நவகுஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட உயிரினம் ஆகும். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு நவகுஞ்சரம். நவ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர். ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தான். அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றியது. தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார். பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது என்பதை உணர்ந்தார் அர்ஜுனன். வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தான். தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.

ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும் அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா சித்ரா ஓவியத்தில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது. நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

உயர்ந்த தர்மம்

பூலோகத்தில் மரணத்துக்குப் பின் மேலுலகம் சென்ற கர்ணன் சூரிய லோகத்தில் உள்ள தன் தந்தை சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான். தந்தையே நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தர்மத்தை காப்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மத்திற்காக துரியோதனன் பக்கம் இருந்து போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கிருஷ்ணர் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டார் இதன் காரணம் எனக்கு புரியவில்லை என்று புலம்பினான். அதற்கு சூரிய பகவான் கர்ணா கிருஷ்ணரை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கிருஷ்ணர் உயர்ந்த தர்மமாக விளங்குபவன். உயர்ந்த தர்மம் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மம் என்ற இரண்டு தர்மங்களில் எதை காப்பாற்ற வேண்டும் என்று வருகையில் உயர்ந்த தர்மத்தையே கிருஷ்ணன் காப்பாற்ற எண்ணுகிறான். நீ சாமானிய தர்மத்தை காப்பாற்ற எண்ணி உயர்ந்த தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தர்மம். அதற்காக இரண்யனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடக்கவில்லை. நரசிம்மர் என்ற உயர்ந்த தர்மத்தை பிரகலாதன் பிடித்துக்கொண்டான். பிரகலாதனை இறைவன் காப்பாற்றினான். தாயிற் சிறந்த கோவிலில்லை. தாய் சொல்லை கேட்பது தர்மம். ஆனால் பரதன் கைகேயியின் ஆசைக்கு உடன்படவில்லை. ராமர் என்னும் உயர்ந்த தர்மத்தை பற்றினான். விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி செய்யும் சாமானிய தர்மத்தை விட்டு உயர்ந்த தர்மமான ராமனை வந்து பற்றினான். கர்ணா சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும். ஆனால் உயர்ந்த தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் உயர்ந்த தர்மத்தையே பிடித்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

அசுவமேத யாகத்திற்கு சமமான பலன்

பூஜையில்லாத சிவலிங்கத்திற்கு அல்லது கோவிலுக்கு நித்ய பூஜையை உண்டாக்குபவன். ஏழ்மையில் உள்ளவனுக்கு எதையும் ஏதிர்பாராமல் தானம் செய்பவன். தயையின்றி இருக்கும் சடலத்தை எடுத்து அதற்கு உரிய சிரார்தம் செய்பவன் அல்லது அதற்கு உபகாரம் செய்பவன் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை செய்பவனுக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது.

விதுரரின் சிந்தனைகள்:

மகாபாரதத்தில் விதுரர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார். அத்தகைய பெருமை மிக்க விதுரர் 15 வகையான மூடர்களை பட்டியலிடுகிறார்.

  1. தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.
  2. தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.
  3. பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.
  4. உயர்ந்த குடும்பத்தில் பிறந்து முறையற்ற செயலை செய்பவன்.
  5. தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.
  6. எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து தற்பெருமை பேசுபவன்.
  7. பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
  8. பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
  9. பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ பெற்றுக்கொண்டு பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.
  10. தனது மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
  11. அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
  12. தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
  13. புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து அதை தானே சொல்லித்தற்பெருமை பேசுபவன்.
  14. எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.

மாகாபராதம் குருசேத்திர போர் வியூகம்

  1. கிரௌஞ்ச வியூகம் – நாரை வியூகம்
  2. மகர வியூகம் – முதலை வியூகம்
  3. கூர்ம வியூகம் – ஆமை வியூகம்
  4. திருசூல வியூகம் – திரிசூலம் வியூகம்
  5. சக்ர வியூகம் – சக்கரம் வியூகம்
  6. கமலா வியூகம் – பூத்த தாமரைமலர் வியூகம்
  7. கருட பத்ம வியூகம் – கருடன் வியூகம்
  8. ஊர்மி வியூகம் – கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. மண்டல வியூகம் – வான் மண்டல வியூகம்
  10. வஜ்ர வியூகம் – வைரம் இடிமுழக்கம் போன்ற வியூகம்
  11. சகட வியூகம் – பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம் – அசுர வியூகம்
  13. தேவ வியூகம் – தேவ வியூகம்
  14. சூச்சி வியூகம் – ஊசி போன்ற வியூகம்
  15. ஸ்ரிங்கடக வியூகம் – வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. சந்திரகல வியூகம் – சந்திர பிறை வடிவ வியூகம்
  17. மலர் வியூகம் – பூ மாலை போன்ற வியூகம்
  18. சர்ப வியூகம் – நாக வியூகம்

குருச்சேத்திர படைகள்

அஸ்தினாபுரம் அரியணைக்காக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த போர் குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் இருப்பதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. படைகளும் அதன் வகைகளும்

ஒரு தேரும் ஒரு யானையும் ஐந்து காலாட்களும் மூன்று குதிரைகளும் சேர்ந்தது ஒரு பத்தி.
மூன்று பத்தி ஒன்று சேர்ந்தது ஒரு சேனாமுகம்.
மூன்று சேனாமுகம் ஒன்று சேர்ந்தது ஒரு குல்மம்.
மூன்று குல்மம் ஒன்று சேர்ந்தது ஒரு கணம்.
மூன்று கணங்கள் ஒன்று சேர்ந்தது ஒரு வாகினி.
மூன்று வாகினி ஒரு பிருதனை.
மூன்று பிருதனை ஒரு அனீகினி.
பத்து அனீகினிகள் ஓர் அக்ரோணி சேனை.

ஓர் அக்ரோணி படை என்பது
21870 தேர்கள்
21870 யானைகள்
65610 குதிரைகள்
109350 காலாட்படைகள் ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர் அணியில் 11 அக்ரோணி படைகளும் பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

அதிரதர்

இவர்கள் இருப்பதிலே திறமை அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர் தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று ஒரே சமயத்தில் பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர் ஆவார்.

மகாரதர்

இவர்கள் அதிரதருக்கு அடுத்தபடியாக தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள்.

சமரதர்

இவர்கள் மகாரதருக்கு அடுத்தபடியாக ஒரு சமயத்தில் ஒரு தேர்வீரரோடு போரிடும் வல்லமை கொண்டவர்.

வில் வித்தையில் அஸ்திரங்களின் ஆளுமையும் அவற்றின் செயல்பாடும்

அஸ்திரங்கள் என்பவை அம்பு தர்ப்பை பொருட்களின் மேல் மந்திரங்களால் உருவேற்றப்பட்ட மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். அஸ்திரங்கள் அனைவருக்கும் கிட்டிவிடாது. முறையான பயிற்சியும் குருவின் துணையும் இறையருளும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும். இந்த அஸ்திரங்களுக்கு அம்புகள் அவசியம் தேவையில்லை. ஒரு தர்பை புல்லை எடுத்து அந்த அஸ்திரத்திற்கு உண்டான மந்திரத்தை ஜெபித்து இலக்கை நோக்கி விசினால் கூட அஸ்திரம் தனது பணியை செய்துவிடும்.

பிரம்மாஸ்திரம்: பிரம்மாவின் அஸ்திரம். இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது.

பிரம்மஸ்ரிஷா: பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.

இந்திராஸ்திரம்: இந்திரனின் அஸ்திரம். ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.

வஜ்ராயுதம்: இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.

பாசுபதாஸ்திரம்: சிவனின் அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும் அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.

ஆக்னேயாஸ்ச்திரம்: அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்

வருணாஸ்திரம்: வருணனின் அஸ்திரம். எல்லை இல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்

வாய்வாஸ்திரம்: வாயுவின் அஸ்திரம். கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம்.

சூரியாஸ்திரம்: சூரியனின் அஸ்திரம். இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம்.

நாகாஸ்திரம்: நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைப்பதற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான எதிரான அஸ்திரம் கிடையாது.

நாகபாசானம்: விஷம் கொண்ட நாகங்கள் இலக்கை கட்டி மயக்கமடைய செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.

மோகினி அஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது

சம்மோஹனம்: எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது

பிரம்மோஹனம்: சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது

நாராயனாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். எண்ணற்ற அம்புகளையும் சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால் நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்

வைஷ்ணவாஸ்திரம்: விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.

பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல் வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.

நல்லதை அப்போதே செய்ய வேண்டும்

ஒரு நாள் பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஏழை ஒருவன் வந்து யுதிஷ்டிரனிம் ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்றான். உடனே யுதிஷ்டிரர் தனது இடது கையால் பக்கத்திலிருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து தானமாகக் கொடுத்தார். ஏழை வாங்கிச் சென்றதும் பீமன் அண்ணா இடது கையால் செய்வது பாவமாயிற்றே. தர்ம பலனும் இல்லையே. எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று கேட்டான்.

தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனமிறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் சாப்பிட்டுக் கைகழுவி வந்த பின்பு தரலாம் என்றால் அதற்குள் இந்தப் பொல்லாத மனம் மாற வாய்ப்பு இருக்கின்றது. ஒரு வேளை வேறு ஏதாவது பொருளைக் கொடுத்தால் போதாதா வெள்ளிக் கிண்ணம் கொடுக்க வேண்டுமா என்று தோன்றலாம். எனவே நல்லதைச் செய்ய நினைக்கும்போது அந்த நொடியிலேயே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையைவிட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றார் யுதிஷ்டிரர்.

நகுசன்

விருத்தாசுரன் என்ற அரக்கன் இந்திரலோகத்தில் நுழைந்து அங்கிருந்தவர்களையெல்லாம் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினான். அவனுடைய தாக்குதலைக் கண்டு பயந்த அனைவரும் இந்திரனிடம் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றனர். இந்திரன் தனது படையுடன் சென்று விருத்தாசுரனை எதிர்த்துப் போரிட்டான். விருத்தாசுரனின் அசுரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இந்திரன் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து வெளியேறினான். மேலும் விருத்தாசுரன் தன்னைக் கண்டுபிடித்து அழித்து விடுவானோ என்று பயந்து தாமரைத் தண்டு ஒன்றினுள் சென்று மறைந்து கொண்டான். பின்னர் அங்கிருந்தபடியே விருத்தாசுரனை எதிர்த்துப் போரிடுவதற்கான பலம் வேண்டி தவம் செய்யத் தொடங்கினான். இந்திரன் இல்லாததால் தேவலோகத்தை நிர்வகிக்க முடியாமல் போனது. எனவே தற்காலிகமாக ஒரு இந்திரனைத் தேர்வு செய்ய தேவர்கள் முடிவு செய்தனர். இந்திரப் பதவியில் அமர்ந்தால் விருத்தாசுரன் நம்மை அழித்து விடுவான் என்கிற பயத்தால் பலரும் அந்தப் பதவியை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் பூலோகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வந்த நகுசன் என்ற மன்னனை இந்திரப் பதவியில் அமர்த்த தேவர்கள் முடிவு செய்தனர்.

நகுசன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து முடித்த பலனால் தேவர்கள் அவனைத் தேர்வு செய்தனர். நகுசனிடம் சென்று தேவர்கள் தங்கள் கோரிக்கையை கூறினர். நகுசனும் தேவர்கள் விருப்பப்படி இந்திரப் பதவியை ஏற்றுக் கொண்டான். அந்தப் பதவியில் அமர்ந்ததும் அவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போயின. இந்திரப் பதவியின் பெயரிலான கர்வமும் பேராசையும் நகுசனை ஆட்டிப்படைத்தது. இந்திரலோகத்தில் இருக்கும் அனைத்துச் செல்வங்களும் பொருட்களும் தனக்குரியது என்று உரிமை கொண்டாடினான். அது மட்டுமின்றி அங்கிருக்கும் நடன மங்கைகளும் இந்திராணியும் கூட தனக்கே சொந்தமானவர்கள் என்றான். இதனால் கவலையடைந்த இந்திராணி தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று நகுசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.

தேவகுரு நகுசனைத் தனியாக அழைத்து அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை. அடுத்த நாள் தன்னைத் தேடி வந்த இந்திராணியிடம் இனி நகுசன் உன்னைத் தேடி வரும் பொழுது நீ அவனை ஏற்றுக் கொள்ள எந்த மறுப்பும் தெரிவிக்காதே. இந்திரலோகத்தில் இருக்கும் குறு முனிவர்களால் செய்யப்பட்ட பல்லக்கில் அவர்கள் உன்னைச் சுமந்து வந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பி விடு. அதன் பிறகு உனக்கு அவனால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று தேவகுரு சொல்லி அனுப்பினார். நகுசன் இந்திராணியைத் தேடிச் சென்ற போது அவளும் தேவகுரு சொன்னதைச் சொல்லி அனுப்பினாள். நகுசன் குறு முனிவர்களைத் தேடிச் சென்று தன்னைப் பல்லக்கில் அமர வைத்து இந்திராணி இருக்கும் இடத்துக்குச் சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். அவன் இந்திரப் பதவியில் இருப்பதால் முனிவர்களான அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் அவனை அந்தப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் சென்றனர். அப்படித் தூக்கிச் செல்லும் வழியில் நகுசன் அவர்களிடம் வேகமாக வேகமாக என்று பொருள் தரும் வகையில் சமஸ்கிருத வார்த்தையான சர்ப்ப சர்ப்ப என்று சொல்லி விரட்டிக் கொண்டே இருந்தான். அந்தப் பல்லக்கைச் சுமந்து சென்ற முனிவர்களில் ஒருவரான அகத்தியருக்கு அது எரிச்சலைத் தந்தது. கோபமடைந்த அகத்தியர் நகுசனைப் பார்த்து எங்களைச் சர்ப்ப சர்ப்ப என்று விரட்டிய நீ இப்போதே மலைப்பாம்பாக மாறி பூலோகத்தில் விழுந்து காட்டில் அலைந்து திரிந்து கஷ்டப்படு என்று சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்த நகுசன் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி தான் தெரியாமல் செய்த தவறை மன்னித்துச் சாபத்திலிருந்து விமோசனம் தந்தருளும்படி வேண்டினான். அகத்தியர் கோபம் குறைந்து நகுசனே நீ பூலோகத்தில் மலைப்பாம்பாக வாழ்ந்து வரும் காலத்தில் வனவாழ்க்கை மேற்கொள்ளும் பாண்டவர்களில் ஒருவரான பீமன் உன்னிடம் மாட்டிக் கொள்வான். அவனை உன்னிடமிருந்து மீட்பதற்காக அவனுடைய சகோதரன் ஒருவன் வருவான். அவன் நீ கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்வான். அப்போது உனக்கான சாபம் நீங்கும் என்றார். முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த நகுசன் அஜகரம் என்கிற பெயரில் மலைப்பாம்பாக மாறினான். அவனுடைய பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போயின. மலைப்பாம்பு அங்கிருந்த மலைக்குகை ஒன்றைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டது. அந்தக் காட்டிற்குள் இருந்த பறவைகளும் விலங்குகளும் அந்த மலைப்பாம்பிற்கு இரையாகிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் கடந்து பின் பாண்டவர்கள் தங்களின் வனவாழ்க்கைக்காக அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு நாள் பாண்டவர்களில் ஒருவரான பீமன் மட்டும் காட்டுக்குள் தனியாகச் சென்று பல விலங்குகளை வேட்டையாடினான். மலைப்பாம்பு வசித்த குகையின் அருகில் அவன் சென்றபோது அது அவனைச் சுற்றிவளைத்துக் கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் பீமனால் அதன் பிடியில் இருந்து விடுபடமுடியவில்லை. மலைப்பாம்பு பீமனை விழுங்க முயன்றபோது அதற்கு தன்னுடைய முந்தைய வாழ்வும் சாபமும் நினைவுக்கு வந்தது. இந்த நிலையில் காட்டிற்குள் சென்ற தம்பியைக் காணாததால் அவனைத் தேடி யுதிஷ்டிரர் காட்டுக்குள் வந்தார். அப்போது மலைப்பாம்பிடம் பிடிபட்டிருக்கும் தன் தம்பியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

யுதிஷ்டிரர் அந்த மலைப்பாம்பிடம் பாம்பே உன் பசிக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன். என் சகோதரனை உன் பிடியிலிருந்து விட்டு விடு என்று கேட்டார். நீ கொண்டு வந்து கொடுக்கும் உணவு எதுவும் எனக்குத் தேவையில்லை. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் நான் உன் சகோதரனை விட்டு விடுகிறேன். சரியான பதில்களைச் சொல்லாவிட்டால் உன் சகோதரனை மட்டுமில்லாமல் உன்னையும் சேர்த்து எனக்கு இரையாக்கிக் கொள்வேன் என்றது மலைப்பாம்பு. யுதிஷ்டிரர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் மலைப்பாம்பு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தார். அவரது பதில்களால் மகிழ்ந்த மலைப்பாம்பு பீமனை விடுவித்தது. மலைப்பாம்பு சாப விமோசனம் பெற்று நகுசனாக சுய உருவம் பெற்றான். அவன் யுதிஷ்டிரரை வணங்கி இந்திரலோகம் சென்றடைந்தான்.

கர்ணன்

கர்ணன் கிருஷ்ணரை பார்த்து கேட்டான் என் தாயார் நான் பிறந்த உடனே என்னை ஆற்றில் விட்டுவிட்டார். நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. பரசுராமர் எனக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார் ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க எனக்கு சாபம் கொடுத்தார். ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். தாய் குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் கர்ணா நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள், வாள் ஆகியவற்றின் இரைச்சலுடன் நீ வளர்ந்திருப்பாய். ஆனால் நானோ மாடு கொட்டகையில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை. ராணுவ பயிற்சி இல்லை. ஆனால் அனைவரும் நான் தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிற போது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன். நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்துகொண்டேன். ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு நான் ஓடிப்போன ஒரு கோழை. துரியோதனன் போரில் வெற்றி பெற்றால் உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பாண்டவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும். கிருஷ்ணன் தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும். எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே என்று கர்ணனுக்கு விளக்கினார்.