ராம லட்சுமணர்கள் இந்திரஜித்தால் அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை முழுவதும் பரப்ப ராவணன் உத்தரவிட்டான். ஒரு ராட்சசியை அழைத்து ராமர் லட்சுமணர் இருவரும் அவர்களுடைய வானர சேனைகளும் யுத்த பூமியில் இறந்து கிடக்கிறார்கள் என்ற செய்தியை சீதையிடம் போய் சொல்லுங்கள். அவளை எனது பறக்கும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்று ராமர் லட்சுமணர்கள் இறந்து கிடப்பதை காண்பியுங்கள். இனி ராவணனைத் தவிர வேறு வேறு யாரும் சீதைக்கு ஆதரவு இல்லை என்று அவளுக்கு புரிய வையுங்கள் என்று சொல்லி அனுப்பினான். ராட்சசிகளும் ராவணன் கட்டளை இட்டபடி சீதையை ராமர் இருக்கும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றார்கள். தரையில் அசைவற்று இருக்கும் ராமர் லட்சுமணனை பார்த்த சீதை ஒரு கணம் திடுக்கிட்டாள். ராவணன் மாயத்தின் மூலமாக வஞ்சகமாக நம்மை ஏமாற்ற பார்க்கிறானா என்ற சந்தேகம் சீதைக்கு எழுந்தது. ராமர் அருகில் அவருடைய வில்லும் அம்பும் இருப்பதை பார்த்த சீதை காண்பது உண்மை தான் என்று நம்ப ஆரம்பித்தாள். பிற்காலத்தை பற்றி அறிந்து கொள்பவர்கள் தன்னுடைய வருங்காலத்தை பற்றி சொல்லியது அனைத்தும் பொய்யா? கணவர் இறந்து போவார் சிறு வயதில் விதவையாவாய் என்று யாரும் சொல்லவில்லையே. நீண்ட காலம் மகாராணியாய் வாழ்வாய் என்றும் உனக்கு குழந்தைகள் பிறக்கும் என்று அவர்கள் சொல்லியது அனைத்தும் பொய்யாகப் போனதே. உங்களது அஸ்திர வித்தைகள் எல்லாம் எங்கே போனது. உங்களை யாரும் வெல்ல முடியாது என்றார்களே அதுவும் பொய்யாகிப் போனதே. இனி நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இப்போதே எனது உயிரை விட்டு விடப்போகிறேன் என்று சீதை கண்ணீருடன் அழுது புழம்பினாள். அருகில் இருந்த திரிசடை என்ற ராட்சசி சீதையிடம் பேச ஆரம்பித்தாள்.
ராமர் லட்சுமணன் முகத்தை நன்றாக பாருங்கள் அவர்கள் இறக்கவில்லை. அவர்களின் முகத்தில் தெய்வீக பொலிவு அப்படியே இருக்கிறது. இறந்திருந்தால் அவர்களின் முகம் வேறு மாதிரி இருக்கும். அவர்கள் மாய அஸ்திரத்தின் வலிமையால் மயக்கத்தில் இருக்கிறார்கள். விரைவில் எழுந்து விடுவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் வானர வீரர்களை பாருங்கள் யாரும் பயந்து ஓடவில்லை. ராமர் விரைவில் எழுந்து விடுவார் என்று அவரை சுற்றி தைரியத்துடன் இருக்கிறார்கள் என்றாள். ராட்சசியின் இந்த வார்த்தைகள் சீதையின் காதுகளில் அமிர்தம் பாய்வது போல் இருந்தது. மீண்டும் தனது தைரியத்தை பெற்று அமைதியானாள். உடனே ராட்சசிகள் மீண்டும் சீதையை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ராமரை நினைத்த படி இருந்த சீதை ராவணன் அழிவான். விரைவில் ராமர் வந்து தன்னை மீட்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.
ராமரின் உடல் நாக பாணத்தினால் தைக்கப்பட்டு காயங்கள் பலமாக இருந்தாலும் தனது ஆத்ம பலத்தாலும் தனது சக்தியாலும் கண் விழித்த ராமர் அருகில் இருந்த லட்சுமணனை பார்த்து அலறினார். உன்னை இழந்த நான் இனி எப்படி வாழ்வேன். நான் வாழ்ந்து என்ன பயன்? என்னுடன் காட்டிற்கு வருவேன் என்று வந்து எனக்கு பல சேவைகள் செய்து இப்போது எனக்காக உனது உயிரையும் கொடுத்து விட்டாயே. உன்னைப் போன்ற வீரர்களை இனி பார்க்க முடியாது. நான் இனி எப்படி அயோத்திக்கு செல்வேன். அன்னை கோசலை சுமித்திரை கைகேயிக்கு என்ன பதில் சொல்வேன் என்று கதறினார். அருகில் இருந்த சுக்ரீவனிடத்தில் ராமர் பேச ஆரம்பித்தார். இலங்கையின் அரசனாவாய் என்று விபீஷணனுக்கு நான் கொடுத்த உறுதி மொழி பொய்யானது. நீங்கள் எனக்கு கொடுத்த உறுதிமொழியின் படி இத்தனை நாட்கள் என்னுடன் இருந்து சத்தியத்தை காப்பாற்றினீர்கள். என்னால் பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். இனி எனக்காக யாரும் உயிரை விடவேண்டாம். உங்கள் படைகளை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் இங்கேயே எனது உயிரை விட்டு விடுகிறேன் என்று தனது தைரியத்தை இழந்த ராமர் கவலையுடன் கூறினார்.