மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப்பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் மூன்று வருடங்களாக தொடர்ந்து பதினைந்து வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்திருந்தது.
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் ஒரு மகாபேரி என்ற மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை அறிந்த ஒரு முதிய பிராமணர் சிறிது பொருள் வேண்டி தலைநகரை நோக்கிச் சென்றார். நீண்ட தூரம் பயணித்த அவர் யுதிஷ்டிரனின் அரண்மனையை இரவில் அடைந்தார். மிகுந்த ஆவலுடன் மேளத்தை அடிக்க ஆரம்பித்தார் பிராமணர். உறக்கம் கலைந்த யுதிஷ்டிரன் படுக்கையில் இருந்து எழுந்து யாரோ தனது தேவைக்காக தன்னை அழைப்பதை உணர்ந்தார். மேளம் அடிப்பது எதற்காக என்று விசாரிக்க சில காவலர்களை அனுப்பினார். விரைவில் காவலர்கள் யுதிஷ்டிரரிடம் திரும்பி ஒரு முதியவர் தனிப்பட்ட தேவைக்காக செல்வத்தைப் பெற வந்திருப்பதாக கூறினார்கள். யுதிஷ்டிரர் அதிக தூக்கத்தில் இருந்ததால் நடுஇரவு ஆகி விட்டபடியால் காலையில் அவரது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று பிராமணரிடம் உறுதியளித்து காலையில் வரச் சொல்லி பிராமணரை திருப்பி அனுப்புமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
யுதிஷ்டிரரின் செய்தியைக் கேட்ட பிராமணர் ஏமாற்றமடைந்து பீமனின் அரண்மனை முன்பாக இருந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். பீமன் உடனே வெளியே வந்து அந்த முதிய பிராமணருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யுதிஷ்டிரரின் அரண்மனை முன்பாக நடந்தவற்றை சொல்லி தனது கோரிக்கையை முன்வைத்தார் பிராமணர். அவருடைய கோரிக்கையைக் கேட்ட பீமன் தற்போது இரவு வெகு நேரமாகி விட்டது. இப்போது கருவூலம் திறந்திருக்காது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற காலை வரை காத்திருக்க முடியாது. எனவே இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது விலையுயர்ந்த தங்க காப்பை கழற்றி பிராமணரிடம் ஒப்படைத்தார். விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அந்தத் தங்கக் காப்பைக் கண்ட பிராமணன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
பீமசேனன் யுதிஷ்டிரனின் அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கு சென்றதும் இடைவிடாமல் மகாபேரி மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். விண்ணை முட்டும் அளவு சத்தத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து உடனடியாக மேளம் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு பீமன் மேளத்தை அடிப்பதை பார்த்ததும் ஆச்சரியமடைந்து பீமனிடம் காரணத்தை கேட்டார். ஒரு முதிய பிராமணர் தங்களிடம் உதவி நாடி வந்தார். நாளை காலை திரும்பி வரும்படி கூறினீர்கள். அடுத்த நாள் உயிருடன் இருப்போம் என்று அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். தன் தர்மத்தையே ஒரு நாள் தள்ளிப் போட்டீர்கள். அப்படியானால் நீங்கள் நாளை வரை இருப்பீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஞானத்தை பெற்று விட்டீர்கள் என்று பொருளாகிறது. என் அண்ணன் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஞானியாக இருக்கிறாரே என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். அதனால் நான் இந்த மேளத்தை அடிக்கிறேன் என்றான். காரணத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் குற்ற உணர்வில் ஆழ்ந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பதை உணர்ந்தார். பீமனை தழுவிக் கொண்டு நன்றி தெரிவித்ததோடு தர்ம காரியத்தைத் தள்ளிப் போடும் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றார். பீமன் தன் சகோதரனை ஆறுதல்படுத்தி எனது நோக்கம் உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தர்மம் செய்யும் போது ஒருபோதும் தாமதம் இருக்கக் கூடாது என்பதற்காக இதனை செய்தேன் என்று புன்னகை செய்தான். பீமனின் உபதேசத்தால் விழித்துக் கொண்ட யுதிஷ்டிரர் அன்றிலிருந்து தர்மப் பாதையிலிருந்து விலகாமல் இருந்து தர்மராஜா ஆனார்.