான் இந்த முடிவு என்று கூறி அரண்மனையை இடிக்க முற்பட்ட போது அந்தப் பெரியவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக உருவெடுத்தார். அனைவருக்கும் ஆச்சரியம்.

கிருஷ்ணா நீங்கள்தான் முதியவராக வந்தவரா? ஆமாம். நான்தான் வந்தேன். இப்பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்குமே? எதற்காக கர்ணனை வள்ளல் என்று உலகம் கூறுகிறது? நானும் ஏன் கூறுகிறேன்? என்று. எல்லோரும் தருகிறீர்கள். ஆனால் எந்த நிலையில் தருகிறீர்கள்? அவனவன் சுகமாக இருந்து கொண்டு தன்னுடைய நிலைமையை விட்டுக் கொடுக்காமல் தரத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் தன் வாழ்வே அஸ்தமித்தாலும் பாதகமில்லை. தான் இருக்கின்ற இல்லமே போனாலும் பாதகமில்லை. தருவது என்று வந்து விட்டால் உயிர் என்ன? உடல் என்ன? உடைமை என்ன? எதுவாக இருந்தால் என்ன? தரக்கூடிய வகையில் எது இருக்கிறது என்று பார்த்து அதை எத்தனை கடினம் என்றாலும் அதைத் தந்தால் எத்தனை துன்பம் வந்தாலும் தருவேன் என்று எவன் முடிவு எடுக்கிறானோ அவன்தான் வள்ளல். மற்றவர்களை எல்லாம் வேண்டுமானால் உதவி செய்பவர்கள் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூற இதையும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

இப்படியொரு தர்மசங்கடமான சூழலில் எங்களையெல்லாம் ஆட்படுத்திவிட்டு மழையையும் பொழிய வைத்து (மரங்களை) கேட்டால் எப்படி கண்ணா? நாங்கள் என்ன தரக் கூடாது என்ற எண்ணத்திலா சொன்னோம்? மரங்கள் ஈரமாக இருக்கிறதே. எப்படி வேள்விக்குத் தருவது என்றுதானே சங்கடப்பட்டோம். தரக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்று கூற கண்ணபரமாத்மா எல்லோரும் பொறுமையோடு இருங்கள். மீண்டும் உங்களுக்கு நிரூபணம் செய்கிறேன் கர்ணன்தான் வள்ளல் என்பதை என்று கூறிச் சென்று விட்டார். சில நாட்கள் சென்ற பிறகு இப்பொழுது வெளிப்படையாகவே அனைவரையும் அழைத்து இப்பொழுது ஒரு சோதனை செய்யப் போகிறேன். இந்த சோதனையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவனையே இனி நானும் வள்ளல் என்று அழைப்பேன். உலகமும் வள்ளல் என்று அழைக்கும் என்று கூற என்ன? என்று எல்லோரும் கேட்க இப்பொழுது இந்த பரந்த பாரத மண்ணிலே இருக்கின்ற இமய மலையைவிட உயரமான தங்க மலை ஒன்றை நான் தோற்றுவிக்கப் போகிறேன். இந்த தங்க மலையை பாண்டவர்களுக்கு ஒன்றும் கௌரவர்களுக்கு ஒன்றும் கர்ணனுக்கு என்று ஒன்றும் தந்து விடுகிறேன். நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குள் யார் முதலில் அதனை தானம் செய்து பூர்த்தி செய்கிறார்களோ அவன்தான் வள்ளல் என்று கூறி சென்று விட்டார். இப்பொழுது பாண்டவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கௌரவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கர்ணனுக்கு ஒரு மலை கிடைத்தது. சரி நாளை காலையில் இருந்து தானத்தை ஆரம்பிப்போம் என்று அனைவரும் சென்று விட்டார்கள்.

மறுநாள் மாலை நெருங்கும் பொழுது கண்ண பரமாத்மா முதலில் துரியோதனனை பார்க்க வருகிறார். அங்கே கால்வாசிதான் தானம் நடந்து இருந்தது. முக்கால் பாகம் அப்படியே இருந்தது. என்ன துரியோதனா? இன்னுமா முடியவில்லை? சூரியன் மறையப் போகிறதே? என்று கண்ணன் கேட்க நாங்கள் கொடுக்கவில்லை அல்லது மறுக்கிறோம் என்று எண்ணாதே. எங்களுக்கு அவகாசம் போதவில்லை. இன்னும் சில மாதங்கள் கொடு. எப்படியாவது தந்து விடுகிறோம் பார் ஆயிரக்கணக்கான ஆட்கள் மலையின் மீது அமர்ந்து வெட்டி வெட்டி வருகின்ற ஏழைகளுக்கு அள்ளி தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீயே பார்க்கிறாய் அல்லவா? என்றார் துரியோதனன். அவகாசம் எல்லாம் தர முடியாது துரியோதனா. இன்று சூரியன் மறைவதற்குள் நீ கொடுத்தே ஆக வேண்டும் என்றார் கண்ணன். இதற்குள் வாய்ப்பே இல்லை கண்ணா. நாங்கள் தோற்றதாகவே இருக்கட்டும். ஆனால் பாண்டவர்கள் நிலையை பார்க்க வேண்டும். அழைத்து போ என்று கண்ணனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்கள். அங்கும் இதே நிலைதான். கால் பாகம் கொடுத்து விட்டு முக்கால் பாகம் அப்படியே இருக்க என்ன தர்மா? அர்ஜுனா? இன்னும் தரவில்லையா? என்று கண்ணன் கேட்க தந்து கொண்டுதான் இருக்கிறோம் கண்ணா. ஆனால் அவகாசம்தான் போதவில்லை. ஓரிரு மாதங்கள் கொடுத்தால் நாங்கள் பூர்த்தி செய்து விடுவோம் என்றார்கள் பாண்டவர்கள். அதெல்லாம் முடியாது கொடுத்த அவகாசம்தான். சூரியன் மறைவதற்குள் கொடுத்தே ஆக வேண்டும் என்று கண்ணன் கூற எங்களால் முடியாது. ஆனால் கர்ணனின் நிலையை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூற கண்ண பரமாத்மா அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்.

அங்கே கர்ணனுக்கென்று கொடுத்த மலை அப்படியே இருந்தது. நாங்களாவது கால் பாகம் கொடுத்து இருந்தோம். ஆனால் கர்ணனோ ஒன்றுமே கொடுக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? பொறுமையாக இருங்கள். கர்ணனிடமே கேட்போம் என்று கூறி கர்ணனை அழைத்து வர செய்து கர்ணா நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? என்ன செய்தேன்? கர்ணன். ஆளுக்கொரு தங்க மலை கொடுத்தேன் அல்லவா? கொடுத்தீர்கள். மற்றவர்கள் எல்லாம் அதில் கால் பாகமாவது கொடுத்து விட்டார்கள். ஆனால் உன் மலை அப்படியே இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார் கண்ணன். யார் மலையை கொடுத்தது? என்று கேட்டார் கர்ணன். நான் கொடுத்தேனே என்றார் கண்ணன். எப்பொழுது கொடுத்தீர்கள்? என்று கேட்டார் கர்ணன். நேற்று கொடுத்தேன் என்றார் கண்ணன். நீங்கள் கொடுத்த மறுகணம் ஒரு ஏழை வந்தார். இந்தா வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டேன். இப்பொழுது எப்படி அது என்னுடையது ஆகும் என்றார் கர்ணன். பார்த்தீர்களா இவன்தான் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல். உங்கள் சிந்தனை எப்படி போனது? இவன் சிந்தனை எப்படி போனது? என்று கண்ணன் கூற உடனே அதையும் மறுத்தார்கள் சிலர்.

நாங்கள் பலருக்கும் பயனுள்ளதாக கொடுத்தோம். கர்ணனோ ஒருவனுக்குதானே கொடுத்தான் என்று பதில் கூற கர்ணா இதற்கு என்ன பதில் கூறுகிறாய்? என்று கண்ணன் கேட்க மிக மிக தூர தேசத்தில் இருந்து இந்த ஏழை வந்திருக்கிறான். அவன் தேசம் முழுவதும் வறுமை வாட்டுவதாக சொன்னான். உடனே இந்தா இதை வைத்துக் கொண்டு உன் வறுமையையும் உன் தேசத்தின் வறுமையையும் நீக்கிக் கொள் என்று அப்பொழுதே மலையை கொடுத்து விட்டு இந்த விஷயத்தையே மறந்து விட்டேன் என்று கர்ணன் கூற இப்பொழுது ஓரளவு அனைவருக்கும் புரிந்தது.

இந்த கதையின் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வள்ளல் தன்மை என்றால் என்ன? என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப் படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப் பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார். அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்துவிட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பு அறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல். இதனை கர்ணன் கடைபிடிப்பதால் கர்ணனை அனைவரும் வள்ளல் என்று அழைக்கிறார்கள்.

திரௌபதியின் கர்வம்

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு கிருஷ்ணரின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது. இதை கவனித்த கிருஷ்ணர் திரௌபதியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார். ஒரு நாள் காட்டில் இருந்த திரௌபதியை பார்க்க வந்தார். கிருஷ்ணரை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கிருஷ்ணரிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே? என்றாள். அதற்கு கிருஷ்ணர் தங்கையே மனம் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார். அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது. அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் வலிக்க நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும் என்றாள். கிருஷ்ணரும் சிரித்து கொண்டே தலையாட்டினார்.

திரௌபதியின் வேண்டுதலை ஏற்று பீமன் ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையில் தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது. நீண்ட நேரம் ஆகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை. கிருஷ்ணர் திரௌபதியிடம் மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. தீர்த்தமாட வெந்நீர் கொடுக்கிறேன் என்றாய் என்னாச்சு? என்று கேட்டார். அதற்கு திரௌபதி கண்கலங்கியவாறே அண்ணா என்ன சோதனையோ தெரியவில்லை. கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது என்றாள். கிருஷ்ணர் பீமனிடம் பீமா அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு என்றார் பீமனும் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்த்தார். கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது. கிருஷ்ணர் திரௌபதியிடம் தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்து கொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். கொப்பறை நீர் கொதிக்கவில்லை என்று இப்போது புரிகிறதா? ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.

திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. கிருஷ்ணரிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது. அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

துரோணர் செய்த தவறு

குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால் பெற்ற சாபத்தினால் மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. என் தந்தை சத்தியவான் செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால் அவரை பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன என மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கிருஷ்ணரை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தாலும் தன் கேள்விக்கு கிருஷ்ணரை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்ற காரணத்தால் அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீயும் காரணமாக இருந்தாய் அவர் செய்த தவறு என்ன? என கேட்டான்.

கிருஷ்ணன் சிரித்தபடியே செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார். என் தந்தை என்ன பாவம் செய்தார் கேட்டான் அஸ்வத்தாமன். அதற்கு கிருஷ்ணன் உன் தந்தை அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால் ஏழையாக இருந்தார். அவரை கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான் அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது. கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். தனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள் என உன் தந்தையிடம் கேட்டான். அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர துரோணர் மறுத்து விட்டார். ஆனால் ஏகலைவன் உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில் வித்தை திறமை அர்ஜூனனுக்கு தெரிந்தது. அர்ஜூணன் துரோணரிடம் இதனை தெரிவித்தான்.

அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தின் காரணமாக உன் தந்தை சுயநலமாக நடந்து கொண்டார். ஏகலைவனை வரவலைத்த உனது தந்தை வில்வித்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டு பெற்றுக் கொண்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார். ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும் அவனது எதிர்காலம் வீணானதுக்கு உன் தந்தை தான் காரணம். மேலும் போர் களத்தில் யுத்த தர்மத்திற்கு எதிராக அபிமன்யுவை அநியாயமாக கொலை செய்தார்கள். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் உனது தத்தை. இந்த பாவம் தான் உன் தந்தையை போர்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன்.

பொக்கிஷம்

கிருஷ்ணர் மீது ஏழ்மையான பெண் ஒருத்தி மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள் கிருஷ்ணா உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதி இதுபோல் அவள் கேட்டாள். ஆனால் ஒரு அழுக்கு கோணிப்பை மூட்டையை அவளிடம் தந்த கிருஷ்ணன் நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா அது போதும். அனைவரின் முன்னிலையிலும் இந்த அழுக்கு கோணிப்பை மூட்டையை எப்படி கொண்டு செல்வது என்று எண்ணாதே நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால் அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே என்று எரிச்சல் தோன்றினாலும் வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்ட போதும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. பல முறை அவள் கோணிப்பை மூட்டையை சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார் கிருஷ்ணர்.

ஒரு நாள் போதும் நீ சுமந்தது மூட்டையை இறக்கி வை என்று சொன்ன கிருஷ்ணர் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவலுடன் கேட்டார். கோணிப்பை மூட்டை தானே அவிழ்ந்தது. அதில் விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பகவான். சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறை சொல்லியிருக்கவோ மாட்டேன் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான். அதுமட்டுமல்ல அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். அனைத்தும் இறைவன் செயல் அனைத்தும் நம் நன்மைக்கே என்று நம்பினால் சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும்.

ஜயத்ரதன்

சிந்து ராஜ்யத்தின் அரசன் விருத்தக்ஷத்ரன். அவனுடைய மகன் ஜயத்ரதன். ஜயத்ரதன் திறம் வாய்க்கப் பெற்றவனாக வடிவெடுத்த பொழுது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையில் ஈடுபட்டான் விருத்தக்ஷத்ரன். தன்னுடைய தவத்தில் ஜயத்ரதன் பற்றிய உண்மை ஒன்றை ஞானதிருஷ்டியில் கண்டார். உலக பிரசித்தி பெற்ற போர் வீரன் ஒருவன் ஜயத்ரதன் தலையை கொய்து கொல்வான் என்பது அவர் பெற்ற ஞானக்காட்சி. அதை அறிய வந்த விருத்தக்ஷத்ரன் இறைவனிடம் தவம் புரிந்து தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றான் விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனும் ஆவான்.

பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது திரௌபதிக்கு துணையாக சில பெண்கள் இருந்தபடியால் பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாட வனத்திற்குள் சென்றிருந்தனர். அப்பொழுது ஜயத்ரதன் காம்யக வனத்தை தாண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தான். அப்போது திரௌபதியை பார்த்ததும் அவன் சிறிதும் நாணமின்றி அவளிடம் தனது காதலை தெரிவித்தான். திரௌபதி பாண்டவர்களின் மனைவி என்று தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு அவனுடைய செயல் முற்றிலும் சரியானது இல்லை என்று திரௌபதி தெரிவித்தாள். ஆனால் அவள் கொடுத்த விளக்கத்திற்கு ஜயத்ரதன் செவி சாய்க்கவில்லை. நாடோடிகளாகிய பாண்டவர்கள் அவளை மனைவியாக வைத்திருக்க தகுதியற்றவர்கள் என்றும் நாடாளும் வேந்தன் என்னும் முறையில் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தனக்கு மனைவியாக எடுத்துக் கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் பேசினான். அதைத் தொடர்ந்து இருவருக்குமிடையில் கைசண்டை நிகழ்ந்தது. திரௌபதி ஜயத்ரதனை கீழே தள்ளினாள். ஆயினும் அவனுடைய வலிமையினால் திரௌபதியுடைய கைகளையும் கால்களையும் கட்டி தன் ரதத்தில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான். திரௌபதிக்கு துணையிருந்த பெண்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாக பாண்டவர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து திரும்பினர். திரௌபதியை காணவில்லை நடந்தவற்றை விளக்கமாக அங்கிருந்த பெண்கள் எடுத்துக் கூறினார். அக்கணமே சகோதரர்கள் ரதம் போன வழியில் விரைந்து ஓடினார். ஜயத்ரதனை பிடித்து நிறுத்தினர். அவனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. சிறிது நேரத்தில் ஜயத்ரதனை தோற்கடிக்கப்பட்டான். பீமன் அவனை கீழே போட்டு மிதித்தான். ஜயத்ரதனுக்கு மயங்கி விழுந்தான். அவன் மயங்கி கிடந்த பொழுது ஐந்து சிறு குடுமி வைத்து அவனுடைய தலை முடி வெட்டப்பட்டது. அதன் விளைவாக அவனுடைய தோற்றம் பரிதாபத்துக்கு உரியதாயிற்று. சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அப்பொழுது அவன் ஒரு கால்நடை போன்று கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை அறிந்தான்.

பாண்டவ சகோதரர்கள் ஜயத்ரதனை கைது செய்து யுதிஷ்டிரனுடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்று என்ன தண்டனை அளிக்கலாம் என்று யுதிஷ்டிரனுடைய அனுமதியை நாடி நின்றனர். பீமன் ஜயத்ரதனை கொல்வதற்கு யுதிஷ்டிரன் அனுமதி கொடுக்குமாறு கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் குற்றங்கள் பல ஜயத்ரதன் செய்திருக்கின்றான். எனினும் இவன் நமக்கு மைத்துனன் ஆகிறான். காந்தாரியின் கடைசி குழந்தையாகிய துஸ்ஸாலாவுக்கு இவன் கணவன். அந்த முறையை முன்னிட்டு இவனை மன்னித்து இவன் உயிரை காப்பாற்ற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறி அவனை விடுதலை செய்தான்.

ஜயத்ரதன் அவமானத்தால் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன்போக்கில் போனான். அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் கங்கைக் கரையோரம் சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். நாட்கள் பல கழிந்து போயின. சிவபெருமானும் அவன் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஜயத்ரதன் வரும் காலத்தில் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதற்கு ஏற்ற வல்லமையை தனக்கு தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டான். அதற்கு சிவன் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றுகிறான் ஆகையால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. நீ செய்த தவத்தின் பலனாக ஒரே ஒரு நாள் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணரை தவிர்த்து போர் களத்தில் ஜயத்ரதன் யாரை வேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை பெறுவாய். சிறிது நேரத்திற்கு அவர்களை சமாளிக்கும் திறமை உனக்கு வந்தமையும். அந்த நாளையும் நீயே தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரம் கொடுத்தார் சிவன். சிறிதளவேனும் சிவபெருமான் தனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தது குறித்து ஜயத்ரதன் மகிழ்ச்சி அடைந்தவனாய் கங்கை கரையில் இருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டு போனான்.

மகாபாரத யுத்தம் ஆரம்பித்தது. யுத்தத்தில் பத்ம வியூக அமைப்பை துரோணர் அமைத்திருந்தார். இதனை கண்ட யுதிஷ்டிரர் கலக்க முற்றார். ஆபத்து மிக வாய்ந்த பத்ம வியூகம் பாண்டவர்களின் படைகளை விரைவில் அழித்துவிடும். இந்த நெருக்கடியில் அபிமன்யு தன் திறமையை கையாண்டு பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். பாண்டவர்களின் துர்பாக்கிய வசத்தால் அபிமன்யுவை பின்பற்றி ஏனைய போர்வீரர்கள் உள்ளே நுழைய இயலவில்லை. அபிமன்யு உள்ளே நுழைந்ததும் பத்மவியூகம் மூடிக்கொண்டது. ஏனைய போர்வீரர்கள் இந்த வியூகத்திற்குள் நுழைய முடியாதவாறு ஜயத்ரதன் தன் வரத்தின் சக்தி கொண்டு வியூகத்தின் நுழைவை மறைத்தான். அன்று முழுவதும் வீரியம் நிறைந்த போராட்டமே கழிந்தது ஆயினும் ஜயத்ரதனை வெல்ல பாண்டவ போர் வீரர்களுக்கு இயலவில்லை. சிவன் கொடுத்த வரத்தை இப்போது ஜயத்ரதன் பயன்படுத்தி பீமன் நகுலன் சகாதேவன் யுதிஷ்டிரர் அபிமன்யுவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான். இறுதிவரை வீரத்தோடு போர் புரிந்த அபிமன்யுவின் தேகத்தை துரோணர் கிருபர் கர்ணன் ஜயத்ரதன் ஆகியோர் செலுத்திய அம்புகள் துளைத்தது. அபிமன்யு தரையில் வீழ்ந்து வீர மரணம் எய்தினான். தென்திசையில் சம்சப்தர்களை அழித்துத் திரும்பிய அர்ஜூனன் காதில் இச்செய்தி விழ அவன் மயங்கி விழுந்தான். கிருஷ்ணரின் ஸ்பரிசம் பட்டு எழுந்த அர்ஜுனன் மகனின் உடலை கட்டி தழுவி அழுதான். மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்து ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன் தவறினால் அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணன் மீது ஆணை என்று சபதம் செய்தான்.

அர்ஜுனனின் சபதம் ஒற்றர்களின் வழியாக ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு தன் நாட்டிற்கு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகில்லை என்று மற்றவர்கள் தடுத்தனர். கௌரவர்கள் ஒன்று கூடி ஜயத்ரதனை காப்பாற்ற திட்டம் தீட்டினார்கள். சூரிய அஸ்தமனம் முடியும் வரை ஒரு மலை குகைக்குள் ஜயத்திரதனை மறைத்து வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் வில்பயிற்சி அளித்தீர்கள் ஆனால் அர்ஜூனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன் என்று கேட்டான். அதற்கு துரோணர் அர்ஜூனன் தவ வலிமை உடையவன். ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டுமல்ல கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். மற்றவர் விதுரர் அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு சாரதியாய் இருக்கிறார். எனவே இந்த யுத்தத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன் என்றார். மறுநாள் யுத்தம் ஆரம்பித்தது.

அர்ஜூனன் போர்க்களம் எங்கும் ஜயத்ரதனை தேடினான். ஜயத்ரதனை கிடைக்கவில்லை. மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான் துரியோதனன். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். துரியோதனன் தன் திட்டம் வென்றதாக கூறி ஆனந்தம் அடைந்தான். சூரியன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொள்ள ஆயத்தமாய் இருந்தான். கௌரவ படைகள் வெற்றி அடைந்து விட்டதாக ஆர்பரித்தனர். திரும்பிய திசை எங்கும் கௌரவ படையின் வெற்றி முழக்கம். பாண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். கிருஷ்ணர் தன்னுடைய யோக சக்தியின் மூலம் சுதர்சன சக்கரத்தை கொண்டு சூரியனை மறைத்தார். சூரியன் மறைந்து விட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது. பாண்டவர்கள் பதறினர். மனம் உடைந்தான் அர்ஜுனன். அபிமன்யுவை நினைத்து கண்ணீர் சிந்தினான். கிருஷ்ணர் மேல் தான் செய்த சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான். மௌனம் சாதித்தார் கிருஷ்ணர். அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண ஜயத்ரதனும் ஆவலோடு மலை முகட்டின் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாது கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டான் ஜயத்ரதன். பாண்டவர்கள் தன்னை அவமானப்படுத்தியதற்காக பழி தீர்த்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தான். பாண்டவர்கள் வேதனையுடன் காணப்பட்டனர். ஆனால் எல்லாம் அறிந்த கிருஷ்ணரோ தன் லீலையை நிகழ்த்த காத்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரின் பாதங்களை வணங்கினான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா காண்டீபத்தை உன் கையில் ஏந்தி தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றை நாணேற்றிய வண்ணம் அக்னியை வலம் வா என்றார்.

அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கிருஷ்ணர் தன் லீலையை ஆரம்பித்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை விட்டு நகர்ந்தது இருள் என்னும் மாயை மறைந்து மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசியது. கண்ணன் தன் சுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். அர்ஜுனன் கண்களில் தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா அதோ ஜயத்ரதன் நாணேற்றிய அஸ்திரத்தை விடுத்து அவன் தலையைக் கொய்து வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய் என்று ஆணையிட்டார் கிருஷ்ணர். கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து விண்ணிலே தூக்கிச் சென்று வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது. விருத்தக்ஷத்ரன் பெற்ற வரத்தை பற்றிய ரகசியத்தை கிருஷ்ணன் ஒருவரே அறிந்திருந்தார். அர்ஜுனனை காப்பாற்றும் பொறுப்பை கிருஷ்ணன் ஏற்றிருக்கின்றார். ஆகையால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கிருஷ்ணரை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். சபதத்தை முடித்தான் அர்ஜுனன். மகாபாரத யுத்தத்தில் பதினான்காம் நாள் இறுதியில் ஜயத்ரதன் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான். விருத்தக்ஷத்ரன் தன் மகனுக்காக தான் பெற்ற வரமே அவனை அழித்துவிட்டது.

துரோணரின் மகன் அஸ்வத்தாமன்

மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சீரஞ்சிவியாக வாழும் மரணமில்லாதவன் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமன். பரத்வாஜ முனிவரின் மகன் துரோணருக்கும் கொளதம மகரிஷியின் பேத்தியும் முனிவர் சரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. எனவே துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்து அவர் முன் தோன்றிய சிவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சீரஞ்சிவியாக வாழும் அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சீரஞ்சீவியாக சாகா வரம் பெற்ற குழந்தை பிறக்க சிவன் வரம் அளித்தார். குழந்தை பிறந்ததும் குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் குழந்தைக்கு அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தையின் நெற்றியில் பிருங்கி என்று அழைக்கப்படும் மணி இருந்தது. இந்த மணி இருக்கும் வரை தேவர் கந்தர்வர் மனிதர் அரக்கர் ரிஷிகள் யட்சர்கள் மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த திவ்ய அஸ்திரமோ அஸ்வத்தாமனை கொல்ல முடியாது. துரோணரை அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு குருவாக நியமித்தார் பீஷ்மர்.

பாண்டவர் கொளரவர்களோடு அஸ்வத்தாமனும் அரிய வித்தைகளை துரோணரிடம் இருந்து கற்றுக் கொண்டான். அது மட்டுமின்றி தன் தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும் தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும் சத்ரிய குலத்தின் சிம்ம சொப்பனம் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொண்டான். தன் தந்தை துரோணர் அர்ஜூனன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதை அஸ்வத்தாமனால் தாங்க முடியவில்லை. அஸ்வத்தாமனை பாண்டவர்கள் ஏளனம் செய்யும் போதெல்லாம் துரியோதனன் அவனுக்கு துணை நின்றான். அதுவே துரியோதணனுக்கு அவரை நெருக்கமான நண்பனாக மாற்றியது.

பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது தன் சிறு வயது நண்பன் கிருஷ்ணனை பார்க்கச் சென்றான் அஸ்வத்தாமன். அவனை வரவேற்ற கிருஷ்ணன் என்ன வேண்டும் கேள் நண்பனே என்று கேட்க தங்களுடைய சுதர்சனச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும் என்று கேட்கிறான். சிரித்தவாரே எடுத்துக்கொள் என கிருஷ்ணர் சொல்ல அதை எடுக்கிறான் அஸ்வத்தாமன். எவ்வளவு முயன்றும் அதை அஸ்வத்தாமனால் அசைக்க கூட முடியவில்லை. இதனைக் கண்ட கிருஷ்ணர் சிரித்தபடியே எதற்காக உனக்கு இது தேவை நண்பனே என்று கேட்டார். வரும் காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர் நடக்கும் அதில் நான் துரியோதனனை காக்க வேண்டும். பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் இருக்கும் வரை அவர்களை வெல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும். ஆகவே கிருஷ்ணா உம்மை வதைக்கவே உமது சுதர்சன சக்கரம் எனக்கு வேண்டும் என்று சொல்ல மெய்சிலிர்த்து போகிறார் கிருஷ்ணர். உன் நட்பின் இலக்கணம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா சுதர்சன சக்கரத்தை வைத்து கொண்டு என்னை கொல்ல இயலாது. ஆனால் போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் அழித்து உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான நாராயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன் என்று வரமளித்தார் கிருஷ்ணர். தன் தந்தை துரோணாச்சாரியார் மூலம் ஈடு இணையற்ற அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை கற்றுக் கொண்டான் அஸ்வத்தாமன். அதுமட்டுமின்றி தன் தவ வலிமையால் அதர்வண வேத மந்திரங்களை உருவேற்றி காளி தேவிக்கு சமர்பணம் செய்து வேதத்தின் வித்தகனாக விளங்கினான். அஸ்வத்தாமனின் பக்தியால் அவனுக்கு தரிசனம் கொடுத்த அன்னை காளிதேவி மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திரத்தை வரமாக அளிக்கிறாள். ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் இந்திரஜித் மகாபாரதத்தில் அர்ஜூனன் அஸ்வத்தாமன் ஆகிய மூவர் மட்டுமே இந்த ஆயுதத்தில் ஞானம் பெற்றவராவர்கள் ஆவார்கள். மற்ற அஸ்திரங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. மிகுந்த பேரழிவை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களால் மட்டுமே இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். பிரம்மாஸ்த்திரம் பெற்றவன். நாராயண அஸ்திரம் பெற்றவன். பாசுபதாஸ்திரத்தை பெற்றவன். துவாபர யுகத்தில் இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன் மட்டுமே. தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவனாவான்.

மகாபாரத யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமானால் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் அறிவு இல்லை. பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அதனால் அஸ்வத்தாமன் பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு மட்டும் காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். நெற்றியில் இருந்த பிருங்கி மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடனாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றுவிட்டான்.

அனைத்தும் கிருஷ்ணன் செயல்

பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு மரத்தடியில் யாரும் அறியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தன் தேசத்து அரசனானதும் அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தபட்டு தன் ராஜ்ஜியமெல்லாம் அவன் கொடி பறப்பதையும் அறிந்து தன்னை தானே நொந்து கொண்டான். வீட்டுக்கு மூத்தவன் உடன்பிறந்தோர் முன்னால் அழகூடாது எனும் தர்மத்தை அவன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அவனை தேற்றும் பொருட்டு யுதிஷ்டிரா இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத யுதிஷ்டிரன் சுற்றி யாருமில்லை என்பதை உணர்ந்து கிருஷ்ணனின் கைகளை பற்றி கதறினான். திரௌபதி இப்படி சிரமப்படவும் என் அன்னை வயதான காலத்தில் இப்படி அலையவும் என் தம்பிமார்கள் நாடோடி காட்டுவாசிகளாக திரியவும் நானே காரணமாகி விட்டேன் எனக்கு கிடைத்த தாயும் தம்பிகளும் மனைவியும் நல்லவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவ்வகையில் நான் பாக்கியசாலி. ஆனால் இவர்கள் அனைவருக்கும் என்னால் தானே அனைத்து துன்பமும் வந்தது. துரியோதனன் அழைத்ததும் நான் சூதாடியிருக்க கூடாது. அதுவும் அவன் சகுனி துணையோடு ஆடும் பொழுது நான் உன்னை அல்லவா அழைத்திருக்க வேண்டும் நான் உன்னை அழைக்காமல் உனக்கு தெரியக் கைடாது என்றல்லவா சிந்தித்தேன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அந்த நொடிப் பொழுது செய்த சிறிய தவறு இந்த மாபெரும் துன்பத்தை கொடுத்து விட்டது என கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டவாறு கூறினான் யுதிஷ்டிரன்.

கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். யுதிஷ்டிரா நீ அழைக்காமல் நான் வரமாட்டேன் என நினைத்தாயா? சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான் யுதிஷ்டிரா. எப்பொழுது உன்னை துரியோதனன் அழிக்க நினைத்தானோ அப்பொழுதே அவன் அழிவு தொடங்கியது. இந்த நிலையில் எதிரி வாழவும் திருந்தவும் நீ வாய்ப்பளித்தாய் என்பதை உலகுக்கு சொல்லவதற்காகவே இந்த நிகழ்வை நடத்திக் காட்டினேன். யுதிஷ்டிரன் எப்பொழுதும் தர்மனாக நின்றான் என்பதை வரலாறு எழுதவே பகடையினை அவனுக்கு விழவைத்தேன். சகுனி என் நாடகத்தின் ஒரு கருவி அவ்வளவு தான். நாடகத்தை நடத்துபவன் நான் அதில் நீயும் ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள். உண்மையில் நீ உன் மிக உயந்த இயல்பில் நின்றாய். அதை புரிந்து கொள் தெளிவடைவாய் என்றார். அதற்கு யுதிஷ்டிரன் நான் சூதாடி தோற்றேன். என் இயல்பிலிருந்து மாறி சித்தம் கலங்கி சென்றேன். நானா தர்மவான் என்று சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுதிஷ்டிரா இப்பொழுதும் நீதான் வென்றாய். சூதாட்டத்தில் நீ தோற்று உன்னை அழிக்க வந்தவர்களை சிறிது காலம் வாழ வழிசெய்திருக்கிறாய். யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தில் தன்னை அழிக்க நினைத்த பகைவர்வர்களுக்கும் சிறிது காலம் வாழ இடம் கொடுத்தான் என பெயர் பெற்றாய். நாட்டின் மீதும் அதிகாரத்தின் மீதும் பேராசை கொண்ட அவர்கள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகாவது திருந்த மாட்டார்களா என வாய்ப்பு கொடுத்த நீ உத்தமன். இது உன் அன்னைக்கு தெரியும். உன் மனைவிக்கு தெரியும். உன் சகோதரரகளுக்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் உன்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை பகைவனுக்கும் அருளிய நல்ல மனதுடையவன் என்று உன்னை மனதார வாழ்த்தி வணங்கி கொண்டிருக்கின்றார்கள். நீயோ இங்கு அழுது கொண்டிருக்கின்றாய் என்றார்.

கிருஷ்ணா இது போதும் என் மனபாரம் குறைந்ததது என் மனம் குளிர்ந்தது நான் கடைபிடிக்கும் தர்மத்தை காக்க நீ அருள்புரிந்திருக்கின்றாய். இல்லையேனில் சூதாடி வென்றான் யுதிஷ்டிரன் என்ற அவப்பெயர் எனக்கு வந்திருக்கும். சூதாடி வென்று தம்பியருக்கு ராஜ்யம் கொடுத்தான் அயோக்கியன் என்ற அவப்பெயர் காலத்துக்கும் நின்றிருக்கும். இதை என் குடும்பத்தர் எப்படி பொறுப்பார்கள். உலகம் என்னை எப்படி கருதியிருக்கும். நல்ல வேளையாக என்னை காப்பாற்றி இருக்கிறாய் என்று கிருஷ்ணரிடம் மகிழ்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் தன் கலக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அதற்கு கிருஷ்ணர் நீ கடைபிடிக்கும் தர்மம் உன்னோடு எப்போதும் நிற்கும். அதற்கு ஏற்றபடி தர்மமும் நானும் உன்னை காப்போம். கௌரவர்கள் ஆடாத ஆட்டம் ஆடி அந்த அக்கிரமத்தால் அழிந்தும் போவார்கள். நீ உன் கடமையினை செய் உன் இயல்பிலே இரு குற்றவுணர்ச்சியோ கண்ணீரோ கொள்ளாதே. அவர்களை சிலகாலம் வாழ வழிவிட்டதை எண்ணி உன் புண்ணியம் பெருகியிருப்பதை உணர்ந்து கொள் அது ஒரு நாள் உனக்கு வெற்றியளிக்கும் என்பதை மனதில் கொள் என்றார் கிருஷ்ணர். நடந்து முடிந்த சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியிலும் தனக்கு கிடைத்த பாடத்தை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனையும் அறியாமல் ஒரு கம்பீரமும் உற்சாகமும் அவனுக்குள் வந்தது. சகோதரர்களை நோக்கி சிரித்தபடி நடந்தான். அவனுக்கு தர்ம தேவதை புன்னகைத்தபடி குடைபிடித்து நடந்து கொண்டிருந்தது கிருஷ்ணனுக்கு மட்டும் தெரிந்தது.

சிறந்த ஆட்சி

கிருஷ்ணர் தர்மரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தர்மர் ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். தான தர்மங்களை முடித்துவிட்டு கிருஷ்ணரை சந்தித்த தர்மர் தான் தினமும் தான தர்மம் செய்வதை பற்றி மிக சிறப்பாகவும் உயர்வாகவும் எடுத்துச் சொன்னார். ஏழைகளுக்கு தர்மம் செய்வதால் நான் மிகவும் உயர்ந்தவனாக இருக்கின்றேன் என்ற ஒரு எண்ணம் அவர் மனதில் இருந்தது. அதனால் தான் சிறந்த மன்னன் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. இதனைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் உண்மையான ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக தர்மருக்கு போதிக்க முடிவு செய்தார்.

கிருஷ்ணர் தர்மரிடம் நாம் பாதாள லோகம் வரை சென்று வரலாமா என்று தமது விருப்பத்தை கூறினார். தர்மரும் அதற்கு அவருடன் பாதாள லோகம் சென்றார். அங்கே பலிச் சக்கரவர்த்தி ஆண்டு வருவதை சற்று விசித்திரமாகப் பார்த்தார் தர்மர். இங்கு ஆட்சி நடப்பது போலவே தெரியவில்லையே என்று தர்மர் தனக்குள் சிந்தித்துக் கொண்டே சென்றார். ஆனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் அவரால் காண முடிந்தது. சில நாட்கள் பலிச்சக்கரவர்த்தி உபசரிப்பில் கிருஷ்ணரும் தர்மரும் இருந்து வந்தார்கள். அப்பொழுது தர்மர் தினமும் ஏழைகளுக்கு பொருட்களை தானமாக வழங்கும் உயர்ந்த குணத்தையும் அந்த பெருமையையும் உயர்வாக பலிச்சக்கரவர்த்திக்கு எடுத்துச் சொன்னார் கிருஷ்ணர். தர்மரிடம் வந்த பலிச்சக்கரவர்த்தி உண்மையில் நீங்கள் மிகவும் உயர்ந்தவர் என்று பாராட்டி புகழ்ந்தார். நானும் உங்களைப் போல் தர்மம் கொடுக்க எண்ணுகிறேன் ஆனால் என் நாட்டில் தானம் கொடுத்தாலும் வாங்குவதற்கு ஒரு ஏழைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது நான் மிகவும் வேதனைப்படுகிறேன் என்று தன்னை மிகவும் தாழ்த்திக்கொண்டு சொன்னார். இதைக்கேட்ட தர்மர் நம் நாட்டில் ஏழைகள் இருக்கிறார்களே அதற்கு காரணம் நம்முடைய ஆட்சியின் சிறப்பு இன்மையே என்ற உண்மையை புரிந்து கொண்டு ஏழைகளே இல்லாத சிறந்த ஆட்சியை கொடுக்க முடிவு செய்தார்.

ஞானப் பறவைகள்

மகாபாரதக் கதை முழுவதையும் வியாச பகவானிடம் கேட்டறிந்தார் வியாசரின் சீடர் ஜைமினி முனிவர். அவருக்குச் சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று மகரிஷியே எனக்கு மகாபாரதத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜைமினி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நியாயமானவையே உங்கள் வினாக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க கால அவகாசம் இல்லை. நீங்கள் விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்கும் பிங்காக்ஷன், நிபோதன், சுபத்திரன், சுமுகன் என்ற நான்கு ஞான பட்சிகளைக் கேட்டால் அவை உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் என்றார். வியப்படைந்த ஜைமினி முனிவரே பக்ஷிகள் பேசுமா? அவை மகா பண்டிதர்களைப் போல் தர்ம சந்தேகங்களைத் தீர்க்குமா? என வினவினார். அந்த நான்கு பட்சிகளின் கதையை வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு முறை தேவேந்திரன் அப்சர ஸ்தீரிகளுடன் நந்த வனத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் அங்கு நாரத மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவரிடம் முனிவரே இந்த அப்சர பெண்களில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தேடுத்து அவளை நாட்டியம் ஆடும்படி ஆணையிடுங்கள் என்றான். நாரதர் அப்சரப் பெண்களே உங்களில் யார் ரூப லாவண்யங்களில் உயர்ந்தவர் என்று எண்ணுகிறீரோ அவர் ஆடலாம் என்றார். அவர்களில் ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று வாதிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். தேவேந்திரன் அவர்களுள் சிறந்தவளை நாரதரே தீர்மானிக்க வேண்டும் என்றான். நாரதர் அதற்கு ஒரு வழி கூறினார். இமாலயத்தில் துர்வாச முனிவர் கடுந்தவம் செய்து வருகிறார். உங்களில் யார் நடனமாடி அவர் தவத்தைக் கலைக்கின்றீர்களோ அவர்களே சிறந்தவர் என்று தீர்மானிப்பேன் என்றார் நாரதர். துர்வாசரின் பெயரைக் கேட்டதும் அப்பெண்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது. வபு என்ற பெண் நான் துர்வாசர் இருக்கும் இடத்திற்குச் சென்று அவரின் தவத்தை கலைக்கிறேன் என்று சொல்லிப் புறப்பட்டாள். வபு தன் ஆடலாலும் பாடலாலும் துர்வாசரின் தவத்தைக் கலைக்க முற்பட்டாள். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் அப்சரப் பெண்ணே நீ கழுகாகப் பிறப்பாய் என்று சபித்தார். அவள் துர்வாசரைப் பணிந்து தன் தவறை மன்னித்து சாப விமோச்சனம் அளிக்கும்படி வேண்டினாள். கருணை கொண்ட முனிவர் உனக்கு நான்கு குஞ்சுகள் பிறக்கும். நீ அர்ஜுனனின் அம்பு பாய்ந்து மரணமுற்று நிஜ ரூபத்தை அடைந்து இந்திரலோகம் செல்வாய் என்று ஆசீர்வதித்தார். வபு கழுகாகப் பிறந்து கர்பமுற்றாள். அப்போது மகாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்க்கச் சென்ற த்ராக்ஷி மேலே பறந்தபடியே யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் விடுத்த ஓர் அம்பு அவள் மேல் பாய்ந்தது. உடனே த்ராக்ஷியின் கர்பத்திலிருந்த நான்கு முட்டைகளும் பூமியில் விழுந்தன. என் குழந்தைகளை தெய்வம் தான் காக்க வேண்டும் என்று பிரார்த்தித்து உயிர் துறந்தாள்.

யுத்த பூமியில் பகதத்தன் என்ற வீரனின் வாகனமான சுப்ரதீபம் என்ற யானையின் கழுத்தில் தொங்கிய மணி அம்பு பட்டு அறுந்து சரியாக அந்த முட்டைகளின் மேல் கவிழ்ந்து விழுந்து அந்த மணியின் கீழ் முட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன. பாரத யுத்தம் முடிந்து குருக்ஷேத்திர பூமியில் அமைதி ஏற்பட்ட பின் ஒரு நாள் காலை சமீகர் என்ற மகா முனிவர் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார். மணியின் அடியிலிருந்து பறவைக் குஞ்சுகளின் கீச் கீச் எனும் ஒலியைக் கேட்டார். அதை கேட்டு ஆச்சர்யமாய்ந்த முனிவர் மணியைத் தூக்கிப் பார்த்து அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள் இருக்கக் கண்டார். கருணையோடு அவற்றைத் தம் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார். அப்போது அக்குஞ்சுகள் அவரிடம் மகானுபாவரே எங்களை கோரமான மரணத்திலிருந்து காத்தருளினீர்கள். எங்களுக்கு நீங்களே தாய் தந்தை குரு ஆவீர்கள். தங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். உங்களுக்கு நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டுமோ கூறியருளுங்கள் என்றன. வியப்புற்ற சமீகர் பறவைக் குஞ்சுகளே நீங்கள் யார் எதனால் இந்த பட்சி ஜென்மத்தை அடைந்தீர்கள் என்று கேட்டார்.

முனிவரே நாங்கள் நால்வரும் சுக்ருதி எனும் மகா முனிவரின் புதல்வர்களாகப் பிறந்திருந்தோம். சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தோம். பெற்றோரைப் பூஜித்து வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் எங்கள் தந்தையின் சத்திய நெறியைச் சோதித்தறிய விரும்பிய தேவேந்திரன் கழுகு உருவில் வந்து தனக்கு நர மாமிசம் வேண்டுமென்று கேட்டார். எங்கள் தந்தை எங்களிடம் யாராவது ஒருவர் இந்திரனுக்கு ஆகாரமாகுங்கள் என்று கட்டளை இட்டார். நாங்கள் பயந்து அதனை ஏற்கவில்லை. கோபமடைந்த எங்கள் தந்தை, துஷ்ட புத்திரர்களா நான் இந்த பட்சிக்கு ராஜனுக்கு வாக்களித்து விட்டேன். நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் பறவைகளாகப் பிறக்கக் கடவீர். என்று சபித்து விட்டார். பிறகு அவர் தன் உடலையே இந்திரனுக்கு உணவாகச் சமர்ப்பித்தார். இந்திரன் எங்கள் தந்தையின் தியாகத்தை மெச்சி மகிழ்ந்து எங்களிடம் நீங்கள் விந்திய மலையில் சென்று வசியுங்கள். வியாசரின் சீடரான ஜைமினி உங்களிடம் வந்து சில தர்ம சந்தேகங்களைக் கேட்பார். அவற்றைத் தீர்த்தவுடன் உங்கள் சாபம் விலகும். நீங்கள் பட்சிகளாக இருந்தாலும் சகல வேத தர்ம சாத்திரங்களையும் அறிந்த ஞான பக்ஷிகள் தர்ம பக்ஷிகள் என்று போற்றப் படுவீர்கள் என்று அருளினார். பறவைகள் இவ்விதம் தம் பூர்வ ஜென்மக் கதையைக் கூறக் கேட்ட சமீகர் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய சேவை எதுவும் இல்லை. நீங்கள் இனி விந்திய பர்வதத்திற்குச் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார். இப்போது அந்த பறவைகள் அங்கி இருக்கின்றன. அங்கு சென்று உனது சந்தேகங்களை தீர்த்துக்கொள் என்று அனுப்பி வைத்தார் வியாசர்.

ஜைமினி முனிவர் விந்திய பர்வதத்தில் ஞானப் பறவைகளைத் தேடிச் சென்றார். அப்போது அவைகள் இனிமையாக வேத அத்யயனம் செய்து கொண்டிருந்தன. அவற்றை அணுகி ஞானப் பறவைகளே நான் வியாசரின் சீடன். என்னை ஜைமினி என்பார்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து எனக்கு மனசாந்தி அளியுங்கள் என்றார். அப்பறவைகள் முனிவரே உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரிந்த வரை கூறுகிறோம் என்று பதிலளித்தன. ஜைமினி தனது சந்தேகங்களைக் கேட்டார்

  1. கௌரவ பாண்டவ யுத்தத்தின் போது பலராமர் ஏன் தீர்த்த யாத்திரை சென்றார்?
  2. திரௌபதிக்குப் பிறந்த ஐந்து உப பாண்டவர்களும் திருமணம் கூட நிகழாமல் திக்கற்றவர் போல் அகால மரணமடையக் காரணம் என்ன?

பலராமர் பாண்டவர்களின் உறவினர். சுபத்திரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து சம்பந்தியானவர். துரியோதனனுக்கு கதை யுத்தம் பயிற்றுவித்து குருவானவர். கிருஷ்ணரோ பாண்டவர் பக்கம் நிற்பவர். யுத்தத்தில் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் தனக்குப் பிரியமானவர்களோடு போர் செய்ய வேண்டி வரும். அச்சமயம் பலராமர் நைமிசாரண்யம் சென்ற போது பாகவத கதை சொல்லிக் கொண்டிருந்த சூத முனிவர் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கவில்லை என்ற கோபத்தில் அவரைக் கொன்று விட்டார். அங்கிருந்த மகரிஷிகள் பலராமரைப் பார்த்து வெறுப்புடன் நீ செய்த பாவத்தை எல்லோரிடமும் சொல்லியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை விரதம் அனுசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். தீர்த்த யாத்திரை செல்லும் சாக்கில் பலராமர் யுத்தத்திலிருந்து விலகி நின்றார்.

பாண்டவ புத்திரர்களான உப பாண்டவர்கள் முன் ஜென்மத்தில் விச்வேதேவர்கள் ஆவர்கள். ராஜா அரிச்சந்திரனை அரசுரிமையை விட்டு நீக்கி துன்புறுத்திய விச்வாமித்திரரை வானத்திலிருந்து பார்த்த விஸ்வேதேவர்கள் ஐந்து பேர் கருணை கொண்டு இத்தனை துன்பம் செய்கின்ற இந்த விசுவாமித்திரர் எந்த பாவ உலகிற்குச் செல்வரோ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அவ்வார்த்தைகளைக் கேட்ட விசுவாமித்திரர் ரோஷத்தோடு நீங்கள் ஐவரும் மனித உலகில் பிறப்பீராக என்று சாபமிட்டார். அப்போது விஸ்வேதேவர்கள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க சாந்தமடைந்து நீங்கள் மனித ஜென்மமெடுத்தாலும் மனைவி, சந்ததி, காமம், க்ரோதம் போன்றவை இன்றி மீண்டும் தேவர்கள் ஆவீர்கள் என்று ஆசீர்வதித்தார். இந்த ஐந்து விஸ்வேதேவர்களே திரௌபதியின் கர்பத்தில் பிறந்து விவாகம் பிள்ளைகள் போன்ற பந்தங்களில் சிக்காமல் பிரம்மசாரிகளாகவே அஸ்வத்தாமனின் கையால் மரணமடைந்தனர். ஞான பக்ஷிகளின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஜைமினி அவைகளிடம் அரிச்சந்திரனின் வரலாற்றை சம்பூர்ணமாகக் கேட்டு அறிந்து கொண்டார்.

மஹாத்மாக்களே எனக்கு இன்னும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றையும் தீர்த்து வையுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பக்ஷிகள் சம்மதித்தன. பாவங்கள் என்றால் என்ன என்று கேட்டார் ஜைமினி. முனிவரே பாவங்கள் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இரண்டு வகைப்படும். சின்னச் சின்னப் பாவங்களுக்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடும். ஏதோ ஒரு வியாதியின் உருவில் அவை அனுபவிக்கப்பட்டு விடும். பெரிய பாவங்களானால் ஜென்ம ஜென்மமாகத் துரத்தி வரும். தெரித்து செய்த பாவங்களுக்குத் தண்டனை பெரிதாக இருக்கும் என்று பதிலளித்தன தர்ம பக்ஷிகள். இவ்விதமாக இன்னும் தத்தாத்திரேயரின் கதை, காலயவனனின் கதை, மதாலசா சரித்திரம், கிருஹஸ்தாசிரம தர்மங்கள் போன்ற எத்தனையோ சந்தேகங்களைக் கேட்டார் ஜைமினி. அவற்றுக்கெல்லாம் ஞானப் பறவைகள் தகுந்த விளக்கங்கள் அளித்து அதன் மூலம் முக்தி பெற்றன. சந்தேக நிவர்த்தி அடைந்த ஜைமினி ரிஷி ஞான பட்சிகளின் உருவத்தில் இருந்த முனி குமாரர்களை ஆசீர்வாதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.