பரதன் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தன் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலேயே கைகேயி பதில் சொன்னாள். ராமனும் லட்சுமணனும் சீதையும் திரும்பி வருவதை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள். எனக்கு அந்த கொடுப்பனை இல்லை என்று ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் இரவு நேரத்தில் தூக்கத்திலேயே இறந்து விட்டார். யாருக்கும் கடைசி காலத்தில் எதுவும் சொல்லவில்லை என்றாள். பரதன் பதறினான் பரதனின் துக்கம் இருமடங்கானது. தந்தையின் இறுதி காலத்தில் அண்ணன் இல்லையா எங்கே சென்று விட்டார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று பதற்றத்துடன் கேட்டான். பரதனை சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தாள் கைகேயி.
ராமனும் லட்சுமணன் சீதை மூவரும் உன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தவம் செய்யும் பொருட்டு வனத்திற்கு பதினான்கு ஆண்டுகள் சென்றுவிட்டார்கள். பரதன் மேலும் பதற்றமடைந்தான். என்ன தவறு செய்தார் அண்ணன். நிரபராதிகள் யாருக்கும் தண்டனை கொடுத்துவிட்டாரா? பிராமணர்கள் சொத்துகள் ஏதேனும் அபகரித்துவிட்டாரா? அண்ணன் சத்தியத்தை கடைபிடிப்பவர் அவர் தவறு செய்திருக்க மாட்டார். எதற்கான வனவாசம் போகவேண்டும். வேறு யாரோ தவறு செய்திருக்கிறார்கள் ஏதோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த அக்கிரம காரியத்தை செய்ய வைத்தது யார்? என்ன நடந்தது சொல்லுங்கள் என்று பதறினான்.
அதற்கு கைகேயி ராமர் எந்த தவறும் செய்யவில்லை. உன் தந்தை ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்க முடிவு செய்தார். அதற்கான செயலிலும் விரைவாக ஈடுபட்டார். வசிஷ்டரிடம் ஆலோசனை செய்து பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். உன்னுடைய நலனை கருத்தில் கொண்டு உன்னை அரசனாக்க முடிவு செய்தேன். உன் தந்தை பல காலங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் அளித்திருந்தார். அந்த வரத்தை இப்போது நான் கேட்டு பெற்றுக்கொண்டேன். ஒரு வரத்தின்படி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய நிர்ணயித்த தினத்தன்று உனக்கு பட்டாபிஷேகம் செய்து உன்னை அரசனாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனால் உனக்கு ராமரினால் பாதிப்பு ஏதும் வந்து விடக்கூடாது என்று எண்ணி நாடு கடத்தும் முயற்சியாக இரண்டாவது வரமாக ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இரண்டாவது சத்தியத்தை உனது தந்தை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். அதனை அறிந்த ராமர் தந்தை கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வனம் செல்ல முடிவு செய்தான். ராமரை தொடர்ந்து சீதையும் லட்சுமணனும் வனத்துக்கு சென்றுவிட்டார்கள்.
இவை அனைத்தையும் உனக்காகவே செய்தேன் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து செயலபடு. துக்கப்படாதே மனதை நிலையாக வைத்துக்கொள். நீ சத்திரிய வீரன். தந்தை கையினால் ராஜ்யத்தை பெற்ற அரசகுமாரன் நீ. இந்த நாடும் ராஜ்யமும் இப்போது உன்னுடையது. வசிஷ்டரின் ஆலோசனை பெற்று உன் தந்தையின் இறுதி காரியத்தை செய்து முடித்துவிட்டு பட்டாபிஷேகம் செய்துகொண்டு அரச பதவியை பெற்று சுகங்களை அனுபவிப்பாய் என்றாள்.