அக்னி நட்சத்திரம் குறித்த மகாபாரதக் கதை

யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்ய செய்தான் இந்திரன்.

யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும் போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து உங்களை பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால் தான் உதவ முடியும். இவ்வனத்தில் என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் அக்னி தேவனே ஏன் இந்த வேடம் நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று சொன்னதும் தன் வேடத்தை கலைத்த அக்னி தேவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை சுவேதசி என்ற மன்னனுக்காக நுாறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும் என்றார். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன் என்றார். ஆகவே நான் எரிக்கும் போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்டார்

இதைக்கேட்ட அர்ஜுனன் அக்னி தேவனே நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு அம்பறாத் துாணியும் அம்புகளும் வில்லும் தேவை என்றான். உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில் அம்புகள் மற்றும் அம்பறாத் துாணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம் உன் பசி பிணியை தீர்த்து கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணர். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன் அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்த வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டார். அடுத்த வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடமும் விடைபெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது புராணம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.