உண்மையான பக்தி

தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார். என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர்.

தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா என்று கேட்டார் கிருஷ்ணர். உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம் என்றாள் பிங்கலை. பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. தாயே கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே கத்திகள் யாருடையவை என்று கிருஷ்ணர் கேட்டார். என்னுடையவைதான் வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகள் மூவரைக் கொல்ல வேண்டும் அதற்காக மூன்று கத்திகள் வைத்திருக்கின்றேன் என்றாள். யார் அந்த விரோதிகள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன், திரௌபதி, அர்ஜூனன் இந்த மூவரும் என்றாள். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல இந்தப் பெரிய கத்தி என்றாள். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கிருஷ்ணருக்குக் கொடுக்கலாமா என் கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கிருஷ்ணரின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுத்தான். ஆகவே அவனுக்கு சிறிய கத்தி என்றாள்.

திரௌபதி எப்படி உங்கள் விரோதியானாள் என்று கேட்டார் கிருஷ்ணர். அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால் புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும் கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரோபதியை சும்மா விடுவேனா அவளுக்கு நடுத்தர அளவுள்ள கத்தி என்றாள்.

அர்ஜூனன் கிருஷ்ணரின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே அவன் மேல் ஏன் விரோதம் என்று கேட்டார் கிருஷ்ணர். அர்ஜூனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா. குதிரைகளின் கயிற்றை இழுத்து இழுத்துக் கிருஷ்ணர் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும் தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாதாரண வேலை இல்லை. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம் என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ஜூனன். அன்று அவனை பார்த்துக் கொள்கிறேன் அவனுக்கு பெரிய கத்தி என்றாள்.

அர்ஜூனன் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தார் கிருஷ்ணர். குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால் திரௌபதியையும் மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள்.

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள் பிங்கலை. சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றான் கிருஷ்ணர். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிருஷ்ணர் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னார் அர்ஜூனன் கிருஷ்ணர் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான் அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவானே. கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா என்று கேட்டார் கிருஷ்ணர். நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கிருஷ்ணர் உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன் மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

One thought on “உண்மையான பக்தி

  1. Ragapraba Reply

    Fantastic informations from Mahabharata. All these are most informatic. Thankyou very much.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.