ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 14

ராமர் இலங்கைக்குள் பெரும் படையுடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்த ராவணனின் தாய் வழி சொந்தமான மால்யவான் என்னும் வயதான ராட்சசன் ராவணனிடம் சென்று உன்னுடைய நல்ல காலம் முடிந்து விட்டது. நீ செய்து வந்த பாவ காரியங்களினால் உன்னுடைய வலிமை குறைந்து போயிற்று. நீ தவமிருந்து பெற்ற வரங்களை இனி நம்பிக்கொண்டு இருக்காதே. உனது தீய செயல்களினால் உன்னுடைய தவ பயன்கள் அனைத்தும் குறைந்து உன்னை விட்டு சென்று விட்டது. இப்போது அவைகள் உனக்கு பயன் தராது. இலங்கைக்கு வந்திருக்கும் சேனைகளை பார். மனிதர்களுடன் வானரங்களும் பயங்கரமான கரடிகளும் வந்திருக்கிறது. அவர்கள் கட்டிய பாலத்தின் வலிமையையும் அதன் அற்புதத்தையும் பார். மகாவிஷ்ணுவே மனித உருவத்தில் வந்து விட்டார் என்று நான் எண்ணுகிறேன் ராமருடன் சமாதானம் செய்து கொள் என்று மால்யவன் ராவணனிடம் கூறினார். அதற்கு ராவணன் நீங்கள் சொல்லும் சொற்கள் எனக்கு மிகவும் கொடூரமான வார்த்தைகளாக கேட்கிறது. விபீஷணன் போல் நீங்களும் எதிரிகளோடு சேர்ந்து ராட்சச குலத்திற்கு எதிரிகளாகி விட்டீர்கள் என்று எண்ணுகிறேன். ராட்சச குலத்தை எதிர்க்க மனித குலத்திற்கு வலிமை இல்லை. தகப்பனால் காட்டுக்குத் துரத்தப்பட்ட மானிடன் ஒருவனை கண்டு அனைவரும் பயப்படுகிறீர்கள். குரங்குகளையும் கரடிகளை நம்பி ஒரு மனிதன் வந்திருக்கின்றான். அவர்களை கண்டு நீங்கள் பயப்படுகின்றீர்கள். ராட்சச குலத்தில் பிறந்து இத்தனை பயத்தை வைத்திருக்கும் உங்களை பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கின்றது. என் மேல் உங்களுக்கு ஏதேனும் பொறாமையாக இருக்கிறதா ஏன் இப்படி பேசுகிறீர்கள். நான் ராமனை வணங்க முடியாது. என்னுடைய சுபாவத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. ராமரிடம் யுத்தம் செய்து இறந்து போனாலும் போவேன். ஆனால் ராமனிடம் சமாதானமாக போக மாட்டேன் என்று ராவணன் சொல்லி முடித்தான். அதற்கு மால்யவான் யோசித்து செய்ய வேண்டியதை செய்து கொள் என்று சொல்லி விட்டு வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பினார்.

ராமர் பெரிய படையுடன் வந்திருப்பதினால் தனது கோட்டைக்கு ராவணன் பெரிய அரண் அமைக்க தனது சபையை கூட்டி ஆலோசனை செய்தான். யுத்தம் ஆரம்பிக்கும் நிலையில் இருப்பதால் உலகத்தில் இருக்கும் அனைத்து ராட்சச வீரர்களும் உடனே இலங்கைக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டான். இரண்டு ஒற்றர்களை வரவழைத்த ராவணன் ராமன் தலைமையில் வந்திருப்பவர்கள் எவ்வாறு பாலத்தை கட்டினார்கள். அவர்கள் படைகளின் எண்ணிக்கை அவர்களிடம் உள்ள ஆயுதங்களின் பலம் அவர்களின் வலிமை பற்றியும் அவர்களில் ஒருவராக உருவம் மாறி சென்று அவர்களுடன் கலந்து அனைத்தையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். இலங்கையின் கிழக்கு பக்கத்திற்கு பிரஹஸ்தனையும் தெற்கு பக்கத்திற்கு மகாபாரிசுவன் மகோதரன் இருவரையும் மேற்கு பக்கத்திற்கு தனது மகன் இந்திரஜூத்தையும் அவர்களின் படைகளுடன் காவலுக்கு செல்லுங்கள் என்று உத்தரவிட்ட ராவணன் தான் வடக்கு பக்கத்திற்கு தானே காவல் இருப்பதாக கூறி தனது படைகளை உடனே வரவேண்டும் என்று உத்தரவிட்டான். அனைத்து காரியங்களையும் சரியாக செய்து விட்டோம் இனி யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் ராவணன். அனைவரும் ராவணன் வாழ்க இலங்கை வெல்க என்று கூக்குரலிட்டு ராவணனை சந்தோசப்படுத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

ராமரிடம் வந்த விபீஷணன் இலங்கையிலிருந்து வந்த தன்னுடைய ஒற்றர்கள் ராவணன் செய்த செயல்களையும் படை பலத்தையும் பற்றி தெரிந்து கொண்டு வந்த செய்தியை கூறினான். தேவலோகத்தில் குபேரனை ராவணன் எதிர்க்க சென்ற போது இருந்த படைகளை விட இப்போது இருக்கும் படைகள் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனாலும் வெற்றி நமக்கே என்றான் விபீஷணன். ராமரும் சுக்ரீவனும் வீபீஷணனும் யுத்தம் செய்வதை பற்றி கலந்து ஆலோசனை செய்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.