ராமரிடம் கடலரசன் தொடர்ந்து பேசினான். எனது இயற்கை தன்மை மாறாமல் தாங்கள் உங்கள் வானர படையுடன் இந்த கடலை தாண்டிச் செல்ல ஓர் வழியை உங்களிடம் சொல்கிறேன். அதன் படி செயல்பட்டு நீங்கள் இந்த கடலை தாண்டிச் செல்லலாம். வானரங்களை வைத்து இலங்கை வரைக்கும் கற்பாறைகளையும் மரங்களையும் வைத்து ஒரு பாலம் கட்டுங்கள். அதனை அலைகள் தாக்கி அழிக்காமலும் நீரில் மிதக்கும் படியும் பார்த்துக் கொள்கிறேன். இந்த வானரப்படைகள் கடலை தாண்டிச் செல்லும் வரை பெரிய மீன்கள் முதலைகள் யாரையும் தாக்காமல் பார்த்துக் கொள்கிறேன். எனது தர்மத்தை மீறாமல் இந்த உதவியை மட்டும் செய்கிறேன். தங்களின் வானர படைகளில் நளன் இருக்கிறான். தேவலோக விசுவகர்மாவின் மகனாக அவனிடம் பாலம் கட்டும் பணிகளை ஒப்படையுங்கள் அவன் இந்த அணையை திறமையுடன் கட்டி முடிப்பான் என்று சொல்லி கடலரசன் ராமரை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
ராமர் உடனடியாக நளனை வரவழைத்து பாலம் கட்டும் பணியை ஒப்படைத்தார். வானர வீரர்கள் காடுகளில் சென்று ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிய்த்து எடுத்து வந்து நளன் சொல்லியபடி கடலுக்குள் போட்டார்கள். மரங்கள் கடலில் மிதந்தது. மரங்களின் மேல் பெரிய பாறைகளை அடுக்கி வைத்து பாதை அமைத்தார்கள். அனுமன் அனைத்து பாறைகளிலும் ஸ்ரீ ராம் என்று எழுதினார். பாலம் கட்டும் வேலையினால் எழுந்த பெரிய சத்தம் கடலின் ஓசையை விட பெரியதாக இருந்தது. முதல் நாளில் பதினான்கு யோசனை தூரமும் 2 வது நாளில் இருபது யோசனை தூரமும் 3 வது நாளில் இருபத்தியோரு யோசனை தூரமும் நான்காவது நாளில் இருபத்தியிரண்டு யோசனை தூரமும் ஐந்தாவது நாளில் மீதியுள்ள தூரத்திலும் பாலத்தை கட்டி முடித்து இலங்கை கடலின் கரை வரை பாலத்தை கட்டி முடித்தார்கள். இலங்கை கடற்கரை வரை பாலம் கட்டும் பணி ஐந்து நாட்களில் முடிந்தது. இலங்கையில் உள்ள கடற்கரையில் ராவணனின் ராட்சச வீரர்கள் யாரும் பாலத்தை தகர்த்து சண்டைக்கு வரதாபடி விபீஷணன் தன்னுடன் உள்ள வீரர்களுடன் ஆயுதத்துடன் அனைவருக்கும் பாதுகாப்பாக நின்றான். தேவர்கள் கந்தர்வர்கள் முனிவர்கள் கடலில் கட்டப்பட்ட பாலத்தை கண்டு வியந்தார்கள்.
ராமரிடம் வந்த சுக்ரீவன் பாலம் கட்டப்பட்டு விட்டது. இங்கிருந்து தாங்கள் இலங்கையில் இருக்கும் அக்கரை வரை நடந்து சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் அனுமன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். லட்சுமணன் அங்கதன் மீது அமர்ந்து கொள்ளட்டும். விரைவாக நாம் இலங்கை சென்று விடலாம் என்று ராமரிடம் சுக்ரீவன் கூறினான். ராமரும் லட்சுமணனும் முன்னே செல்ல பின்னால் வானரப் படைகளும் ஜம்பவான் தலைமையில் கரடிப் படைகளும் சென்றது. வானரங்கள் கூச்சலிட்டுக் கொண்டே சிலர் ஆகாயத்தில் தாவியும் சிலர் நீரில் நீந்தியும் சிலர் கருடனைப் போல் பறந்தும் ராமரின் பின்னே பாலத்தை கடந்தார்கள். வானரப்படைகள் எழுப்பிய சத்தம் கடலில் இடி முழக்கம் போல் எதிரொலித்தது. அனைவரும் இலங்கை கடற்கரையை அடைந்தார்கள். ராமர் லட்சுமணனிடம் வந்திருக்கும் அனைவருக்கும் உணவு நீர் கிடைக்கும் காடுகளாக பார்த்து தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடு என்றார். விபீஷணன் உதவியுடன் இலங்கையில் உணவு நீர் இருக்கும் காடுகளாக பார்த்து வானப்படைகள் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டார்கள். ராமரிடம் வந்த தேவர்களும் முனிவர்களும் உங்கள் எதிரியான ராட்சசர்களை வென்று இந்த மண்ணுலத்தில் பல்லாண்டு வாழ்ந்து தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கிச் சென்றார்கள்.