ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 39

ராமரிடம் வந்த விபீஷணன் கலங்காதீர்கள் நடந்தவற்றை இப்போது தான் அறிந்து உடனடியாக இங்கு வந்தேன். ராவணன் சீதைக்கு விதித்த ஒரு வருடம் முடிய இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அது வரை சீதையை கொல்ல யாரையும் ராவணன் அனுமதிக்க மாட்டான். நீங்கள் கண்டது அனைத்தும் உண்மை இல்லை. சீதை போன்ற ஒரு உருவத்தை இந்திரஜித் மாயத்தால் உருவாக்கி உங்களை குழப்பியிருக்கிறான். மயக்கத்தில் இருக்கும் லட்சுமணனும் சிறிது நேரத்தில் எழுந்து விடுவான். எதற்கும் கலங்காத தாங்கள் இப்போது உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தை விட்டு மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நம்மால் யோசித்து செயல்பட முடியும் என்றான்.

ராமர் விபீஷணனிடம் சீதையை நான் எனது கண்களால் கண்டேன். எனது கண் முன்னே இந்திரஜித் சீதையை கொன்றான் என்றார். அதற்கு விபீஷணன் நிகும்பலை என்ற இடத்தில் ஒரு குகைக்குள் இந்திரஜித் பெரிய வேள்வி ஒன்றை செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்று என்னுடைய ஒற்றர்கள் தெரிவித்தார்கள். இந்த வேள்வியை இந்திரஜித் செய்து முடித்து விட்டால் அவன் மிகவும் வலிமை பெற்று பல வரங்களையும் பெற்று விடுவான். அதன் பிறகு அவனை நம்மால் எளிதில் வெற்றி பெற முடியாது. அந்த வேள்வியை நாம் தடுத்து நிறுத்தி விடுவோம் என்று பயந்து நம்மை திசை திருப்பவே இந்திரஜித் சீதை போல் ஒரு உருவத்தை மாயமாக செய்து நாடகமாடி இருக்கிறான். இந்த வேள்வியை தடுக்கும் முயற்சியை நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டும். நிகும்பலையில் இந்திரஜித் வேள்வி செய்யும் குகையை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறான். ஆனால் அவன் வேள்வி செய்யும் குகை எனக்கு தெரியும். லட்சுமணனையும் அனுமனையும் இப்போது அங்கு அனுப்பி வையுங்கள். இந்திரஜித்தை லட்சுமணன் எதிர்த்து வெற்றி பெறுவான். இந்திரஜித்துக்கு காவலாக இருக்கும் ராட்சசர்களை அனுமன் எதிர்த்து வெற்றி பெறுவார். அதன் பிறகு இலங்கைக்குள் ராவணன் மட்டுமே இருப்பான். அவனையும் அழித்து விட்டால் சீதையை நீங்கள் அடைந்து விடலாம் என்று சொல்லி முடித்தான் விபீஷணன். சுக்ரீவன் லட்சுமணனுக்கு மூலிகை வைத்தியம் செய்து விழிக்கச் செய்தான். விழித்த லட்சுமணன் விபீஷணன் கூறிய அனைத்தையும் ராமரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான். இந்திரஜித்தை எதிர்த்து யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராமரிடம் கேட்டுக் கொண்டான்.

ராமர் விபீஷணனின் பேச்சில் உண்மை இருப்பதை அறிந்து தெளிவடைந்தார். உடனடியாக லட்சுமணனுக்கு அனுமதி கொடுத்து அவனுடன் அனுமனையும் சில வானர படைகளையும் அனுப்பி வைத்தார். அனைவரும் இந்திரஜித் வேள்வி செய்த குகைக்கு அருகே சென்று சேர்ந்தனர். குகைக்கு வெளியே காவல் காத்த ராட்சசர்களுக்கும் வானர வீரர்களுக்கும் யுத்தம் நடந்தது. லட்சுமணனும் அனுமனும் வானர வீரர்களை கொன்று குவித்தார்கள். லட்சுமணனும் வானர வீரர்களும் ராட்சசர்களை கொன்று குவிப்பதை சில ராட்சசர்கள் இந்திரஜித்திடம் சென்று கூறினார்கள். இதனால் கோபம் கொண்ட இந்திரஜித் வேள்வியை தொடர்ந்து செய்யாமல் பாதியிலேயே விட்டு விட்டு அவர்களுடன் யுத்தம் செய்வதற்காக குகையை விட்டு வெளியே வந்தான். லட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சரிசமமாக யுத்தம் செய்து தங்கள் வலிமையை காண்பித்தார்கள். இறுதியில் லட்சுமணன் இந்திராஸ்திரத்தை எடுத்து ராமர் தர்மத்தை கடைபிடிப்பது உண்மையானால் இந்த அம்பு இந்திரஜித்தை அழிக்கட்டும் என்று சொல்லி அம்பை செலுத்தினான். அம்பு இந்திரஜித்தின் கழுத்தைத் துளைத்து தலையை துண்டாக்கி அவனது உயிரைப் பிரித்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மலர் தூவி லட்சுமணனை பாராட்டினார்கள். இந்திரஜித் கொல்லப்பட்டதும் அங்கிருந்த ராட்சசர்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். லட்சுமணன் காயத்துடன் யுத்தம் செய்த களைப்பில் அனுமன் மீது சாய்ந்து நின்றான். விபீஷணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து லட்சுமணனை பாராட்டினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.