ராமர் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினார். ராவணன் மூன்று உலகங்களையும் தன் வீரத்தினால் வெற்றி பெற்ற மகா பராக்கிரமசாலி. இந்த யுத்தகளத்தில் மரணம் அடையும் இறுதி வினாடி வரை பின்வாங்காமல் வீரனாக நின்று போர் புரிந்திருக்கிறான். யுத்தத்தில் வீர மரணம் அடைந்தவனை பற்றி சத்ரியர்கள் மன வருத்தம் அடைய மாட்டார்கள். இப்போது இதைப் பற்றி வருத்தப்படுவதற்கு சரியான நேரம் இல்லை. இலங்கையின் அரசனாக நீ செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது. அதில் உனது கவனத்தை செலுத்து என்றார். அதற்கு விபீஷணன் ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்வதற்கு தாங்கள் அனுமதி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ராமர் யுத்தத்தில் நாம் விரும்பிய பலனை அடைந்து விட்டோம். பகைமை என்பது ராவணன் உயிரோடு இருந்த வரை மட்டும் தான். இறந்த பிறகு பகைமை மறைந்து விடுகிறது. எனக்கும் ராவணனுக்கும் இப்போது எந்த பகையும் இல்லை. ராவணனுக்கு தம்பியாக இறுதி காரியம் செய்ய வேண்டிய கடமை உனக்கு உள்ளது. நீ எனக்கு சகோதரன் என்றால் ராவணனும் எனக்கு சகோதரன் ஆகிறான். ராவணனுக்கு நல்ல கதி கொடுக்க கூடிய சடங்குகள் எதுவோ அதனை செய்து உனது கடமையை நிறைவேற்றிக் கொள். நானும் உன்னோடு கலந்து கொண்டு செய்வேன் என்று விபீஷணனுக்கு அனுமதி கொடுத்தார்.
ராமர் ராவணனை கொன்றதும் தேவலோகத்தில் இருந்து வந்த இந்திரனின் தேரோட்டி மாதலியை பாராட்டிய ராமர் இவர் மீண்டும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுத்தார். யுத்தத்தை பார்க்க வந்த தேவர்களும் கந்தர்வர்களும் ராமரின் வீரப்பிராதபங்களை பாராட்டிப் பேசியபடி தங்களின் இருப்பிடத்திற்கு சென்றார்கள். இத்தனை காலம் ராவணன் கட்டளைப்படி செயலாற்றி வந்த இந்திரன் தனது தேவலோகத்திற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் யுத்தத்தில் இறந்த வானரங்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெறுவதற்கு வேண்டிய வரத்தை வானரங்களுக்கு கொடுத்தான். இறந்த வானரங்கள் துக்கத்தில் எழுவது போல் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். முனிவர்கள் ராமரை வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ராமர் ராவணனை அழித்து விட்டார் என்ற செய்தி இலங்கை நகரம் முழுவதும் பரவியது. ராவணனின் மனைவி மண்டோதறி யுத்த களத்திற்குள் வந்து ராவணனின் உடலை பார்த்து புலம்ப ஆரம்பித்தாள். ராமர் மானிடர் இல்லை. மகாவிஷ்ணுவின் அவதாரம். யமனே எதிர்ந்து வந்தாலும் இந்த ராமரை வெற்றி கொள்ள முடியாது அவரிடம் பகைமை வேண்டாம் என்று தங்களுக்கு எத்தனையோ முறை சொன்னேனே. தாங்கள் கேட்காமல் இருந்து விட்டீர்களே இப்போது உயிரற்ற உடலாக இருக்கிறீர்களே என்று ராவணனை பார்த்து கதறி அழுதாள். இலங்கை நகரத்திற்குள் இருந்து வந்த ராட்சச மக்கள் கூட்டம் ராவணனின் உடலைப் பார்த்து அசையினாலும் அகங்காரத்தினால் சேர்த்து வைத்த பெயரையும் புகழையும் இழந்து உங்களை நம்பிக்கொண்டு இருந்த பல வலிமையான வீரர்களையும் உறவினர்களையும் இழந்து விட்டு இப்போது உயிரையும் விட்டு விட்டீரே என்று பேசிய படி சென்றார்கள். ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை விபீஷணன் வேத முறைப்படி செய்து முடித்தான்.
ராமரும் லட்சுமணனும் அனுமன் சுக்ரீவன் உட்பட யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள். இலங்கை நகர வாசிகள் முன்னிலையில் ராமர் விபீஷணனுக்கு அங்கேயே இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அனுமனை அழைத்த ராமர் இப்போது இலங்கை நகரத்தின் அரசன் விபீஷணன். இவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அசோக வனத்திற்குள் சென்று சீதையிடம் நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி அவளது செய்தியை பெற்று வா என்று கட்டளையிட்டார். ராமரை வணங்கிச் சென்ற அனுமன் விபீஷணனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அசோக வனத்திற்குள் சென்று சீதையை சந்தித்தார்.