பஞ்சவடியின் அழகைக் கண்ட மூவரும் மெய்சிலிர்த்தார்கள். ராமர் லட்சுமணனிடம் தங்குவதற்கு சரியான இடத்தில் குடிலை அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படியே லட்சுமணனும் குடிலைக் கட்டுவதற்கு சிறப்பான இடத்தை தேர்வு செய்து குடில் அமைப்பதற்குத் தேவையான பொருட்களைக் காட்டிற்குள் தேடி எடுத்து வந்து குடிலைக் கட்டி முடித்தான். குடிலின் அழகைப் பார்த்த ராமர் இவ்வளவு அழகான குடிலை அமைத்த நீ எனக்கு நமது தந்தையைப் போல தெரிகிறாய் என்று கூறி ஆனந்தக் கண்ணீருடன் லட்சுமணனைக் கட்டி அனைத்தார்.
பஞ்சவடியில் சில காலம் சென்ற பிறகு பனிக்காலம் ஆரம்பித்தது. மூவரும் நதிக்கரையை நோக்கிச் சூரிய நமஸ்காரம் செய்வதற்கும் தண்ணீர் எடுத்து வருவதற்கும் சென்றார்கள். அப்போது ராமருக்கு பரதனைப் பற்றிய நினைவு வந்தது. ராமர் லட்சுமணனிடம் நாம் இந்தக் காட்டில் குளிரில் வாழ்வது போலவே பரதனும் அனுபவிக்க வேண்டிய சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு நம்மைப் போலவே தரையில் உறங்கி விரத வாழ்க்கையை வாழ்கின்றான் என்று கூறினார். அதைக் கேட்ட லட்சுமணன் ராமரிடம் பரதனின் குணங்களைப் பார்த்தால் நமது தந்தையாரின் குணங்களைப் போலவே இருக்கின்றது. மக்கள் தாயைப் போலவே மகன் இருப்பான் என்று சொல்வார்கள் ஆனால் பரதன் விஷயத்தில் தவறாக இருக்கின்றது. குரூரம் குணம் கொண்ட கைகேயிக்கு பரதன் எப்படிப் பிறந்தான் என்று கூறி வியந்தான். ராமர் லட்சுமணனிடம் கைகேயியைப் பற்றி குறை கூற வேண்டாம். பரதனைப் பற்றி நீ கூறிய அனைத்தும் உண்மையே எனக்கு பரதனின் ஞாபகமாகவே இருக்கிறது அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. எப்போது நாம் நால்வரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம் என்று காத்திருக்கிறேன். நாம் நால்வரும் ஏற்கனவே ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியதில் பரதனின் அமிர்தம் போன்ற பேச்சு இன்னமும் என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.
நதிக்கரையில் பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்துவிட்டு தெய்வீக ஒளிவீச மூவரும் குடிலுக்குத் திரும்பி வந்தார்கள். குடிலில் மூவரும் இதிகாச கதைகளைச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராமரின் முகம் பூரண சந்திரனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்த நேரத்தில் ராட்சசப் பெண் ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். தேவர்களைப் போன்ற அழகுடன் ஒருவர் இருக்கிறாரே என்று வியந்து ராமரின் மேல் மோகம் கொண்டு பேச ஆரம்பித்தாள். தவசிகளைப் போல உடை தரித்துக் கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு வில்லும் அம்புமாக ராட்சசர்கள் வாழும் காட்டிற்குள் நீ எதற்காக வந்திருக்கிறாய்? யார் நீ? உண்மையைச் சொல் என்று கூறினாள். தசரத மகாராஜாவின் மூத்த குமாரன் நான். என்னை ராமன் என்று அழைப்பார்கள். அருகில் இருப்பது என் தம்பி லட்சுமணன். எனது மனைவியின் பெயர் சீதை. என் தாய் தந்தையரின் உத்தரவின் படி தர்மத்தைக் காப்பாற்ற இந்தக் காட்டில் வனவாசம் செய்ய வந்திருக்கின்றேன் என்று கூறினார்.