கலியுகம் பற்றி யுதிஷ்டிரர்

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சந்தைக்குள் நுழைந்து ஒரு அழகான குதிரையை பார்த்த உடன் குதிரையின் உரிமையாளரை நெருங்கி குதிரை என்ன விலை என்று கேட்டான். அதற்கு குதிரையின் உரிமையாளர் இந்த குதிரை விற்பனைக்கு அல்ல நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் குதிரையை இலவசமாகவே கொடுப்பேன் என்றார். சகாதேவன் உடனே சரி கேள்வியைச் சொல்லுங்கள் என்றான். ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால் அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால் பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன் என கேட்க சகாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில் சகாதேவனை தேடிக்கொண்டு் வந்த நகுலன் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.குதிரையின் உரிமையாளர் நகுலனிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை ஏன் என்று கேட்டார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. சகாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர் அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார். ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில் அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள் என்று கேட்டான். பதில் சொல்ல முடியாததால் அர்ஜுனனும் அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க அரண்மனையில் அவர்களைக் காணாமல் யுதிஷ்டிரர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு தம்பி நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய் அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா என்றார். பீமனும் போய் தேடிப்பிடித்து அர்ஜுனன் நகுலன் சகாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். திரௌபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் அவர்களைப் பார்த்ததும் அர்ஜுனா நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள் எனக் கேட்டார். அதற்குப் அர்ஜுனன் நடந்ததை எல்லாம் சொல்லி குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். யுதிஷ்டிரர் நடுங்கிவிட்டு பதில் சொல்லத் தொடங்கினார். எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள் என்று விரிவாகக் கூறினார்.

அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள் ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி அவ்வளவு பிள்ளைகளையும் பிரியமாக காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது என்றார். இரண்டாவது கேள்விப்படி இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில் அதன் வால் போக முடியவில்லை என்று பதில் கூறினார். அடுத்து மூன்றாவது கேள்வி பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும் பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள் வறுமையில் வாடுவார்களே தவிர அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான் வேலி அப்படியே இருக்க பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது. கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி முடித்தார் யுதிஷ்டிரர்.

கலியுகம் பற்றி கிருஷ்ணர்

பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார் கிருஷ்ணர். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

பீமன் அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு அதைச் சுற்றி நான்கு கிணறுகள் சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன் அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

சகாதேவன் கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன் கிருஷ்ணரின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்து தள்ளி வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன் தெளிவுபெற கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நான்கு பாண்டவர்களும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும் மனதில் உள்ள குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

பீமா கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள். வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

அர்ஜுனா கலியுகத்தில் போலி மதகுருக்கள் ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள். குயிலை போல.

சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள் பசுவை போல்.

நகுலா கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல் நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் பாறையை தடுத்த சிறுசெடியை போல் என்று பதில் சொல்லி முடித்தார்.

அர்ஜூனனின் காண்டீபம்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன் கர்ணா இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள் என்றான். கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். நீ அல்லவோ சுத்த வீரன் அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர் கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றார். அது என்ன என்று கேட்டான் அர்ஜுனன். நேரம் வரும் போது சொல்கிறேன் என்றார் வியாசர். பல ஆண்டுகள் கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின் கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். அர்ஜுனா நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு என்று கூறினான் கிருஷ்ணன். கனத்த மனத்துடன் கிருஷ்ணரிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும் யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படும் வில்லுக்கு விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில் இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். அர்ஜுனா நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது என்று கூறினார் வியாசர். கிருஷ்ணரே புறப்பட்ட பின் நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால் என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது. இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே என்ன காரணம் என்று கேட்டான் அர்ஜுனன். அதற்கு வியாசர் உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கிருஷ்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால் இதை உன்னால் தூக்க முடியவில்லை என்றார்.

சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே ஏன் தெரியுமா கிருஷ்ணரின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். கிருஷ்ணரின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன் கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான். பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் இறைவன் தான் வழங்குகிறார் என்றார் வியாசர்.

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன்

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. ராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி என்றால் ஏன் அவர் தன் வில்லினால் அம்பைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து கல்லினால் ஏன் பாலம் கட்டினார் எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது ஒரு நதியின் அருகே அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருவம் கொண்டு அமர்ந்து ராமநாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அவரிடம் சென்று ஏய் வானரமே உன் ராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார் என்றான் கர்வமாக. தியானம் கலைந்த அனுமன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க எண்ணுகிறார்.

வில்லினால் கட்டப்பட்ட சரப்பாலம் என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும் போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும். ஆகையால் கல்லினால் வானரங்களை வைத்து பாலம் கட்டினார் என்றார் அனுமன். அதற்கு அர்ஜூனன் இந்த நதியின் குறுக்கே நான் அம்பினால் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும் என்கிறான் அர்ஜூனன். பாலம் உடைந்துவிட்டால் வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன் என்கிறான். பாலம் உடையவில்லை என்றால் என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன் என்கிறான் அனுமன். அர்ஜூனன் அம்பினால் சரப்பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து ராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினார். அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும் அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தார் உடனே பாலம் தகர்ந்து சுக்குநூறானது. பார்த்தாயா என் ராமனின் சக்தியை என்ற அனுமன் ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.

போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான் தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள் கிருஷ்ணா என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும் தனது வாக்கிலிருந்து பின்வாங்க அர்ஜூனன் தயாராக இல்லை. அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது என்ன நடக்கிறது இங்கே என்ன பிரச்சனை என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில் ஒரு அந்தணர் தென்பட்டார். இருவரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு கிருஷ்ண கிருஷ்ண என்று சொல்லியபடி பாலம் கட்டினான். தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால் கர்வம் சிறிது தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை ராம நாம ஜெபம் செய்யவில்லை. அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார் நிற்கிறார் ஓடுகிறார் ஆடுகிறார் பாலம் ஒன்றும் ஆகவில்லை. அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அந்தணரை நோக்கி வந்து யார் நீங்கள் என்று கேட்கிறார் அனுமன். அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர். நீங்கள் இருவருமே தோற்கவில்லை. வெற்றி பெற்றது கடவுள் பக்தியும் இறைவனின் நாமமும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை அகந்தை அழிந்த அர்ஜூனன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன் தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி ராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது இறைவனின் நாமம்தான் தவிர நீங்கள் அல்ல என்றார்.

கர்வம் தோன்றும் போது கடமையும் பொறுப்புக்களும் மறந்து விடுகின்றன. உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது சந்தேகமேயில்லை. ஆனால் தன்னால் முடியும் என்று கர்வத்துடன் எண்ணும் போது இறை நாமத்தையும் அனைதுத்தும் அவர் செயலே என்பதையும் மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா இந்த வானரன் வேறு யாருமல்ல சிரஞ்சீவி அனுமனே என்றார். உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டினார். அர்ஜூனன் அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர் ஆஞ்சநேயா பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும் வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது என்றார். அப்படியே ஆகட்டும் பிரபோ என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.

கலிபுருஷன்

பரீட்சித்து அரசன் மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் பிறந்தவன். குருச்ஷேத்திரப் போரில் கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது பரிட்சித்து உத்திரையின் கர்ப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன் பிரம்மாஸ்வரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணர் பரீட்சித்தை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ணரும் பாண்டவர்களும் கலியுகம் ஆரம்பிக்க போகிறது ஆகவே உலகைவிட்டு செல்ல முடிவெடுத்து பரீட்சித்துவை அரசனாக்கிவிட்டு செல்கின்றனர். குரு நாட்டின் அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.

மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை. கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள். திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது. துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை. அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி. கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறாள் பூமித்தாய். தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது. ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன. சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன். தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன். பரீட்சித்து மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன்.

கிருஷ்ணர் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட கலிபுருசன் அடி எடுத்து வைத்துவிட்டான். உடனே தனது வாளை எடுத்து நான் இருக்கும் வரையில் தர்மம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கலிபுருசனை வெட்ட தயாராகிறான் பரீட்சித்து. கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து அவனை வெற்றி பெற இயலாது. கலிபுருஷன் பரீட்சித்து மகாராஜாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள் நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன் என்று கலிபுருஷன் பரீட்சித்துவிடம் கெஞ்சுகிறான். பரீட்சித்து மகராஜா கலிபுருசனுக்கு நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கிறார்.

  1. சூதாட்டம் ஆடும் இடம்
  2. மது அருந்தும் இடம்
  3. பெண்களை அவமரியாதை செய்யும் இடம்
  4. பிராணிகளை வதை செய்யும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் நான்கு இடங்களை கொடுக்கிறார்.

  1. தங்கம் இருக்கும் இடம்
  2. பொய் பேசப்படும் இடம்
  3. ஆணவம் செருக்கு இருக்கும் இடம்
  4. காமம் கோபம் இருக்கும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் இரண்டு இடங்களை கொடுக்கிறார்.

  1. பேராசை இருக்கும் இடம்
  2. பகைமை இருக்கும் இடம்

திருப்தி அடைந்த கலி நான் இருக்கும் இந்த 10 இடங்களில் உங்களுடைய மக்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உத்திரவாதம் கொடுத்து உலகத்தில் கலியுகத்தை ஆரம்பிக்கின்றார் கலிபுருசன்.

உத்தவர்

கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில் தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கிருஷ்ணரரிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில் தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உத்தவரிடம் இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள் தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கிருஷ்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த பல கிருஷ்ணனின் லீலைகள் புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன. அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

கிருஷ்ண நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழிவேறு. நீ நடத்திய மகாபாரத நாடகத்தில் நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர். கிருஷ்ணர் சம்மதிக்க உத்தவர் கேட்க ஆரம்பித்தார். கிருஷ்ணா நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கு அறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று யுதிஷ்டிரா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை. விளையாட ஆரம்பித்ததும் யுதிஷ்டிரர் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. யுதிஷ்டிரன் செல்வத்தை இழந்தான். தன் நாட்டை இழந்தான். தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் யுதிஷ்டிரனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் ஆடை தந்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சியமானம் என்ன அவளிடம் இருக்கிறது. அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? ஆபத்தான இது போன்றசமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத நீ எப்படி ஆபத்பாந்தவன்? நீ செய்தது நியாயமா தருமமா? என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

உத்தவரே விவேகம் உள்ளவனே வெற்றி பெற வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் யுதிஷ்டிரனுக்கு இல்லை. அதனால் தான் யுதிஷ்டிரன் தோற்றான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச்சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம் யுதிஷ்டிரனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் கிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாம். யுதிஷ்டிரன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். இதனை மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதி வசத்தால் சூதாடஒப்புக் கொண்டேன். இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது கடவுளே என்று மனதில் எண்ணிக்கொண்டான். கிருஷ்ணன் மட்டும் சூதாட்டமண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிடவில்லை. அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது திரௌபதியும் என்னை கூப்பிடவில்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கடைசி வரை கூப்பிடவில்லை. துச்சாதனன் துகிலுரித்த போது தனது பலத்தால் போராடாமல் அபயம் கிருஷ்ணா அபயம் எனக் குரல் கொடுத்தாள் திரௌபதி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு என்று பதிலளித்தார் கிருஷ்ணர்.

அப்படி என்றால் நீ கூப்பிட்டால் தான் வருவாயா கிருஷ்ணா. நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா என்று கேட்டார். உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம் மட்டுமே நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன் மட்டுமே. அது தான் தெய்வ தர்மம் என்றார். அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்டார் உத்தவர். அதற்கு கிருஷ்ணர். உத்தவரே நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக கவனியுங்கள்.

நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. நான் உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மறந்துவிடும் போதும் எனக்குத் தெரியாமல் ஏதாவது தீவினையைகளை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அப்போதுதான் நடக்கிறது. எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று யுதிஷ்டிரன் நினைத்தானே அது அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றார் கிருஷ்ணர். உத்தவர் தனது கேள்விக்கு கிடைத்த பதிலில் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். அவனின்றி ஓர்அணுவும் அசையாது என்ற நம்பிக்கையுடன் சரணாகதி அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை.

கிருஷ்ண லீலை

ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது ஏகாதசி அன்று கிருஷ்ணர் நீண்ட நாட்களாக வரவேயில்லையே என்று எண்ணினாள். அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் என்று சுவையான பால் பாயசத்தை செய்து தான் வழிபடும் கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது குடிலின் வாயிலில் நின்று அத்தை என்று கிருஷ்ணர் கூப்பிட்டார். குந்திதேவி அந்த பாயச பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு என்று அன்போடு வரவேற்றார்.

அத்தை நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன். பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது என்றார் கிருஷ்ணர். உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டு வருகிறேன் என்று கொண்டு வந்தாள். அனைவரும் எங்கை என குந்திதேவியிடம் கிருஷ்ணர் கேட்டார். அதற்கு கிருஷ்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்றாள். அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள் காட்டில் இருக்கின்றார்கள். இன்னும் சில காலம் தான் அத்தை எல்லாம் மாறும் என்றார். குந்திதேவி கர்ம வினையை அனுபவிக்கிறோம். எப்பொழுது நீ எங்களுடன் இருப்பதே எங்களுக்கு அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக இருக்கிறோம். எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன் இதோ ஒரு நிமிடம் என்று பாதி பாயசத்தை தனக்கும் தன் புதல்வர்களுக்கும் திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கிருஷ்ணருக்கு எடுத்து வந்தார் குந்திதேவி. கிருஷ்ண பரமாத்மா புன்சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து ஆஹா என்ன சுவை அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான். எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும் எனக் கேட்டார். தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்திதேவி செய்வதறியாமல் புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே என்று நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் கொடுத்தாள். அதை வாங்கிய கிருஷ்ணர் கொடு என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு இப்போதுதான் திருப்தியானேன் என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.

குந்திதேவி கிருஷ்ணா என் புதல்வர்களுக்கு ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே. நான் எதேனும் தவறு செய்து விட்டேனா என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி குரலில் வந்தது. அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன். என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா. உள்ளே சென்று பார் நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும் தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன். இதுவும் என் லீலைதான் என்றது கிருஷ்ணரின் குரல் அசிரீரீயாக. இதைக்கேட்ட குந்திதேவி ஆனந்தக் கண்ணீருடன் பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்தேன். என்னை மன்னித்துவிடு என்று கூறி உள்ளே சென்று பாயசத்தை எடுத்து கிருஷ்ணா என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள். பீமனுக்கு ஒரே சந்தோஷம் தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் பெற்ற சகாதேவன்

காட்டில் இருந்த பாண்டு மன்னன் தன் உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் மாறாக பிய்த்து தின்று விடும்படியும் அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ணர் வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது யாராவது பிணத்தை தின்பார்களா வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் விறகு எடுக்க சென்றதும் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்ற‌வர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன் கிருஷ்ணரிடம் எல்லோரும் விறகை சுமந்து வந்தீர்கள். சகோதரர்கள் நால்வரும் க‌ளைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்து தானே வந்தது. நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய் என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். எதிர்காலம் தேவ ரகசியம் என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியம் கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார். தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகி விட்டது.

துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் சற்று நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படிகூறலாமா என்று கேட்கிறார். ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு என்று கேட்டார். இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் அனைத்தும் கடவுளின் பிடியில் மட்டுமே இருக்கும் என்பதை உணர்ந்தான். அடங்கியது அவன் கர்வம்.

நம்பிக்கை

அர்ஜுனனும் கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். அர்ஜுனா அது புறா தானே என்று கேட்டார் கிருஷ்ணர். ஆமாம் கிருஷ்ணா அது புறா தான் என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு அர்ஜுனா எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே ஆமாம் ஆமாம் அது பருந்து தான் என்று சொன்னான் அர்ஜுனன். மேலும் சில விநாடிகள் கழித்து அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால் அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது என்று கிருஷ்ணர் சொல்ல கொஞ்சமும் தாமதிக்காமல் தாங்கள் சொல்வது சரிதான் அது கிளி தான் என பதிலளித்தான் அர்ஜுனன். இன்னும் கொஞ்சம் நேரமானதும் அர்ஜுனா முதலில் சொன்னது எல்லாம் தவறு. இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு காகம் என்று சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர். நிஜம் தான் கிருஷ்ணா அது காகமே தான் சந்தேகமே இல்லை பதிலளித்தான் அர்ஜுனன்.

அர்ஜுனா நான் சொல்வதை எல்லாம் நீயும் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா என்று கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார். கிருஷ்ணா என் கண்ணை விடவும் அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீ ஒன்றைச் சொன்னால் அது பருந்தோ காகமோ புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. அதனால் நீ என்ன சொல்கிறாயோ அப்படித் தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும் என்று அமைதியாகச் சொன்னான் அர்ஜுனன். இந்த நம்பிக்கை தான் கிருஷ்ணரை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

கிருஷ்ணரால் உயிர்ப்பிக்கப்பட்ட பரீட்சித்

பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை வியாசமுனி தடுத்து ஏவிய அஸ்திரங்களைத் திரும்பப் பெறக் கோருகிறார். திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ஜூனன் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான். அதனைத் திரும்பப்பெறத் தெரியாத அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல அவன் அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான். உத்தரை கருவில் இறந்த குழந்தையைக் கரிக்கட்டை சாம்பலாக பிரசவித்தது கிருஷ்ணர் நீர் தெளித்து அந்த சாம்பலை உயிர்ப்பித்தார். அக்குழந்தைதான் பரீட்சித். கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீட்சித் எனும் பெயர் வந்தது.